ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

பகவன் நாம போதேந்திராள் !

ராதேக்ருஷ்ணா
 
 
 
ராம . . . ராம . . . ராம . . .
 
 
 
"ஆயுதம் தரிப்பவரில்
நான் ராமன்" என்று
போர்களத்தில் முழங்கினான்
கீதாசார்யன் கண்ணன் !
 
 
 
 "ராம" என்பதை தப்பாக
"ம ராம ரா" என்று ஜபித்தே
 கொள்ளைக்காரன் ரத்னாகரனும்
வால்மீகி மஹரிஷியானான் !
 
 
 
மூன்று முறை "ராம"
என்று சொன்னால்
சஹஸ்ர நாமம் சொன்னதற்கு
சமம் என்றார் சிவபெருமான் !
 
 
 
கற்பார் ராம பிரானை அல்லால்
மற்றும் கற்பரோ என்று
ஆச்சரியமாக உலகைக் கேட்டார்
நம் ஸ்வாமி நம்மாழ்வார் ! 
 
 
 
சினத்தினால் தென்னிலங்கை
கோமானைச் செற்ற மனத்துக்கினியானை
பாடவும் நீ  ஏன் வாய் திறவாய்
என்று கேட்டாள் கோதை நாச்சியார் !
 
 
 
 ஒரு முறை "ராம"
என்று சொன்னால்
நன்மையும்,செல்வமும்,
நாளும் நல்கும் என்றான் கம்பன்!



" ஸ்ரீ ராம ஜய ராம ஜய ஜய ராம "
என்று எல்லோரையும் ஜபிக்கச்
சொல்லி பவித்ரமாக்கிக் காட்டினார்
ஸ்வாமி சமர்த்த ராமதாசர் !



நிதி தருவது சுகமா அல்லது
ராம சந்நிதி தருவது சுகமா என்று
தன் மனதைக் கேட்டார்
சத்குரு தியாகராஜ ஸ்வாமிகள் !
 
 
 
ராம ராம என்று விடாமல்
ஜபித்து ஜபித்து மாருதியையும்
வசப்படுத்திக் காட்டினார்
துளசி போல் பாவனமான துளசிதாசர் !
 
 
 
 "ராம" நாமமே கற்கண்டு;
அதை அறியாதவன் மனம் கற்குண்டு
என்று கோபத்தில் வைதனர்
நம் மூதாதையர் !



எத்தனை சொல்லி என்ன பயன் ?



இந்தக் கலியுக ஜனங்கள் என்ன
கேட்டுவிடப்போகிறார்களா ?
இல்லை . . . கேட்டுவிட்டு உடனே
ஜபிக்கத்தான் போகிறார்களா ?


ஜனங்களை ராம நாமம் ஜபிக்க
வைக்கவேண்டுமென்ற ஒரு ஆசை
ஒருகால் ஒரு கோல் சன்னியாசிக்கு
வந்துவிட்டதையா . . .
 
 
 காஞ்சியில் சங்கரா சங்கரா
என்று சொல்லிக் கொண்டிருக்காமல்
"ராம ராம" என்று ஜபித்து ஆசை தீராமல்
காசிக்கு போனாரையா . . .


ஜகந்நாதனின் புரியில் "ராம ராம"
என்று ஜபித்து அதன் பலத்தை
ஜனங்களுக்கும் ஒரு பதிவிரதையின்
மூலமாய் நிரூபித்தாரையா . . .


சிவனே என்று சும்மா இருக்கமுடியாமல்
ராமா என்று ஊர் முழுக்க பிதற்றிக்
கொண்டு, ஊமைப் பையனையும்
மனதில் ராம என்று ஜபிக்க வைத்தாரையா . . .



ராம நாமத்தை ஜபிக்க வைத்து
ஆற்காடு ஜனங்களையும், நவாபையும்
கொடிய வியாதியிலிருந்து
மீட்டு ஆரோக்கியம் தந்தாரையா . . .



தாசிக்கும் ராமன் உண்டு என்று,
வேசிக்கும் ராம நாமத்தைத் தந்து அவள்
காசிக்குப் போகாமலேயே காசினியை
விட்டு பரமபதம் அடைய வைத்தாரையா . . .



என்றும் ராமன் உண்டு, ராம நாமமுண்டு,
என்று நாம் என்றும் விடாமல் ஜபிக்க
இன்றும் காவேரிக் கரையில்
சுகமாய் ஜபிக்கிறாரையா . . .



ராம என்று சொல்லடி என்ற சிவனே
ராம என்று சொல்வீர் என்று வந்தாரையா !


நாமமே நமக்குக் கலியுகத்தில் கதி என்று
பகவன் நாம போதேந்திரர் சொல்கிறாரையா !


கோவிந்தபுரம் போம் ஐயா !
காது கொடுத்து ராம ஜபம் கேளும் ஐயா !
பாபத்தை கொளுத்திப் போடும் ஐயா !



ஐயா வாரீர் . . . அம்மா வாரீர் . . .
தாதா வாரீர் . . . பாட்டி வாரீர் . . .
அண்ணன் வாரீர் . . . அக்கா வாரீர் . . .
தம்பி வாரீர் . . . தங்கை வாரீர் . . .
பெரியவர் வாரீர் . . . சிறியவர் வாரீர் . . .



நாம போதேந்திரரைக் காண வாரீர் . . .
காவேரி ஆற்றங்கரைக்கு வாரீர் . . .
கோவிந்தபுரம் வாரீர் . . .
கும்பகோணம் வாரீர் . . .
 
 
 
நாமத்தில் போதையேறி
கோவிந்த புர இந்திரனாய் வீற்றிருக்கும்
பகவன் நாம போதேந்திரரைக் காண வாரீர் !
 
 
 
ராம நாம போதையில்
தான் என்னும் போதமிழந்த
ஒரு கோல் இந்திரனான
பகவன் நாம போதேந்திரரைக் காண வாரீர் !



வானுலக இந்திரன் சூழ்ச்சிக்காரன் !
கோவிந்தபுர போத(தே)இந்திரன் பாகவதன் !


இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும் அச்சுவை
பெறினும் வேண்டேன் என்று
ராம நாமச் சுவையில்
பித்தேறிய சடையில்லாத
ஒரு கோல் சிவனைக் காண
கோவிந்தபுரம் வாரீர் !



இந்த இந்திரனைப் பாரும் . . .
வானுலக இந்திரனை மறக்கவும் . . .


போதேந்திரா . . .
எனக்கும் நாம போதை வேண்டும் !
உன் போல் ராம நாம போதையில்லை !
க்ருஷ்ண நாம போதை வேண்டும் !


இந்த ஏழைக்கு க்ருஷ்ண நாம
போதையில் தன் போதமிழக்க
விரைவாய் அருள்வாய் !


சத்குரு பகவன் நாம
போதேந்திர மஹராஜரின் திருவடிகளில்
அடியேன் தாசன் சேவிக்கிறேன் !


 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP