ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 30 டிசம்பர், 2016

திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !

தோழியை எல்லே இளங்கிளியே
என்று அன்புடன் எழுப்பியவளே...
திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !


தோழியை இன்னம் உறங்குதியோ
என உரிமையோடு கேட்டவளே,
திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !


சில்லென்று அழைக்காதே என
தோழியின் பதில் கேட்டவளே,
திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !


வருகிறேன் நங்கைகளே எனும்
தோழியின் மொழியை ரசித்தவளே,
திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !


தோழியிடம் உன் கதைகள்
யாவும் நாமறிவோம் என்றவளே,
திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !


உன் வாய் ஜாலம் நன்கறிவோம்
என தோழியைப் பரிகசித்தவளே,
திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !


வல்லவர்கள் நீங்களே என தோழி
கூறியதைப் புரிந்து சிரித்தவளே !
திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !


நானேதான் ஆயிடுக என்ற
தோழியின் மன்னிப்பை ஏற்றவளே,
திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !


முதலில் நீ வெளியில் வா
என தோழியைக் கடிந்தவளே,
திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !


உனக்கென்ன வேறு வேலை
என்று தோழியை சீண்டியவளே,
திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !


எல்லோரும் வந்தாரோ என்றவளின்
குரலின் நாதத்தை ருசித்தவளே,
திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !


வந்தாரை நீ வந்தெண்ணிக்கொள்
என சாதுர்யமாய் உரைத்தவளே,
திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !


வல்லானை கொன்றானை
வகைவகையாய் பாடினவளே,
திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !


மாற்றாரை மாற்றழித்தவனை,
மனதார வாயாறத் துதித்தவளே,
திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !


மாயனை, நேயனை, ஆயனை,
தூயனை, தமிழால் அழைத்தவளே,
திருவாடிப்பூரத்தில் உதித்தவளே !


மதியிலாத எமக்காய்,
விதிவலிதான எமக்காய்,
உதித்த உனக்கே நாம்
துதி பாடுவோம் !


ஆடி அடங்கும் முன்
கூடிடு கண்ணனை எனப்
பாடிப் பரவசப்படுத்தும்,
ஆடிப்பூர நாயகியே,
அடி பணிந்தோம் உன்னையே !

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP