ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 17 மார்ச், 2017

பாவமன்னிப்பு !

இயற்கை அன்னையே...
மன்னிப்பு கோருகிறோம்...
மழை தா...
நீ கருணையின் உறைவிடமன்றோ...

மரங்கள் நட்டது முன்னோரின் நல்லெண்ணம்...
மரங்களை வெட்டியது
எம் மதியீனம்....
ஆனாலும் இயற்கை அன்னையே...
எம்மை மன்னித்து,
மழை தா !

குளம் வெட்டியது
முன்னோரின் புத்திசாலித்தனம் !
குளத்தைத் தூர்த்தது
எம் சுயநலம் !
ஆனாலும் இயற்கை அன்னையே...
எம்மை மன்னித்து
மழை தா !

ஏரிகள் செய்தது
முன்னோரின் முன்னேற்பாடு !
ஏரிகளைக் அழித்தது
எம் அகம்பாவம் !
ஆனாலும் இயற்கை அன்னையே...
எம்மை மன்னித்து
மழை தா !

ஆறுகளை தெய்வமாய்
மதித்தது முன்னோரின்
தீர்க்கதரிசனம் !
ஆறுகளைக் கெடுத்தது
எம் முட்டாள்தனம் !
ஆனாலும் இயற்கை அன்னையே...
எம்மை மன்னித்து
மழை தா !

விவசாயிகளைக் கொண்டாடியது,
முன்னோரின் நன்றிபெருக்கு !
விவசாயத்தை அவமதித்தது
எம் அறியாமையே !
ஆனாலும் இயற்கை அன்னையே...
எம்மை மன்னித்து
மழை தா !

மண்ணைத் தாயாய் வழிபட்டது
முன்னோரின் பக்குவம் !
மண்ணை மலடாக்க ரசாயணம்
இட்டது எம் பேராசை !
ஆனாலும் இயற்கை அன்னையே...
எம்மை மன்னித்து
மழை தா !

பறவை, மிருகம், பூச்சி,
எல்லாம் தம் இனமாய்
வாழவைத்தது முன்னோரின் சமத்துவம் !
நாங்களே உயர்ந்தவர்கள்,
எமக்கே எல்லாம் என
ஆக்கிரமித்தது எம் ஏகாதிபத்தியம் !
ஆனாலும் இயற்கை அன்னையே...
எம்மை மன்னித்து
மழை தா !

ஆயிரம் காரணம் சொன்னாலும்,
எம் குற்றங்கள் மன்னிக்க முடியாததே...
வினை விதைத்தோம்...
வினையை அனுபவிக்கிறோம்...
ஆயினும் தாயே...
பிள்ளைகள் பிழையைப் பொறுத்து,
வாழ உலகினில் பெய்திடாய் !!!
நாங்களும் மழை நீராட
உடனே அருள் செய் !

இயற்கை அன்னையே !
நின்னை சரணடைந்தோம் !
மழை தருவாய் எனக் காத்திருக்கிறோம் !

உன்னால் தான் வாழ்கிறோம் !
உன்னிடமே பாவம் செய்தோம் !
உன்னிடமே பாவமன்னிப்பு கேட்கிறோம் !

இயற்கை அன்னையெ !
அறியாத பிள்ளைகள் !
அன்பிலாத பிள்ளைகள் !
அக்கறையில்லாத பிள்ளைகள் !
ஆனாலும் கதியில்லாத பிள்ளைகள் !

நீ கைவிட்டால் நாங்கள் அனாதைகளே !
இயற்கை அன்னையே !
கோபம் போதும் !
தண்டனை போதும் !
இதற்கு மேல்
தண்டனை அனுபவிக்க சக்தி எமக்கில்லை !

இயற்கை அன்னையே !
இரங்காய்...
அருளாய்...
விரைவாய்...

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP