ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 21 ஜூன், 2010

க்ருஷ்ணா..எடுத்துக்கொள் !

ராதேக்ருஷ்ணா

ஹே க்ருஷ்ணா !
நீ எத்தனையோ நல்லதை
எனக்குக் கொடுத்திருக்கிறாய் . . .

ஆனால் நான் அவை எதையுமே
ஏற்றுக்கொள்ளவில்லை . . .
கொண்டாடவில்லை . . .
மதிக்கவில்லை . . .

இப்பொழுது என்னிடம்
என்ன
இருக்கிறது ?

என் மனதின் விகாரங்களை
உன்னிடம் மட்டுமே
என்னால் சொல்லமுடியும் . . .

நீ மட்டுமே என்னை புரிந்துகொள்வாய் . . .

நீ மட்டுமே எனக்கு சமாதானம் சொல்லமுடியும். . .

என்னிடமிருக்கும் சிலவற்றை
பலர்
விரும்புகிறார்கள்  . . .

என்னிடமிருக்கும் பலவற்றை
யாரும் கவனிக்கவில்லை . . .
அப்படியே கவனித்தாலும்
நிச்சயமாக யாரும் அதை
விரும்பப்போவதுமில்லை . . .
வாங்கிக்கொள்ளப்போவதுமில்லை . . .

எனக்கு மட்டுமே தெரிந்த நான் . . .
எனக்கு மட்டுமே புரிந்த நான். . .
எனக்கு மட்டுமே பரிச்சயமான நான் . . .
எனக்கே பிடிக்காத நான் . . .
யாருக்கும் தெரியாத நான் . . .
என்னிடம் நானே தோற்ற நான் . . .
என்னால் ஜெயிக்கமுடியாத நான் . . .
என்னால் மறக்கமுடியாத நான் . . .
என்னால் மறுக்கமுடியாத நான் . . .
என்னால் மறைக்கமுடியாத நான் . . .

அந்த என்னிடம் உள்ள நான் . . .
உன்னிடம் தருகிறேன் . . .

என்னிடம் நிறைய 
நிறைய காமம் உள்ளது ...
அதை எடுத்துக்கொள் !

என்னிடம் கோபம் 
குறைவில்லாமல் உள்ளது ...
அதை எடுத்துக்கொள் !

என்னிடம் பொறாமை
கொட்டிக்கிடக்கிறது ...
அதை எடுத்துக்கொள் !

என்னிடம் அளவுக்கதிமாகவே
அகம்பாவம் இருக்கிறது... 
அதை எடுத்துக்கொள் !

என்னிடம் கணக்கிடமுடியாத
சுயநலம் நிறைந்திருக்கிறது...
அதை எடுத்துக்கொள் !

என்னிடம் தேவையற்ற 
பயம் நீக்கமற நிறைந்திருக்கிறது...
 அதை எடுத்துக்கொள் !

என்னிடம் சந்தேகம்
நிரந்தரமாக குடிகொண்டிருக்கிறது !
அதை எடுத்துக்கொள் !

என் மனது முழுவதும்,
குழப்பம் ஆட்சி செய்கிறது !
அதை எடுத்துக்கொள் !

என் உடல் முழுவதும்,
பழி வாங்கும் எண்ணம்,
வெறியாட்டம் போடுகிறது !
அதை எடுத்துக்கொள் !

எனக்கு ஆசைகளின் மேல்
அலாதியான அபிமானம்
நிரந்தரமாக இருக்கிறது !
அதை எடுத்துக்கொள் !

என் ஹ்ருதயத்தில்,
அடுத்தவரை அவமரியாதை
செய்யும் வித்தைகள்
மலை போலிருக்கிறது !
அதை எடுத்துக்கொள் !

எல்லோரையும் ஏமாற்றும்
வித்தை என் மீது
சுகமாகச் சவாரி செய்கிறது ! 
அதை எடுத்துக்கொள் !
 
என்னோடு பாபம்
ஆனந்தமாக குடித்தனம் 
நடத்திக்கொண்டிருக்கிறது !
அதை எடுத்துக்கொள் !

என்னுடைய பூர்வ ஜன்ம
கர்மவினைகள்,
என் வாழ்க்கையோடு
இரண்டற கலந்திருக்கிறது !
அதை எடுத்துக்கொள் ! 

இன்னும் தரவேண்டியது
நிறைய இருக்கிறது . . .
எடுத்துக்கொள்....

எல்லாவற்றையும் எடுத்துக்கொள் !
 எனக்கென்று எதுவும் மிச்சம் வைக்காதே !

நான் எனக்குத் தெரிந்தவரை
நான் சொல்லிவிட்டேன் !
எனக்குத் தெரியாத இன்னும்
பலகோடி எனக்குள் இருந்துகொண்டு
என் வாழ்க்கையில்
விளையாடிக்கொண்டிருக்கிறது !

இவைகளைப்பற்றி
யாருக்கும் கவலையில்லை !
அவரவரோடு நான் எப்படி
இருக்கிறேன் என்பது மட்டுமே,
எல்லோருக்கும் முக்கியம் !

நான் என்னிடத்தில் எப்படி
வாழ்கிறேன் என்பதைப்பற்றி
யாருக்கும் அக்கறையில்லை !

இது அவர்களின் குற்றமல்ல !
நானும் அடுத்தவரிடம் இப்படித்தானே
இருக்கிறேன் !

உனக்கு எதைஎதையோ
தரவேண்டும் என்று
ஆசைப்பட்டேன் . . .
ஆனால் என்ன செய்வேன் !
நான் என்னுள் தேடிப்பார்த்ததில்
இவைகள்தான் எனக்குக்
கிடைத்தன !

தயவு செய்து வாங்கிக்கொள் !
ஆசையோடு எடுத்துக்கொள் !

 க்ருஷ்ணா !
நீ தானே ஆசையோடு கொடுப்பது
எதுவாயினும்
ஏற்றுக்கொள்வேன் என்று
பகவத்கீதையில் சொன்னாய் !

நான் இவைகளை,
மிக ஆசையோடு,
மிக மரியாதையோடு,
உனக்கு ஆத்மார்த்தமாகச்
சமர்ப்பிக்கின்றேன் !

இவைகளை எடுத்துக்கொண்டு
எனக்கு ஒன்றே ஒன்றை மட்டும் தா...

அந்த ஒன்று,
எந்த நிலைமையிலும்,
எந்த சமயத்திலும்,
எந்த ஜன்மத்திலும்,
உன்னை மறவாதிருக்க வரம் தா . . .

உன்னை மறந்தால்,
கோடி,கோடி ஜன்மாக்கள்
நரகத்திலேயே உழன்று,
படாதபாடு பட
ஆசீர்வாதம் செய் ! 
 
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP