ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 22 டிசம்பர், 2016

திருத்திப் பணி கொள் !

கீசு கீசு என்று
பறவைகளும்,
எங்கும், எப்போதும்
கண்ணனைக் கூப்பிடுவதை
அழகாய் ரசிக்கும்
திருப்பாவை பாடிய செல்வியே !


என்ன சொல்லியும்
எழாதவளை,
பேய்ப்பெண்ணே
என்று தோழமையோடு
உரிமையோடு
பரிகசிக்கும்
திருப்பாவை பாடிய செல்வியே !


ஆய்ச்சிகளின்
அச்சுத்தாலியும்,
காசுமாலையும்,
உரசும் சத்தத்திற்கும்
காது கொடுக்கும்
திருப்பாவை பாடிய செல்வியே !


ஆய்ச்சியரின் கூந்தலில்
கண்ணனின் வாசனயை நுகர்ந்து,
அவர்தம் கூந்தலின்
அழகையும் அனுபவித்து
அதில் திளைக்கும்
திருப்பாவை பாடிய செல்வியே !


ஆய்ச்சியரின் மத்தையும்,
பானையையும்,
தயிரையும், அவர்கள்
கடையும் அழகையும்
அதன் சத்தத்தையும்
அனுபவித்துப் புலம்பும்
திருப்பாவை பாடிய செல்வியே !


நாயகனுக்குப் பிடித்த
பெண் பிள்ளாய்,
நீயே எங்களுக்கும்
நாயகப்பெண் பிள்ளாய்
எனக் கொண்டாடும்
திருப்பாவை பாடிய செல்வியே !


நாராயணன் நாமத்தில்
திளைத்து, அவனின்
மூர்த்திகளில் மனதைக்
கொடுத்து, கேசவனின்
காதலில் மயங்கிப் பாடும்
திருப்பாவை பாடிய செல்வியே !


திருமாலின் திருமுடியில்
பூமாலை சூடி,
திருமாலவனுக்கு
திருப்பாவைப் பாடிய செல்வியே !
திருப் பாவையே...
உன் திருப்பாவையே
எமக்குத் திருவருள் !


திருப்பாவை பாடிய
செல்வியே !
திருமாலின் திருப் பாவையே !
நின் திருப் பாதத்தில்
தருகிறேன் என்னை !
திருத்திப் பணி கொள்,
இத்திருந்தாப் பாவியையும் !

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP