ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 18 ஆகஸ்ட், 2010

புன்னகை அழகன் !

ராதேக்ருஷ்ணா



புன்னகை !

பார்த்தவுடன் சந்தோஷம் தருவது !

எல்லோரும் ஆசைப்படுவது !

எல்லோரும் செய்யவேண்டியது !

சிலரைப் பார்த்தால்
தானாக சந்தோஷம் தரும் . . .

சிலரை நினைத்தால்
அளவில்லாத ஆனந்தம் வரும் . . .

சிலரைப் பற்றி பேசினால்
நிச்சயம் குதூகலம் வரும் . . .

சிலரைப் பற்றி கேட்டால்
கண்டிப்பாக புன்னகை வரும் . . .

இவை அனைத்தும்
சேர்ந்த ஒருவர் இருந்தால் . .? !
அவரைப் பார்த்தால் . . ? !

எப்படி இருக்கும் . . .!

சொல்ல முடியாது . . .
வர்ணிக்க முடியாது . . .

ஆனாலும் அனுபவிக்க முடியும் . . .
அனுபவித்தால் ! ! !

அனுபவித்தேன் . . .

பார்த்தேன் . . .ரசித்தேன். . .அனுபவித்தேன்

உனக்கும் சொல்கிறேன் . . .

என்ன பார்த்தேன் ?
எங்கே பார்த்தேன் ?
எப்படி பார்த்தேன் ?

நிச்சயம் சொல்கிறேன் . . .
ப்ரார்த்தனை செய்து கொண்டிரு . . .


ப்ரார்த்தனை செய்துகொண்டு
காத்திருந்தாயா ?


காத்திருத்தல் ஒரு சுகம் . . .


அதிலும் மிக உயர்ந்த ஒரு
பொருளுக்காகவோ,
மிக மிக உயர்ந்த ஒருவருக்காகவோ
காத்திருத்தல் ஒரு பரமானந்தம் !


நானும் காத்திருந்தேன் !


பல வருடங்களாகக் காத்திருந்தேன் !


ஆசை ஆசையாய் காத்திருந்தேன் !


அழுகையோடு காத்திருந்தேன் !


ஆவலோடு காத்திருந்தேன் !


திடீரென்று என்னை
வரவழைத்துவிட்டான் . . .


புன்னகை அழகன் . . .
புன்னகை மன்னன் . . .
புன்னகை நாயகன் . . .
புன்னகை பகவான் . . .
புன்னகையின் அர்த்தம் . . .


வரம் தரும் ராஜன் . . .
அருளாளப் பெருமாள் . . .
தேவராஜன் . . .
துயரறு சுடரடி ஸ்வாமி . . .


என் வரதராஜன் என்னை அழைத்தான் . . .


Lord Sri Varadharajan, Kanchipuram



அடியேனை அழைத்தான் . . .
அத்திகிரி நாதன் அழைத்தான் . . .
பெருந்தேவி மணாளன் அழைத்தான் . . .

பெருமாள் கோயில் என்றாலே,
அது காஞ்சி வரதராஜன் கோயில்தான்
என்று ஸ்ரீ வைஷ்ணவம் சொல்லும் !
அந்த பெருமாள் கோயிலுக்குச் சென்றேன் !

எதிர்பார்க்காத ஒரு தரிசனம் . . .

சரியாக அன்று ஆவணி மாதப் பிறப்பு !
(17 ஆகஸ்ட் 2010
உனக்குப் புரியவே இந்த தேதியைக்
குறிப்பிட்டேன்)

கோயிலின் வாசலில் நிற்கும்போதே
மேனி சிலிர்க்க, ஒரு சுகானுபவம் !

பெரிய துளசி மாலையை
தனக்காக வாங்க எனக்கு
ஆணையிட்டான் !

உள்ளே நுழைந்ததும்
சிலு சிலுவென சுகமான
தென்றலாய் என் வரதன்
என்னை{எங்களை}த் தீண்டினான் . . .

உள்ளும் புறமும் சிலிர்க்க,
திருக்கச்சி நம்பிகளின்
ஆலவட்ட கைங்கர்யத்தில்
திளைத்த ராஜனின் அரண்மனையில்
ஆனந்தமாய் நுழைந்தேன்{நுழைந்தோம்} . . .

உள்ளே அழகாகத் திருடன்,
வெட்கமில்லாமல் மண்டபத்தில்
அனைவரும் தன்னை மறந்து
வேடிக்கைப் பார்க்கச் சுகமாக,
மஞ்சனமாடிக் கொண்டிருந்தான் . . .




நாங்களும் எங்களை மறந்தோம் . . .


ப்ரபுவின் திருமுக மண்டலமும்,
தாயாரின் அதிசுந்தர வதனமும்,
பூதேவியின் பூத்த திருமுகமும்,
என்னை {எங்களை} வா வா
என்று அழைக்க ஆனந்தத்தில்
திக்குமுக்காடிப்போனேன்{போனோம்}


பக்தியுடையோருக்கு எளியனான
வரதராஜன் ஆசையோடு பெண்கள்
தொடுத்த ஜாதி மல்லியை வாங்கிச்
சாற்றிக்கொண்டு, எனக்கு {எங்களுக்கு}
ஆசிர்வாதம் செய்தான் . . .


ஆனந்தமாய் தீர்த்தம் தந்து,
தன் திருவடிகளை (சடாரியை)
எங்கள் முடிகளில் வைத்து,
தன் கருணையை என் {எங்கள்}
மேல் பொழிந்தான் . . .


திருக்கச்சி நம்பிகள்,
ஸ்வாமி ஆளவந்தார்,
ஸ்ரீ பெரிய நம்பிகள்,
யதிராஜன் ஸ்வாமி இராமானுஜர்,
ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகர்,
ஸ்ரீ மணவாள மாமுனிகள்,
போன்ற மஹாத்மாக்கள்
திருவடி பதித்து நடந்த,
அத்திகிரி நாதனின் கோயிலில்
நானும்{நாங்களும்} நடந்தேன்{நடந்தோம்} !


வரதராஜனின் திருமஞ்சனத்தை
ரசித்துவிட்டு,ஸ்வாமி இராமானுஜரைத்
தன் பிள்ளையெனக் கொண்டாடி,
அவரிடத்தில் தீர்த்தம் வாங்கிக்குடித்த,
வேடுவச்சியாக வந்த,
பெருந்தேவித் தாயாரைச்
சேவித்தேன் {சேவித்தோம்} . . .


என்னவென்று சொல்வது . . .
பெருந்தேவித் தாயாரின் அழகை . . .
அவளின் திவ்ய கருணையை . . .
மனதிலே ஒரு சாந்தி வந்தது. . .
மனது பாரத்தைவிட்டு லேசானது . . .



பெருந்தேவித்தாயாரின் உத்தரவோடு,
யக்ஞக் குழந்தையான,
அவளின் பர்த்தாவைக் காண,
குழந்தை போல்
ஓடினேன் {ஓடினோம்}

இரு இன்னும் முடியவில்லை . . .
ஒரு நாளில் சொல்ல
ஆதிசேஷனாலேயே முடியாது . . .
நான் எம்மாத்திரம்...
மீண்டும் நாளை தொடருவேன் . . .
அதுவரை இதையே
திரும்பத் திரும்பப் படித்துக்கொண்டிரு . . .

படித்துப் பார்த்தாயா ? ! ?

சரி நான் தொடருகின்றேன் . . .

"நான் ஒன்றும் தனம் சேர்க்கவில்லை !
என் தகப்பனாரும் சேமித்துவைக்கவில்லை !
என் முப்பாட்டனார் ப்ரம்மதேவன்
ஹஸ்திகிரியின் மேல் சேமித்த தனமான
அத்திகிரி அருளாளன் வரதராஜன்
இருக்கின்றான்" . . .என்று
நிகமாந்த தேசிகர் சொன்ன
காஞ்சி நாயகனைக் காண படிகளில்
துள்ளி ஏறினேன் {ஏறினோம்} . . .

எந்தப் படிகட்டுகளில்
யாதவப்ரகாசரின் தாயாருக்கு,
அவளுடைய கேள்விக்கு,
பதில் கிடைத்ததோ,
அந்தப் படிக்கட்டுகளில்
ஆனந்தமாக ஏறினேன் {ஏறினோம்} . . .

எந்தப் படிகட்டுகளில்,
திருக்கச்சி நம்பிகள் தினமும்
பலமுறை ஏறி இறங்கினாரோ,
அந்தப் படிக்கட்டுகளில்
ஆனந்தமாக ஏறினேன் {ஏறினோம்} . . .

எந்தப் படிக்கட்டுகளில்,
காரேய் கருணை இராமானுஜர்,
துள்ளிக்குதித்து ஏறினாரோ,
அந்தப் படிக்கட்டுகளில்
ஆனந்தமாக ஏறினேன் {ஏறினோம்} . . .

எந்தப் படிக்கட்டுகளில் ஏறினால்,
கோடி ஜன்மாவின் பாபங்கள்
சத்தியமாக நாசமாகுமோ,
அந்தப் படிக்கட்டுகளில்
ஆனந்தமாக ஏறினேன் {ஏறினோம்} . . .

படி ஏறக் கால்களையும் கொடுத்து,
தன்னைப் பார்க்க ஆசையும் கொடுத்து,
தரிசிக்க நேரத்தையும் தந்த,
வரம் தரும் ராஜனைக் காண,
தேசிகரும் மேனி சிலிர்க்க ஏறின,
அந்தப் படிக்கட்டுகளில்
ஆனந்தமாக ஏறினேன் {ஏறினோம்} . . .

ஏறி உள்ளே சென்றால்,
அங்கும் சில படிக்கட்டுகள் . . .
அதில் ஏற ஆரம்பித்தவுடன்,
அசந்துபோனேன் {அசந்துபோனோம்} !
அந்தப் புன்முறுவல் பூத்தத்
திருமுக மண்டலத்தைப் பார்த்து,
வாய் விட்டு,இதயம் ஆனந்தத்தில்
திளைக்க,ஆத்மா ப்ரசன்னமாக,
ஹா ஹா என்று சத்தமாக,
சிரித்தேன் . . .{சிரித்தோம்} !

ஓ ! என்ன சிரிப்பு !
எத்தனை அழகான சிரிப்பு !
என்ன அற்புதமான புன்னகை !
அந்தப் புன்னகையில்தான்,
எவ்வளவு உரிமை. . .
புன்னகை மன்னன் இவன் !
புன்னகை அழகன் இவன் !
புன்னகை ஜோதி இவன் !

போதும் . . .போதும் . . . போதும் . . .

எல்லா துன்பங்களும்,
அழிந்து போகும் இடத்தைக்,
கண்டுபிடித்துவிட்டேன் . . .
வரதராஜனைப் பார்த்தவுடன்,
அந்தப் புன்னகையைப் பார்த்தவுடன்,
மனதில் சஞ்சலங்கள் ஓடிவிட்டன . . .

நிச்சயம் முதலில் பகவானின்
திருவடியைத் தான் பார்க்கவேண்டும்
என்பது தெரிந்தும்,
முதலில் வரதராஜனின் திருமுகமே,
என்னை வசீகரித்தன . . .
அதுவும் அந்தப் புன்னகை . . .
ஐயோ ! இதுவரை எங்கும் காணாதது !
யாரிடமும் இல்லாதது !
என் மனதின் சந்தோஷம் 
உனக்குப் புரிகிறதா . . ?
தயவு செய்து புரிந்துகொள்ளேன் . . .

நான் சொல்வதில் சந்தேகம்
இருந்தால் நீயே போய்ப் பார் . . .
பார்த்தால் நீ ஒரு ஆனந்தவேதம்
எழுதுவாய் . . .
இதை விட அழகாக எழுதுவாய் . . .

வரதராஜா ! உன் புன்னகைக்கு 
நான் அடிமை . . .
வரதராஜா ! உன் புன்னகைக்கு
என் வம்சமே அடிமை . . .

வரதராஜா ! உன் புன்னகைக்கு
அடியேன் ஒரு சன்மானம்
தரவேண்டுமே . . ?
என்ன சன்மானம் தருவது ?
எனக்குப் பிடித்ததைத் தானே
தரவேண்டும் . . .
எனக்கு ரொம்பப் பிடித்தது
என் சிஷ்யர்களே . . .
ஆம். . . உன் புன்னகைக்கு
என் சிஷ்யர்களைத் தந்தேன் . . .

இனி என் சிஷ்யர்கள் உன் சொத்து . . .
அவர்களின் வாழ்க்கை உன் பொறுப்பு . . .
அவரின் ஆனந்தம் உன் புன்னகை . . .

இன்னும் கூட நிறையச் சொல்ல
ஆசை அலைமோதுகிறது . . .
இனி நீ வரதராஜனின் சொத்து . . .

இதற்கு மேல் நான் உனக்கு
என்ன சொல்லவேண்டும் . . .

வரதனின் கையை உற்றுப்பார் ...
"மா சுச:" என்று எழுதி வைத்திருக்கிறார் !

அதாவது "வருந்தாதே" என்று அர்த்தம் . . .

இனி வருந்தாதே . . .
வருத்தம் வந்தால் வரதனின்
திருக்கையை நினைத்துக்கொள் . . .

வா . . . ஒரு நாள்
நாம் எல்லோரும் சேர்ந்து
வரதனைக் காணப் போகலாம் . . .

சீக்கிரம் வந்துவிடு . . .
உன் எஜமானனைக் காண. . .
Lord Varadharaja Temple, Kanchipuram


உனக்காக ஒரு
புன்னகை காத்திருக்கிறது . . .

உன்னைக் காண ஒரு
புன்னகை மன்னன்

காத்திருக்கிறான் . . .

உன்னை வசீகரிக்க

ஒரு
புன்னகை அழகன்

தயாராக நிற்கிறான் . . .

வா . . .

என் சமத்துக்குழந்தையே . . .
வா . . .

வரதனைக் காண வா . . .
புன்னகை அழகனைக்

காண வா . . .




0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP