ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

கிணறு . . .


ராதேக்ருஷ்ணா

தண்ணீர் . . .

நா வறண்ட சமயத்தில்,
தொண்டை காய்ந்த சமயத்தில்,
எல்லா ஜீவராசிகளும் 
தண்ணீருக்கு ஏங்கும் . . .


வாழ்க்கையில் தினமும்
நாம் பல சமயம்,
தண்ணீரைக் குடிக்கிறோம் . . .

தண்ணீர் இல்லாமல் வாழ
நம் யாருக்குமே தெரியாது . . .
வாழவே முடியாது . . .

இனி ஒவ்வொரு முறையும்
நீ தண்ணீர் குடிக்கும்போதும்
நினைத்துக்கொள்ள
அருமையான ஒரு நிகழ்ச்சியைச்
சொல்லவா . . .?

கிணறு . . .
அந்தக் காலத்தில் எல்லா
வீடுகளிலும் இருந்த ஒன்று . . .
இன்று காண அரிதான ஒன்று . . .
ஆனாலும் கிராமங்களில்
இன்றும் இருக்கும் ஒன்று . . .

அந்தக் கிணற்றுத்தண்ணீரின்
மரியாதையே தனிதான்...
கோடையில் சில்லென்று இருக்கும்...
குளிர் காலத்தில் வெதுவெதுப்பாக இருக்கும் . . .

கிணற்றோடு ஒரு தெய்வசம்மந்தம் உண்டு !
ஒரு தெய்வத்திற்க்கு சம்மந்தம் உண்டு !
ஒரு குருவோடு சம்மந்தம் உண்டு !

இன்றும் காஞ்சீபுரத்தில் ஒரு
கிணற்றுக்கு விசேஷ மரியாதை உண்டு !

இன்றும் அந்தக் கிணற்றில் இருந்துதான்
தேவராஜனான வரதராஜப் பெருமாளுக்கும்,
பெருந்தேவித் தாயாருக்கும் தினமும்
திருமஞ்சனத்திற்க்கு ஜலம்
எடுத்துச்செல்கிறார்கள் . . .

அதற்கு காரணம் ஒரு பக்தன் . . .
அந்த பக்தன் ஒரு சதாசார்யன் . . .
அந்த சதாசார்யன் நம் ஸ்வாமி இராமானுஜர் . . .

ஸ்வாமி இராமானுஜர்,திருக்கச்சியில்
யாதவப்ரகாசரிடம் வேதம் பயின்ற சமயம் . . .

யாதவப்ரகாசருக்கு, ஸ்வாமி இராமானுஜரிடத்தில்
பொறாமை உருவான சமயம் . . .

ஸ்வாமி இராமானுஜரை கொன்று போட,
யாதவப்ரகாசரும்,மற்ற மாணவர்களும்
சூழ்ச்சி செய்த சமயம் . . .

கங்கா யாத்திரை என்று சொல்லி,
கங்கையில் ஸ்வாமி இராமானுஜரைத்
தள்ளிவிட திட்டம் தீட்டின சமயம் . . .

இந்தச் சூழ்ச்சியை அறியாத,
உன்னத வரதனின் பக்தனான
ஸ்வாமி இராமானுஜர் இவர்களோடு
பயணப்பட்ட சமயம் . . .

எல்லாம் அறிந்த வரதராஜன்,
யாருக்கும் தன் லீலை தெரியாதபடி,
ஸ்வாமி இராமானுஜரின் தம்பி
கோவிந்தரையும் இவர்களோடு
யாத்திரை அனுப்பின சமயம் . . .

வரதராஜனின் கருணையால்,
கோவிந்தருக்கு இவர்களின்
சூழ்ச்சி தெரிந்து பரிதவித்த சமயம் . . .

எல்லாம் வல்ல வரதராஜனிடம்
கோவிந்தர் ஸ்வாமி இராமானுஜரைக் காக்க,
ப்ரார்த்தனை செய்த சமயம் . . .

விந்தியமலைக் காட்டில்,
கோவிந்தர், இந்த சூழ்ச்சியைப் பற்றி,
ஸ்வாமி இராமானுஜருக்கு மணலில்
எழுதி வைத்த சமயம் . . .

ஸ்வாமி இராமனுஜரும், வரதராஜனின்
அனுக்ரஹத்தால், அதைப் படித்து,
அவர்களை விட்டு விலகின சமயம் . . .

விந்தியமலைக் காட்டில் எங்கும் ஓடி, 
ஒரு வழியும் புலப்படாமல்,
 ஸ்வாமி இராமானுஜர் கதறி அழுது,
வரதா என்று அலறின சமயம் . . .

தூரத்தில் ஒரு வேடுவனும், வேடுவச்சியும்,
ஸ்வாமி இராமானுஜரை நோக்கி,
ஒய்யாரமாக நடந்து வந்த சமயம் . . .

இந்த வேடுவத் தம்பதியரை,
ஸ்வாமி இராமானுஜர் கவனித்து
 ஆனந்தத்தில் திளைத்த சமயம் . . .

 ஆளில்லாத காட்டில்,
திக்குத் தெரியாதக் காட்டில்,
ஒரு தம்பதியைப் பார்த்து,
ஸ்வாமி இராமானுஜர் குழந்தையாக
குதூகலித்த சமயம் . . .

ஸ்வாமி இராமானுஜர் அவர்களை
"எந்தப் பக்கம் செல்கிறீர்கள்" என்று
கேட்க்க அவர்களும் காஞ்சீபுரம்
என்று சொல்ல அதிசயித்த சமயம் . . .

தானும் அவர்களோடு வரலாமா
என்று ஸ்வாமி இராமானுஜரும்,
வினயத்தோடு கேட்ட சமயம் . . .

வேடுவத்தம்பதியரும் மகிழ்ந்து,
ஆனந்தமாக தலையசைத்து,
எங்களோடு வாரும் என்று
அழைத்த சமயம் . . .

மூவரும் விந்தியமலைக்காட்டில்,
நெடுந்தூரம் நடக்க,அந்தியும் சாய,
உடலும் களைக்க,இருளும் சூழ
ஒரு மரத்தடியில்
இளைப்பாறின சமயம் . . .

வேடுவனும்,வேடுவச்சியும்,
ஸ்வாமி இராமானுஜரைக் குழந்தையாகப்
பாவித்து, தங்கள் இருவர் மத்தியில்,
படுக்கவைக்க சமயம் . . .

வேடுவச்சி,வேடுவனிடம்,
நா வறண்டு தண்ணீர் வேண்டும்,
என்று கேட்ட சமயம் . . .

வேடுவனும், "இருள் சூழ்ந்தது,
பொழுது விடியட்டும்,
அருகில் ஒரு கிராமத்தில்,
சாலையில் நல்ல கிணறு உண்டு"
விடிந்தவுடன் குடிக்கலாம் என்ற சமயம் . . . 

தனக்கு இத்தனை உபகாரம்
செய்த இந்தத் தம்பதியருக்குத்
தான் இந்த சிறு உதவியைக்கூடச் செய்ய
முடியவில்லையே என்று
ஸ்வாமி இராமானுஜர் பரிதவித்த சமயம் . . .


உடல் அசதியால்,இதே தியானத்தோடு,
ஒரு கவலையில்லாமல், குழந்தைபோல்
ஸ்வாமி இராமானுஜரும் அயர்ந்து தூங்கிய சமயம் . . .


பறவைகளின் குதூகல சப்தத்தில்,
ஆதவனின் செங்கிரணங்கள் பூமிப்பந்தில்
வந்து விழ,ஸ்வாமி இராமானுஜரும்,
ஆனந்தமாக கண்விழித்த சமயம் . . .


 இன்னும் பல விஷயங்கள்
பாக்கியிருக்கிறது . . .


அதுவரை இதை நினைத்துக்கொண்டு
தாகமெடுக்கும்போதெல்லாம்
தண்ணீரைக் குடி . . .


உன் பக்தி தாகம் தீரும் முன்பு
வேகமாய் வருவேன் . . .



இதோ வந்துவிட்டேன் . . .

என்னை க்ருஷ்ணன் உட்காரவிட்டால்தானே !
உன் தாபத்திற்கு வசப்பட்ட அவன்
என்னைப் படுத்தி,
உனக்காக எழுத அழைத்து வந்துவிட்டான் . . .



தாகம் எடுத்ததா ?
தண்ணீர் குடித்தாயா ?
இதுவரை சொன்னவற்றை நினைத்தாயா ?
இல்லையென்றால் இனிமேல் நினை . . . 
அவ்வளவுதான் . . .
பக்தி என்பது சுதந்திரம் . . .
இங்கே கட்டாயப்படுத்துதல் என்பதேயில்லை . . .

அதுதானே நம் இந்துமதத்தின் விசேஷம் . . .



பறவைகளின் ஆனந்த சப்தத்தில்,
ஸ்வாமி இராமானுஜர் கண் விழித்து,
உடனே வேடுவச்சித் தாய்க்கு,
தண்ணீர் கொண்டுவர,
வேடுவன் சொன்ன கிராமத்துக்கு,
வேகமாய் கிளம்பின சமயம் . . .



சிறிது தூரம் நடந்தவுடனேயே,
அழகான ஒரு கிராமம் தெரிய,
அங்கே ஒரு சாலையும்,கிணறும் தெரிய,
ஸ்வாமி இராமானுஜரும் மேனி சிலிர்த்த சமயம் . . .

அங்கே சாலைக் கிணற்றில்,
சிலரும் தண்ணீர் இறைத்துக்
கொண்டிருந்த சமயம் . . .

ஸ்வாமி இராமானுஜரும்,
தாமரை இலையை கிண்ணமாக்கி,
அதிலே தண்ணீரை முகந்து கொண்டு,
வேகமாக வேடுவச்சியைப் பார்க்க
அவசரமாய் வந்த சமயம் . . .

ஸ்வாமி இராமானுஜரின் வருகைக்காக,
காத்திருந்த வேடுவனும்,வேடுவச்சியும்,
ஆனந்தமாய் அவரின் பரிதவிப்பை
ரசித்துக்கொண்டிருந்த சமயம் . . .

ஸ்வாமி இராமானுஜர்,அன்போடும்,
ஆசையோடும்,பணிவோடும்,
வேடுவச்சியின் கைகளில்,
தண்ணீரைக் கொடுத்த சமயம் . . .

வேடுவச்சியும் ஆவலோடு,
தாகம் தீர தண்ணீரைப் பருகி,
இன்னும் கொஞ்சம் தண்ணீர்
வேண்டும்,தாகம் தீரவில்லை என்ற சமயம் . . .

ஸ்வாமி இராமானுஜரும் வேகமாக,
சாலைக் கிணற்றுக்கு ஓடி,
திரும்பவும் தண்ணீர் கொண்டு,
வேகமாக நடந்து வந்த சமயம் . . .


வேடுவச்சி அதையும் நன்றாகப் பருகி,
திரும்பவும் தாகம் தீரவில்லை என,
மீண்டும் ஸ்வாமி இராமானுஜரும்,
3வது தடவையும் ஓடி, தண்ணீர்
கொண்டு வந்த சமயம் . . .

ஸ்வாமி இராமானுஜர் மீண்டும்
தண்ணீர் கொண்டு ஓடி வர,
வேடுவனையும்,வேடுவச்சியையும்,
அவ்விடம் காணாத சமயம் . . .

எல்லாப்பக்கமும் தேடியும்,
அவ்வழி வருவோரையும்,போவோரையும்
விசாரித்தும் காணாததால்,
ஸ்வாமி இராமானுஜரும்,
யோசனையில் ஆழ்ந்த சமயம் . . .

திரும்பவும் சாலைக்கிணற்றின் அருகில் வந்து,
அங்கிருப்பவரைக் கண்டு,
இது எந்த ஊர் என்று
ஸ்வாமி இராமானுஜரும்,
ஆவலாகக் கேட்ட சமயம் . . .

அங்கிருந்த பெண்களும்,
தூரத்தில் கோயில் கோபுரத்தைக் காட்டி,
புண்யகோடி விமானம் இருக்கும் இது
காஞ்சீபுரம் என்று தெரியவில்லையா என
கோபத்துடன் கேட்ட சமயம் . . .

இந்தப் பெண்களின் வார்த்தையைக் கேட்ட
ஸ்வாமி இராமானுஜரும்,ஒரு ராத்திரியில்
750மைல் தூரமுடைய விந்தியமலையிலிருந்து,
இரவு தூங்கி எழுந்தபோது காஞ்சீபுரத்தில்,
வந்து சேர்ந்ததை நினைத்து அதிசயித்த சமயம் . . .

salai kinaru, kanchipuram
ஒரு ராத்திரியில் இத்தனை தூரம்,
எப்படி வரமுடியும் ? என்று
ஸ்வாமி இராமானுஜர் கண்களில்
கண்ணீர் வழிய வரதனை நினைத்து,
புண்ணிய கோடி விமானத்தை,
அங்கிருந்தே சேவித்த சமயம் . . .

அப்பொழுது வேடுவன்,வேடுவச்சியின்
நினைவு வர,அவர்களை எங்கேயோ,
எப்பொழுதோ பார்த்திருக்கிறோம் என்ற
தோணல் வர, அடுத்த நிமிடம்,
ஸ்வாமி இராமானுஜர் வரதா என்று அலறி,
வேகமாக வரதராஜன் கோயிலுக்கு ஓடின சமயம் . . .

அங்கே வரதராஜனின் சன்னிதியில்,
திருக்கச்சி நம்பிகள் ஆலவட்ட கைங்கர்யத்தில்
திளைத்துக்கொண்டிருக்க,ஸ்வாமி இராமானுஜரின்
திருமேனியில் பக்திப் பரவச நிலையைக் கண்டு,
அவரும் அதிசயித்து ப்ரமித்துப்போன சமயம் . . .

ஸ்வாமி இராமானுஜரும் எல்லாவற்றையும்
திருக்கச்சிநம்பிகளிடம் உள்ளபடி சொல்ல,
அவரும் வரதனைப் பார்த்து நீரோ வேடுவன்,
பெருந்தேவி வேடுவச்சியோ? என வினவ,
புன்னகை மன்னன் ஆம் என்று தலையசைத்து,
புன்முறுவல் பூத்த சமயம் . . .

திருக்கச்சி நம்பிகளிடம்,
ஸ்வாமி இராமானுஜர் 3வது முறை,
தாயார் தண்ணீர் வாங்காமல் சென்றாரே,
என்று கதறி அழ,
திருக்கச்சி நம்பிகளும் தினமும் நீர்
தாயார்,பெருமாள் திருமஞ்சனத்திற்கு,
அந்தக் கிணற்றிலிருந்து தீர்த்தம்
கொண்டு வாரும் என உத்தரவிட்டார் . . .

இத்தனை உயர்ந்த சாலைக் கிணற்றை
எப்போது தரிசிப்பேன்,
அந்த நீரை என்று குடிப்பேன்,
அங்கிருந்து புண்ய கோடி விமானத்தை
எப்படிப் பார்ப்பேன் என்று
நான் ஏங்கிக்கொண்டிருந்த சமயம் . . .

என் புன்னகை மன்னன் வரதராஜன்,
காஞ்சிபுரம் சென்று திரும்பும் வழியில்,
திடீரென என்னை அந்தக் கிணற்றுக்கு
ஒரு ப்ராம்மணரைக் கொண்டு,
அழைத்துச் சென்றான் . . .

கண்டேன். . .கண்டேன் . . .
ஸ்வாமி இராமானுஜரையும் கண்டேன் . . .
சாலைக்கிணற்றையும் கண்டேன் . . .
அங்கிருந்து புண்யகோடி விமானத்தையும்
கண்டேன். . . கண்டேன் . . .

சாலைக்கிணற்றுத் தண்ணீரையும் குடித்தேன் !
என் ஜன்மா பயணடைந்தது . . .
பெருந்தேவித் தாயார் அனுபவித்த
தண்ணீரை நானும் குடித்தேன் . . .
ஸ்வாமி இராமனுஜரின் ஸ்பரிசம்
பெற்ற தண்ணீரை நானும் குடித்தேன் . . .
வரதனின் திருமேனியில் விளையாடும்
தண்ணீரை நானும் குடித்தேன் . . .
குடித்தேன் . . .குடித்தேன். . .குடித்தேன் . . . 

காரேய் கருணை இராமானுசன் வாழ்க . . .
சாலைக்கிணறு வாழ்க . . .
என்னை அழைத்துச் சென்ற
ப்ராம்மணர் வாழ்க . . .
என்னோடு கிணற்றைத் தரிசித்த
பக்தர்கள் வாழ்க . . . 
அந்த கிணற்றுத் தண்ணீரை
வரதனின் திருமஞ்சனத்திற்கு கொண்டு
செல்லும் ஸ்ரீ வைஷ்ணவர் வாழ்க . . .
அந்தக் கிணற்றை அழகாய் பராமரிக்கும் 
ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ மத் ஆண்டவன் ஸ்வாமிகள்
பொன்னடி வாழ்க . . .
இதையெல்லாம் அனுபவிக்கும்
புன்னகை அரசன் வரதராஜன் வாழ்க . . .
தான் குடித்த தேனினும் இனிய
தண்ணீரை என்னையும் குடிக்கவைத்த
எங்கள் படி தாண்டா பத்தினி,
பெருந்தேவித்தாயார் வாழ்க . . .

இந்த ஆனந்தவேதத்தை படித்த நீ வாழ்க . . .
உன் குலம் வாழ்க . . .
உன் பக்தி வாழ்க . . .
உன் சிரத்தை வாழ்க . . .
உன் ஞானம் வாழ்க . . .
உன் வைராக்யம் வாழ்க . . .
உன் ஆனந்தம் வாழ்க . . .
உன் வாழ்க்கை சிறக்க . . .

வாழ்க ... வாழ்க ... வாழ்க ...

 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP