ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 31 மார்ச், 2010

ஸ்ரீ அனந்தபத்மநாபரின் வேட்டை !

ராதேக்ருஷ்ணா

அற்புதம்,ஆனந்தம்,அதிசயம் !

வாழ்வில் எத்தனை முறை
பார்த்தாலும் பரவசமான அனுபவம் !

வாழ்வில் ஒரு முறையாவது
நிச்சயம் தரிசிக்கவேண்டிய வைபவம் !

என் பத்மநாபனின் வேட்டை உற்சவத்தை
அனுபவித்த ஆனந்தத்தில் சொல்கிறேன் !

உலகையே படைத்த அனந்தபத்மநாபனின்
வேட்டையில் இந்த பக்தனையும்,
கருணாசாகரன் அழைத்துச்சென்றான் !

வருவேனோ,மாட்டேனோ
என்ற நிலையிலிருந்த இந்த ஏழையையும்
அனந்தபத்மநாபன் தானே கூப்பிட்டான் !
  
ஆயிரம் நா கொண்ட ஆதிசேஷனே,
வர்ணிக்க முடியாத,ராஜாதி ராஜனின்
அழகையும்,லீலையையும்
இந்த எளியவனால் உள்ளபடி
வர்ணிக்கமுடியுமோ ? ! ?
என் அனந்தபத்மநாபனின் வேட்டைலீலையை
அடியேன் அனுபவித்தவரை
சொல்கிறேன் ! 

அனந்த பத்ம நாபன் வேட்டைக்கு,
சர்வவித அலங்காரத்தோடு வந்தார் !
பச்சை வண்ண வஸ்திரம் உடுத்தி,
மல்லிகையால் அலங்கரிக்கப்பட்ட,
வில்லை இடது கையில் ஏந்தி,ரோஜா மலரையும்,
அம்பையும் வலது கையில் பிடித்தபடி, 
பவள வாயன் வேட்டையாடத் தயாரானான் !

மந்திரியாக நரசிம்மன் கூட வர,
அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட நாயகன்
வேட்டையாட தயாரானான் !
தன்னுடைய கோவிலை தானே ப்ரதக்ஷிணம்
செய்து,காத்திருந்த பக்தர்களுக்கு தரிசனம் தந்து,
பக்தவத்ஸலன்,பாகவதப்ரியன் 
வேட்டையாடத் தயாரானான் !

முதல் சுற்றில், மெள்ள நடந்து,
அசைந்து அசைந்து ஆடி,மேற்கு நடையில்,
யுவராஜன் க்ருஷ்ணனும் கூட வர,
அதிரூப சௌந்தர்யவான் 
வேட்டையாடத் தயாரானான் !
கஜராணி ப்ரியதர்ஷினி தோளில்
பறை கட்டி சப்திக்க,
குழந்தைகள் குதூகலமாய் "ஹொய் ஹொய் !
ஹொய் ஹொய் ஹொய்!!" என்று
கத்திக்கொண்டு ஆடிவர
புவன சுந்தரன்
வேட்டையாடத் தயாரானான் !

கோயிலில் இருந்த பக்த ஜனங்கள்,
"பத்மநாபா" என்று உரக்க அழைக்க,
தூரத்தில் இருந்து அவன் அலங்காரத்தில்
தங்களை இழக்க,ஆனந்தக் கண்ணீரில்
நனைந்துகொண்டும், மழைச்சாரலில்
நனைந்துகொண்டும் காத்திருக்க
லீலா விபூதி நாயகன்
வேட்டையாடத் தயாரானான் !

கிழக்கு வாயிலில் நரசிம்மரோடு,
ஆனந்தமாக பத்ம நாபன் வந்து நிற்க,
மாதர்கள் குலவை சப்தமிட,
கற்பூர ஆர்த்தியில் திருமுக மண்டலம்
ஜொலிக்க,கட்டியம் சொல்பவர் 
"ஜெய விஜயீ பவ !
தேவதேவோத்தமா !
தேவதா சார்வபௌம !
அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட நாயக !
ஸ்ரீ பத்மநாப பராக் !" என்று
கட்டியம் சொல்ல,
கருடன் மீதேறி,கருடக்கொடியோன் 
வேட்டையாடத் தயாரானான் !

மேற்கு வாயிலில் யுவராஜன் குறும்பன்,
குணுங்கு நாறிக் குட்டன்,கோபிகா ரமணன்,
 க்ருஷ்ணன் பாதி வழியில தானும் வர,
வாயிலைக் கடந்து முன்
சென்ற பத்மநாபன்,அவனுக்காக மீண்டும்
பின் வர,நரசிம்மர் செல்லமாய் கோபிக்க,
க்ருஷ்ணன் நரசிம்மரைப் பார்த்து பரிகசிக்க,
இருவரையும் சமாதானம் செய்து,
க்ருஷ்ணனுக்காகவும்,சப்த ரிஷிகளுக்காகவும்,
அங்கு ஒரு ஆர்த்தியை அனுபவித்து,
18 அடி பரந்தாமன்
வேட்டையாடத் தயாரானான் !

நாதஸ்வர வாத்தியங்கள் முழங்க,
மேள தாளங்கள் இசைக்க,
பக்தர்கள் பரவசமாக நாமம் ஜபிக்க,
நேரம் காற்றாய் கரைய,
பாக்கியவான் பத்மநாபதாஸன்
மஹாராஜா உத்திராடம் திருநாள்
வாளேந்தி முன் செல்ல,
குழந்தையைத் தொடரும் வாத்சல்யம்
மிகுந்த தாயாரைப் போல்,அவர் பின் சென்று,
எங்கள் குல தெய்வம்,
அனந்தபத்ம நாப ஸ்வாமி,
வேட்டையாடத் தயாரானான் !

ஆழ்வார்களில் அரசரான,
குலசேகர ஆழ்வாரின் வம்சத்தவர்கள்,
பத்மநாபதாஸரின் வழித்தோன்றல்களும்,
பத்மநாபதாஸரின் அனுமதி கிடைத்த 
சில அத்ருஷ்டசாலிகளும் முன்னே செல்ல,
பத்மநாபன்மட்டுமே கதி என்றிருக்கும்
பக்தஜனங்களும் பின் தொடர,
பத்மநாபரின் கோயில் கைங்கர்யபரர்கள்
வழி நடத்த, புன்னகை அரசன்,
வேட்டையாடத் தயாரானான் !

ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவாக்கான
"அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர்"
என்பதை மெய்பிக்க,சொர்க்க ராஜன் 
இந்திரனும் மேகம் என்னும் வாளியில்,
மழை என்னும் தண்ணீரைத் தெளித்து,
தன் பங்கிற்கு பத்மநாபரின் திருவனந்தபுரத்தை,
பெருக்கி,சுத்தம் செய்து,கைகட்டி,வாய் பொத்தி,
அகம்பாவம் நீங்கி,வினயத்தோடு நிற்க,
அனந்தபுரநாயகன்,த்வாரகா நாதன்
வேட்டையாடத் தயாரானான் !

கஜராணி ப்ரியதர்ஷினி முன்னே செல்ல,
கோமாளிகள் வேஷமிட்ட குழந்தைகள் செல்ல,
குதிரையில் காவலர்கள் செல்ல,
துப்பாக்கி ஏந்திய காவலர்கள் மரியாதை
செய்யக் காத்திருக்க,வாளேந்தி
'நாங்கள் பத்மநாபனின் தாஸர்கள்'
என்ற பெருமிதத்தோடு ராஜ வம்சத்தவர்களும்,
மற்றவர்களும் முன் சென்று காத்திருக்க, 
 சங்கு,சக்கரம்,கோலக்கோடி,விளக்கு,
இவைகளோடு கைங்கர்யபரர்கள் செல்ல,
பரம பாக்கியவான் பத்மநாபதாஸர்
ராஜா உத்திராடம் திருநாளும் வெளியில் இறங்கிக்
கால் கடுக்க காத்திருக்க,எல்லோரும் அமைதி காக்க,
அற்புத ராஜன்,ஆகாச ராஜன்,அழகு ராஜன்,
வேட்டையாடத் தன் அரண்மனையை விட்டு,
ஆறு மாதம் கழித்து வெளியில் வந்தான் !

 ஊரே அமைதி காக்க,இருபுறமும் பக்தர்கள்
திரளாய் இந்த நாளுக்காகத்தான் உயிரோடிருக்கிறோம்
என்று சொல்வது போல் மேனி சிலிர்த்து,
"பத்மநாபா ரக்ஷிக்கனும்" என்று மனதில்
ப்ரார்த்திக்க,மனிதர்களுக்கு மட்டுமே மரியாதை தந்து,
பதவிகளில் இருப்பவருக்காகவே காத்திருந்து,
பழக்கப்பட்ட அரசாங்கக் காவலர்களும்,
பாக்கியம் கிடைத்ததே என்று எண்ணிக்கொண்டு 
துப்பாக்கிகளைத் தூக்கி ராஜாதி ராஜனுக்கு,
திருவனந்தபுர காவலனுக்கு மரியாதை செய்ய,
ஜகன்னாதன்,அனந்தபுரீசன்
வேட்டையாட பவனி வந்தான் !



அன்னையின் முன் செல்லும் குழந்தை,
ஆங்காங்கே தன் தாயைத் திரும்பிப் பார்ப்பது போல்,
கோடி ஜன்ம புண்ணியம் செய்த,
பத்மநாபதாஸர் மஹாராஜா உத்திராடம் திருநாள்,
அடிக்கடி நின்று தன் தாயும் தந்தையுமான
தெய்வத்தைப் பார்க்க,
"உன் பின் தான் வருகிறேன் குழந்தாய் !
கவலையே வேண்டாம் !முன்னே செல் !" என்று
ஆறுதல் சொல்லி மாணிக்கப் பெட்டகம்,
மஹாராஜா ஸ்வாதித் திருநாளைத் திருடிய திருடன்,
வேட்டையாட பவனி வந்தான் !

  தாடகையை வதம் செய்தவன்,
14000 ராக்ஷச வீரர்களை தனியாக
ஜயித்த அசகாய சூரன்,
பாணாசுரணின் கைகளை வெட்டியவன்,
சார்ங்கம் என்னும் வில்லேந்தி,
வில்லாளன் மகிழம்பூ காட்டில்,
மகிழமரத்தடியில் ஒரு இளநீர்க்காயை,
ஒரு கையில் வில்லேந்தி,ஒரு கண்ணை மூடி,
ஓர் அம்பைத் தொடுத்து,
ஓரே குறியில் துளைத்து,பக்தர்களின்
பாவத்தை அழித்து,அசுரர்களை அடியோடு
சாய்த்து,திருவனந்தபுரத்தைக் காத்து,
எங்கள் குலக் கொழுந்தையும் காத்து,
தாமரைக்கண்ணன்,தாமரைக்கையால் 
வேட்டையாடினான் !


உடலெங்கும் முத்து முத்தாய் வியர்வை வழிய,
வாயுதேவனும் தென்றலை விசிறியாக வீச,
முப்பத்துமுக்கோடி தேவர்களும் மேனி சிலிர்க்க,
ஸ்ரீதேவியும்,பூதேவியும்,நீளாதேவியும்
பத்மநாபனாய் ரசிக்க,கோபிகைகளும்,
ராதிகாவும் க்ருஷ்ணனாய் ரசிக்க,
ரிஷிகளும்,சிலரும் ராமானாய் அனுபவிக்க,
 பச்சை வண்ண வஸ்திரம் கலைய,
திருமுடிக்குழற்கற்றை ஆனந்தமாய் அசைய,
உத்தரீயம் கொஞ்சம் நழுவ,
சூட்டின நன் மாலைகள் அழகாக உதிர,
க்ருஷ்ணன் கோலாகலமாய் குழந்தையாய்
கைதட்டி ஆர்ப்பரிக்க,நரசிம்மரும் ஆவென்று
வாய் பிளந்து நிற்க,அசுரர்களும்,முன்வினையும்
தலைதெறிக்க ஓட,ராஜஸமும்,தாமஸமும்,
முடிந்து கீழே விழுந்து துடிதுடிக்க,
என் ப்ரபு,என் ரக்ஷகன்,என் ஸ்வாமி,
என் க்ருஷ்ணன்,என் காதலன்,என் அழகன்,
என் ப்ரேமஸ்வரூபன், என் கண்ணன்,
என் ராஜன்,என் செல்லம்,என் ஹ்ருதயசோரன்,
என் ரஹஸ்ய ஸ்னேகிதன்,என் எஜமானன்,
என் காமன்,என் மோஹனன்,என் குட்டன்,
என் சொத்து,என் மரியாதை,என் உயிர்,
என் வாழ்க்கை,என் பலம்,என் ஆனந்தம்,
அகில ஜகத் ஸ்வாமி,
ஆச்சரியமாக வேட்டையாடினார் !


ஆஹா ! கண்டேன் ! கண்டேன் !
கண்ணுக்கினியன கண்டேன் !
 என்ன தவம் செய்தேன் !
 நானே பாக்கியவான் !
நானே புண்ணியவான் ! 
நானே ஏழுலகிலும் பணக்காரன் !
 ஆனாலும் இந்த வேட்டையை
அனுபவித்த அத்தனை பக்த சிகாமணிகளுக்கும்,
நானும்,என்னைச் சேர்ந்தவர்களும்
என்றும் அடிமை . . .


வேட்டையாடிய குஷியில்,
ஆராட்டிற்கு தயாராகும் ஆனந்தத்தில்,
வேகமாக வடக்கு வாசலில்
நுழைந்த என் பொக்கிஷம்,
அனந்த பத்ம நாபன்
தன் அரண்மனையை வலம் வந்து,
க்ருஷ்ணனை அவனில்லத்தில் விட்டு,
நரசிம்மரோடு,தன் ஒற்றைக்கல்
மண்டபத்தில் சுகமாக இரவுப்பொழுதில்,
பக்தர்களின் பக்தியை நரசிம்மரோடும்,
மற்ற தேவர்களோடும் பேசிப் பேசி,
இரவுப் பொழுதைக் கழித்தான் !


ஆராட்டிற்கு தயாராகிவிட்டான் !
பக்தர்களோடு ஜலக்ரீடை செய்ய
தயாராகி விட்டான் !
 வா! நீயும் வா !
நாமும் போய் குள்ளக்குளிர
நீராடுவோம் வா !
ஜனன, மரண சம்சார சாகரத்தைத்
தொலைப்போம் வா ! வா ! வா !


வேட்டைக்கு என்னையும் கூட்டிச்சென்ற
என் பத்மநாபனுக்கு நன்றி !
என் இராமனுஜருக்கு நன்றி !
என் நம்மாழ்வாருக்கு நன்றி !
என் குருவுக்கு நன்றி !
என் திருவனந்தபுரத்திற்கு நன்றி !
என் பக்தஜனங்களுக்கு நன்றி !


என் க்ருஷ்ணனுக்கு நன்றி !
என் ராதிகாவிற்கு கோடி கோடி நன்றி !


அடியேன் கோபாலவல்லிதாஸனின்
சாஷ்டாங்க வந்தனம் !


என் பத்மநாபா !
ஆயுசு உள்ளவரை இதை அநுபவிக்க
அனுமதி தா !


என் உடல் இளைத்தாலும்,
இதை அநுபவிக்க பலம் தா !


உடல் கீழே விழுந்தாலும்,
உன் திருவனந்தபுரத்தில் விழ
ஒரு பாக்கியம் தா !


அப்போதைக்கு இப்போதே
சொல்லிவைத்தேன்  என் கண்மனியே !


இந்த பைத்தியத்தை மறந்துவிடாதே. . .
  
 
 
  
 
 

 
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP