ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 19 ஆகஸ்ட், 2017

வாழு ! வாழு ! வாழு !

ஹே மனிதா !!!!

கொஞ்சம் உலகை
ஒழுங்காய் பார் !
நீ பெரியோன்
என்பதை மறந்து,
சீடனாய் உலகைப் பார் !

இருப்பிடத்தை விட்டு,
இடம் பெயர்த்தாலும்,
புதிய இடத்தில்,
இயலாமையால்
புலம்பாமல்,
உறுதியாய் வாழும்
செடிகளைப் பார் !

கடல் கடந்து,
ஒவ்வொரு வருடமும்,
இடம் பெயர்ந்து,
ஆகாயமார்க்கமாய்
பல நாடுகளுக்குச்
சென்று அங்கு வாழ்ந்து,
மீண்டும் தன் குஞ்சுகளோடு,
தன் பழைய இடம் வரும்
பறவைகளைப் பார் !

தாயிடமிருந்து பிரிந்து,
மண்ணில் புதைத்த,
முட்டைகளிலிருந்து,
முட்டி மோதி வெளிவந்து,
கடற்கரை மணலிலிருந்து,
வெளிவந்து கடலுக்கு,
பயப்படாமல் செல்லும்,
ஆமைக்குஞ்சுகளைப் பார் !

ஆழத்தில் மனிதர்
புதைத்த பிறகும் கூட,
தானே மண்ணைக் கிளறி,
தானே உயர்ந்து,
தானே நிமிர்ந்து,
முளை விடும் விதைகளைப் பார் !

பறவைகளின் எச்சங்களில்,
இருந்து வெளிவந்து,
எங்கோ கட்டடத்தின்
மூலையில் விழுந்து,
ஒரு நாள் மழைத்துளியில்,
ஒய்யாரமாய் வளரும்,
சின்னஞ்சிறிய செடிகளைப் பார் !

புயல் காற்றில்,
சரிந்த பின்னும், மனிதர்
மறந்து போன பின்னும்,
புதிய எழுச்சியோடு,
மீண்டும் வான் நோக்கி,
வளரும் மரங்களின்
கிளைகளைப் பார் !

தழுவிக்கொள்ள,
மேலேற்றிவிட ஒரு
கொம்பு இல்லாத போதும்,
மேலே படர எல்லா
வழிகளிலும் ஆசையாய்
முயற்சிக்கும்,
உடலில் பலமில்லா,
ஊக்கத்தில் குறையில்லா,
கொடிகளைப் பார் !

மனிதர்கள் ஆசையாய்,
நடந்து, கையால் கிள்ளி,
கத்தரிக்கோலால்
வெட்டிய பின்னும்,
மீண்டும், மீண்டும்
முயற்சியோடு
துளிர்க்கும் புல்லைப் பார் !

இப்படி இருந்தால்
எனக்குப் பிடிக்கும்,
என்று மனிதர் தன இஷ்டப்படியெல்லாம்,
வெட்டி, வளைத்தாலும்,
புதியதாய் ஒவ்வொரு
நாளும் வாழும்,
க்ரோட்டன் செடிகளைப் பார் !

செடியிலிருந்துப் பறித்து,
பலர் கை மாறி,
நாரில் தொடுத்த பிறகும்,
வாடும் வரை,
ஆனந்தமாய் வாசம்
வீசும் மல்லிகையைப் பார் !

கண்ட இடங்களில்,
கொண்டவர் போட்டுச்
சென்றாலும், கண்டதை
மிதித்தாலும்,
காலுக்கு நன்மை
செய்யும் செருப்பைப் பார் !

யாருமே கவனிக்கவில்லை
என்றாலும், தினமும்,
துடைத்து அழகாய்,
வைக்கா விட்டாலும்,
தன் கடமையை
இருந்த இடத்தில்
இருந்து செய்யும்,
கடிகாரங்களைப் பார் !

உன்னோடு கூடவே,
நீயே கொண்டாடும்,
நீயே அதிசயிக்கும்,
நீயே தூக்கி எறியப்போகும்,
தினமும் தன்
கடமையிலிருந்து தவறா,
உன் கைப்பேசியைப் பார் !

இன்னும் ஓராயிரம்...
இல்லையில்லை...
இன்னும் பலகோடி...

உன்னைச் சுற்றி...
வாழு...வாழு...வாழு...
நிம்மதியாய் வாழு...
புலம்பாமல் வாழு...
ஆனந்தமாய் வாழு...
அழகாய் வாழு...
முயற்சியோடு வாழு...
புதியதாய் வாழு...
உற்சாகமாய் வாழு...
உனக்காக வாழு...
உறுதியாய் வாழு...
என்று கூவிக்கொண்டே
இருக்கும் இந்தக்
கடவுளின் தூதுவர்களைக்
கண் திறந்து பார் !!!

கடவுளின் தரிசனம் புரியும் !
கடவுளின் கோட்பாடு புரியும் !
கடவுளின் ஆசிர்வாதம் புரியும் !

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP