ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 11 அக்டோபர், 2012

தேவ தூதன் ! ! !

ராதேக்ருஷ்ணா



கண் நன்றாகத் தெரிபவர்,
100 ரூபாய் தாளுக்கு 500 ரூபாய்
கவனமில்லாமல் தருகிறோம் !

ஆனால் கண் தெரியாத
மாற்றுத் திறனாளியோ,
தடவிப் பார்த்தே ரூபாய் தாளை
சரியாக அறிகிறார் ! !



நன்றாக நடக்க முடிந்தவர்,
அவசரத்தில் கால் தடுக்கி
விழுந்துகொண்டே இருக்கிறோம் !

ஆனால் இரு காலால் நடக்க இயலாத
மாற்றுத் திறனாளியோ,
நிதானமாய் சரியாகச் செல்கிறார் ! !



அழகாக பேசும் வாயிருந்தும்,
தேவையில்லாத சுடு சொற்களைப்
பேசி அன்பை இழக்கிறோம் !

ஆனால் பேச முடியாத
மாற்றுத் திறனாளியோ,
பேசாமலேயே அன்பை வளர்க்கிறார் ! !



கேட்கும் காதுகள் இரண்டிருந்தும்,
ஒழுங்காகக் கேட்காமல்,
தவறாகவே புரிந்துகொள்கிறோம் !

ஆனால் கேட்கவே இயலாத
மாற்றுத் திறனாளியோ,
உச்சரிப்பைக் கொண்டே,
சரியாக புரிந்துகொள்கிறார் ! !



இரு கையிருந்தும்,
ஆசையோடு உழைக்காமல்,
வெட்டியாய் பொழுது போக்குகிறோம் !

ஆனால் கையில்லாத
மாற்றுத் திறனாளியோ,
நேரத்தை வீணடிக்காமல் உழைக்கிறார் ! !



உடல் ஒழுங்காக இருப்பவர்,
தான் நன்றாக வாழாதிருப்பதற்கு
அடுத்தவரை குறை கூறுகிறார் !

ஆனால் உடலில் ஊனமிருக்கும்
மாற்றுத்திறனாளியோ
விடா முயற்சியோடு வாழ்வை
எதிர்நோக்குகிறார் !



நம் உடலின் விலை
நமக்குத் தெரியவில்லை !

நம் உடல் உறுப்புகளின்
மதிப்பு நமக்குப் புரியவில்லை !

நம் வாழ்வின் அழகை
நாம் ரசிக்கவில்லை !

நம் மனதின் பலத்தை
நாம் உணரவில்லை !



இவையெல்லாம் நமக்கு
சரியாகப் புரியவைப்பதற்காக,
க்ருஷ்ணன் பூமிக்கு விசேஷமாய்
அனுப்பின " தேவ தூதர்களே "
மாற்றுத் திறனாளிகள் . . .


என்னைப் பொறுத்தவரை
ஒவ்வொரு மாற்றுத் திறனாளியும்
" தேவ தூதன் " தான் ! ! !


ஹே மனிதா . . .
தேவ தூதர்களைப் பார் . . .


தற்கொலைக்கு முயலாமல்
நம்பிக்கையோடு போராடும்
தேவ தூதர்களைப் பார் ! ! !


வாழ்வை சுமையாய் எண்ணாமல்,
வரமாய் ஏற்று, விடாமல் உழைக்கும்
தேவ தூதர்களைப் பார் ! ! !


யார் மீதும் பழி சொல்லாமல்,
தன் முயற்சியால் வாழ்வை மாற்றும்
தேவ தூதர்களைப் பார் ! ! !


யாரையும் ஏமாற்றாமல்,
யார் மனதையும் நோகடிக்காமல் வாழும்
தேவ தூதர்களைப் பார் ! ! !


தேவ தூதர்களே . . .
உங்களின் நம்பிக்கையை
எங்களுக்கு தாருங்கள் ! ! !


தேவ தூதர்களே . . .
உங்களின் விடாமுயற்சியை
எமக்கு சொல்லித் தாருங்கள் ! ! !


தேவ தூதர்களே . . .
உங்களின் உன்னத அன்பால்
எங்களை வழிநடத்துங்கள் ! ! !


தேவ தூதர்களே . . .
நீங்கள் மாற்றுத் திறனாளிகள் அல்ல . . .
நீங்கள் மாறாத திறனாளிகள் . . .


சூர் தாசர் என்னும்
கண்ணில்லாத தேவ தூதர்,
ப்ருந்தாவனத்தில் ப்ரத்யக்ஷமாய்
ராதிகா ராணியையும், க்ருஷ்ணனையும்
கண்ணாரக் கண்டார் ! ! !


கூர்மதாசர் என்னும்
கையில்லாத, காலில்லாத தேவ தூதர்
தான் இருந்த இடத்திற்கு
பாண்டுரங்கனை பக்தியினால்
வரவழைத்தார் ! ! !


க்ருஷ்ணனுக்கும் இது போல்
தேவ தூதர்களிடம் விசேஷ ப்ரீதியுண்டு !


தேவ தூதர்களுக்கு வந்தனங்கள் !


 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP