ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 31 மார்ச், 2010

ஸ்ரீ அனந்தபத்மநாபரின் வேட்டை !

ராதேக்ருஷ்ணா

அற்புதம்,ஆனந்தம்,அதிசயம் !

வாழ்வில் எத்தனை முறை
பார்த்தாலும் பரவசமான அனுபவம் !

வாழ்வில் ஒரு முறையாவது
நிச்சயம் தரிசிக்கவேண்டிய வைபவம் !

என் பத்மநாபனின் வேட்டை உற்சவத்தை
அனுபவித்த ஆனந்தத்தில் சொல்கிறேன் !

உலகையே படைத்த அனந்தபத்மநாபனின்
வேட்டையில் இந்த பக்தனையும்,
கருணாசாகரன் அழைத்துச்சென்றான் !

வருவேனோ,மாட்டேனோ
என்ற நிலையிலிருந்த இந்த ஏழையையும்
அனந்தபத்மநாபன் தானே கூப்பிட்டான் !
  
ஆயிரம் நா கொண்ட ஆதிசேஷனே,
வர்ணிக்க முடியாத,ராஜாதி ராஜனின்
அழகையும்,லீலையையும்
இந்த எளியவனால் உள்ளபடி
வர்ணிக்கமுடியுமோ ? ! ?
என் அனந்தபத்மநாபனின் வேட்டைலீலையை
அடியேன் அனுபவித்தவரை
சொல்கிறேன் ! 

அனந்த பத்ம நாபன் வேட்டைக்கு,
சர்வவித அலங்காரத்தோடு வந்தார் !
பச்சை வண்ண வஸ்திரம் உடுத்தி,
மல்லிகையால் அலங்கரிக்கப்பட்ட,
வில்லை இடது கையில் ஏந்தி,ரோஜா மலரையும்,
அம்பையும் வலது கையில் பிடித்தபடி, 
பவள வாயன் வேட்டையாடத் தயாரானான் !

மந்திரியாக நரசிம்மன் கூட வர,
அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட நாயகன்
வேட்டையாட தயாரானான் !
தன்னுடைய கோவிலை தானே ப்ரதக்ஷிணம்
செய்து,காத்திருந்த பக்தர்களுக்கு தரிசனம் தந்து,
பக்தவத்ஸலன்,பாகவதப்ரியன் 
வேட்டையாடத் தயாரானான் !

முதல் சுற்றில், மெள்ள நடந்து,
அசைந்து அசைந்து ஆடி,மேற்கு நடையில்,
யுவராஜன் க்ருஷ்ணனும் கூட வர,
அதிரூப சௌந்தர்யவான் 
வேட்டையாடத் தயாரானான் !
கஜராணி ப்ரியதர்ஷினி தோளில்
பறை கட்டி சப்திக்க,
குழந்தைகள் குதூகலமாய் "ஹொய் ஹொய் !
ஹொய் ஹொய் ஹொய்!!" என்று
கத்திக்கொண்டு ஆடிவர
புவன சுந்தரன்
வேட்டையாடத் தயாரானான் !

கோயிலில் இருந்த பக்த ஜனங்கள்,
"பத்மநாபா" என்று உரக்க அழைக்க,
தூரத்தில் இருந்து அவன் அலங்காரத்தில்
தங்களை இழக்க,ஆனந்தக் கண்ணீரில்
நனைந்துகொண்டும், மழைச்சாரலில்
நனைந்துகொண்டும் காத்திருக்க
லீலா விபூதி நாயகன்
வேட்டையாடத் தயாரானான் !

கிழக்கு வாயிலில் நரசிம்மரோடு,
ஆனந்தமாக பத்ம நாபன் வந்து நிற்க,
மாதர்கள் குலவை சப்தமிட,
கற்பூர ஆர்த்தியில் திருமுக மண்டலம்
ஜொலிக்க,கட்டியம் சொல்பவர் 
"ஜெய விஜயீ பவ !
தேவதேவோத்தமா !
தேவதா சார்வபௌம !
அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட நாயக !
ஸ்ரீ பத்மநாப பராக் !" என்று
கட்டியம் சொல்ல,
கருடன் மீதேறி,கருடக்கொடியோன் 
வேட்டையாடத் தயாரானான் !

மேற்கு வாயிலில் யுவராஜன் குறும்பன்,
குணுங்கு நாறிக் குட்டன்,கோபிகா ரமணன்,
 க்ருஷ்ணன் பாதி வழியில தானும் வர,
வாயிலைக் கடந்து முன்
சென்ற பத்மநாபன்,அவனுக்காக மீண்டும்
பின் வர,நரசிம்மர் செல்லமாய் கோபிக்க,
க்ருஷ்ணன் நரசிம்மரைப் பார்த்து பரிகசிக்க,
இருவரையும் சமாதானம் செய்து,
க்ருஷ்ணனுக்காகவும்,சப்த ரிஷிகளுக்காகவும்,
அங்கு ஒரு ஆர்த்தியை அனுபவித்து,
18 அடி பரந்தாமன்
வேட்டையாடத் தயாரானான் !

நாதஸ்வர வாத்தியங்கள் முழங்க,
மேள தாளங்கள் இசைக்க,
பக்தர்கள் பரவசமாக நாமம் ஜபிக்க,
நேரம் காற்றாய் கரைய,
பாக்கியவான் பத்மநாபதாஸன்
மஹாராஜா உத்திராடம் திருநாள்
வாளேந்தி முன் செல்ல,
குழந்தையைத் தொடரும் வாத்சல்யம்
மிகுந்த தாயாரைப் போல்,அவர் பின் சென்று,
எங்கள் குல தெய்வம்,
அனந்தபத்ம நாப ஸ்வாமி,
வேட்டையாடத் தயாரானான் !

ஆழ்வார்களில் அரசரான,
குலசேகர ஆழ்வாரின் வம்சத்தவர்கள்,
பத்மநாபதாஸரின் வழித்தோன்றல்களும்,
பத்மநாபதாஸரின் அனுமதி கிடைத்த 
சில அத்ருஷ்டசாலிகளும் முன்னே செல்ல,
பத்மநாபன்மட்டுமே கதி என்றிருக்கும்
பக்தஜனங்களும் பின் தொடர,
பத்மநாபரின் கோயில் கைங்கர்யபரர்கள்
வழி நடத்த, புன்னகை அரசன்,
வேட்டையாடத் தயாரானான் !

ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவாக்கான
"அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர்"
என்பதை மெய்பிக்க,சொர்க்க ராஜன் 
இந்திரனும் மேகம் என்னும் வாளியில்,
மழை என்னும் தண்ணீரைத் தெளித்து,
தன் பங்கிற்கு பத்மநாபரின் திருவனந்தபுரத்தை,
பெருக்கி,சுத்தம் செய்து,கைகட்டி,வாய் பொத்தி,
அகம்பாவம் நீங்கி,வினயத்தோடு நிற்க,
அனந்தபுரநாயகன்,த்வாரகா நாதன்
வேட்டையாடத் தயாரானான் !

கஜராணி ப்ரியதர்ஷினி முன்னே செல்ல,
கோமாளிகள் வேஷமிட்ட குழந்தைகள் செல்ல,
குதிரையில் காவலர்கள் செல்ல,
துப்பாக்கி ஏந்திய காவலர்கள் மரியாதை
செய்யக் காத்திருக்க,வாளேந்தி
'நாங்கள் பத்மநாபனின் தாஸர்கள்'
என்ற பெருமிதத்தோடு ராஜ வம்சத்தவர்களும்,
மற்றவர்களும் முன் சென்று காத்திருக்க, 
 சங்கு,சக்கரம்,கோலக்கோடி,விளக்கு,
இவைகளோடு கைங்கர்யபரர்கள் செல்ல,
பரம பாக்கியவான் பத்மநாபதாஸர்
ராஜா உத்திராடம் திருநாளும் வெளியில் இறங்கிக்
கால் கடுக்க காத்திருக்க,எல்லோரும் அமைதி காக்க,
அற்புத ராஜன்,ஆகாச ராஜன்,அழகு ராஜன்,
வேட்டையாடத் தன் அரண்மனையை விட்டு,
ஆறு மாதம் கழித்து வெளியில் வந்தான் !

 ஊரே அமைதி காக்க,இருபுறமும் பக்தர்கள்
திரளாய் இந்த நாளுக்காகத்தான் உயிரோடிருக்கிறோம்
என்று சொல்வது போல் மேனி சிலிர்த்து,
"பத்மநாபா ரக்ஷிக்கனும்" என்று மனதில்
ப்ரார்த்திக்க,மனிதர்களுக்கு மட்டுமே மரியாதை தந்து,
பதவிகளில் இருப்பவருக்காகவே காத்திருந்து,
பழக்கப்பட்ட அரசாங்கக் காவலர்களும்,
பாக்கியம் கிடைத்ததே என்று எண்ணிக்கொண்டு 
துப்பாக்கிகளைத் தூக்கி ராஜாதி ராஜனுக்கு,
திருவனந்தபுர காவலனுக்கு மரியாதை செய்ய,
ஜகன்னாதன்,அனந்தபுரீசன்
வேட்டையாட பவனி வந்தான் !



அன்னையின் முன் செல்லும் குழந்தை,
ஆங்காங்கே தன் தாயைத் திரும்பிப் பார்ப்பது போல்,
கோடி ஜன்ம புண்ணியம் செய்த,
பத்மநாபதாஸர் மஹாராஜா உத்திராடம் திருநாள்,
அடிக்கடி நின்று தன் தாயும் தந்தையுமான
தெய்வத்தைப் பார்க்க,
"உன் பின் தான் வருகிறேன் குழந்தாய் !
கவலையே வேண்டாம் !முன்னே செல் !" என்று
ஆறுதல் சொல்லி மாணிக்கப் பெட்டகம்,
மஹாராஜா ஸ்வாதித் திருநாளைத் திருடிய திருடன்,
வேட்டையாட பவனி வந்தான் !

  தாடகையை வதம் செய்தவன்,
14000 ராக்ஷச வீரர்களை தனியாக
ஜயித்த அசகாய சூரன்,
பாணாசுரணின் கைகளை வெட்டியவன்,
சார்ங்கம் என்னும் வில்லேந்தி,
வில்லாளன் மகிழம்பூ காட்டில்,
மகிழமரத்தடியில் ஒரு இளநீர்க்காயை,
ஒரு கையில் வில்லேந்தி,ஒரு கண்ணை மூடி,
ஓர் அம்பைத் தொடுத்து,
ஓரே குறியில் துளைத்து,பக்தர்களின்
பாவத்தை அழித்து,அசுரர்களை அடியோடு
சாய்த்து,திருவனந்தபுரத்தைக் காத்து,
எங்கள் குலக் கொழுந்தையும் காத்து,
தாமரைக்கண்ணன்,தாமரைக்கையால் 
வேட்டையாடினான் !


உடலெங்கும் முத்து முத்தாய் வியர்வை வழிய,
வாயுதேவனும் தென்றலை விசிறியாக வீச,
முப்பத்துமுக்கோடி தேவர்களும் மேனி சிலிர்க்க,
ஸ்ரீதேவியும்,பூதேவியும்,நீளாதேவியும்
பத்மநாபனாய் ரசிக்க,கோபிகைகளும்,
ராதிகாவும் க்ருஷ்ணனாய் ரசிக்க,
ரிஷிகளும்,சிலரும் ராமானாய் அனுபவிக்க,
 பச்சை வண்ண வஸ்திரம் கலைய,
திருமுடிக்குழற்கற்றை ஆனந்தமாய் அசைய,
உத்தரீயம் கொஞ்சம் நழுவ,
சூட்டின நன் மாலைகள் அழகாக உதிர,
க்ருஷ்ணன் கோலாகலமாய் குழந்தையாய்
கைதட்டி ஆர்ப்பரிக்க,நரசிம்மரும் ஆவென்று
வாய் பிளந்து நிற்க,அசுரர்களும்,முன்வினையும்
தலைதெறிக்க ஓட,ராஜஸமும்,தாமஸமும்,
முடிந்து கீழே விழுந்து துடிதுடிக்க,
என் ப்ரபு,என் ரக்ஷகன்,என் ஸ்வாமி,
என் க்ருஷ்ணன்,என் காதலன்,என் அழகன்,
என் ப்ரேமஸ்வரூபன், என் கண்ணன்,
என் ராஜன்,என் செல்லம்,என் ஹ்ருதயசோரன்,
என் ரஹஸ்ய ஸ்னேகிதன்,என் எஜமானன்,
என் காமன்,என் மோஹனன்,என் குட்டன்,
என் சொத்து,என் மரியாதை,என் உயிர்,
என் வாழ்க்கை,என் பலம்,என் ஆனந்தம்,
அகில ஜகத் ஸ்வாமி,
ஆச்சரியமாக வேட்டையாடினார் !


ஆஹா ! கண்டேன் ! கண்டேன் !
கண்ணுக்கினியன கண்டேன் !
 என்ன தவம் செய்தேன் !
 நானே பாக்கியவான் !
நானே புண்ணியவான் ! 
நானே ஏழுலகிலும் பணக்காரன் !
 ஆனாலும் இந்த வேட்டையை
அனுபவித்த அத்தனை பக்த சிகாமணிகளுக்கும்,
நானும்,என்னைச் சேர்ந்தவர்களும்
என்றும் அடிமை . . .


வேட்டையாடிய குஷியில்,
ஆராட்டிற்கு தயாராகும் ஆனந்தத்தில்,
வேகமாக வடக்கு வாசலில்
நுழைந்த என் பொக்கிஷம்,
அனந்த பத்ம நாபன்
தன் அரண்மனையை வலம் வந்து,
க்ருஷ்ணனை அவனில்லத்தில் விட்டு,
நரசிம்மரோடு,தன் ஒற்றைக்கல்
மண்டபத்தில் சுகமாக இரவுப்பொழுதில்,
பக்தர்களின் பக்தியை நரசிம்மரோடும்,
மற்ற தேவர்களோடும் பேசிப் பேசி,
இரவுப் பொழுதைக் கழித்தான் !


ஆராட்டிற்கு தயாராகிவிட்டான் !
பக்தர்களோடு ஜலக்ரீடை செய்ய
தயாராகி விட்டான் !
 வா! நீயும் வா !
நாமும் போய் குள்ளக்குளிர
நீராடுவோம் வா !
ஜனன, மரண சம்சார சாகரத்தைத்
தொலைப்போம் வா ! வா ! வா !


வேட்டைக்கு என்னையும் கூட்டிச்சென்ற
என் பத்மநாபனுக்கு நன்றி !
என் இராமனுஜருக்கு நன்றி !
என் நம்மாழ்வாருக்கு நன்றி !
என் குருவுக்கு நன்றி !
என் திருவனந்தபுரத்திற்கு நன்றி !
என் பக்தஜனங்களுக்கு நன்றி !


என் க்ருஷ்ணனுக்கு நன்றி !
என் ராதிகாவிற்கு கோடி கோடி நன்றி !


அடியேன் கோபாலவல்லிதாஸனின்
சாஷ்டாங்க வந்தனம் !


என் பத்மநாபா !
ஆயுசு உள்ளவரை இதை அநுபவிக்க
அனுமதி தா !


என் உடல் இளைத்தாலும்,
இதை அநுபவிக்க பலம் தா !


உடல் கீழே விழுந்தாலும்,
உன் திருவனந்தபுரத்தில் விழ
ஒரு பாக்கியம் தா !


அப்போதைக்கு இப்போதே
சொல்லிவைத்தேன்  என் கண்மனியே !


இந்த பைத்தியத்தை மறந்துவிடாதே. . .
  
 
 
  
 
 

 
 

Read more...

செவ்வாய், 30 மார்ச், 2010

வேட்டையாடச் செல்கின்றான் !

ராதேக்ருஷ்ணா
 
வேட்டையாடச் செல்கின்றான் !
 
என் அனந்த பத்ம நாபன்
தீயவர்களை,தீமைகளை
வேட்டையாடச் செல்கின்றான் ! 
  
அகிலாண்ட கோடி
ப்ரும்மாண்ட நாயகன்
வேட்டையாடச் செல்கின்றான் !
 
  கலியுக வரதன்,
அனாதரக்ஷகன்,ஆபத் பாந்தவன்
வேட்டையாடச் செல்கின்றான் !
 
பக்தர்களைப் பாடாய்படுத்தும்,
கயவர்களை இல்லாமல் செய்ய
வேட்டையாடச் செல்கின்றான் !
 
 மேற்கு வாசல் வழியாக
வெளியில் வந்து,ஊரே
அமைதி காக்க
வேட்டையாடச் செல்கின்றான் !
 
பக்தர்களின் ப்ரார்த்தனையை
நிறைவேற்ற,வீதியில் இறங்கி
வேட்டையாடச் செல்கின்றான் !
 
பத்மநாப தாஸர்களின் பக்திக்காக,
கஜ ராணி ப்ரியதர்ஷினியின் பின்னே,
வேட்டையாடச் செல்கின்றான் !
 
இரண்யகசிபுவை கிழித்த நரசிம்மரோடு,
கோபிகைகளின் ப்ரேம ஸ்வரூபன் க்ருஷ்ணனோடு,
வேட்டையாடச் செல்கின்றான் !
 
ஒரு கையில் வில்லேந்தி,
ஒரு கையில் அம்பு கொண்டு,
வேட்டையாடச் செல்கின்றான் !
 
சர்வாபரண பூஷிதனாக,
சர்வ அலங்காரத்தோடு,
முத்து முத்தாய் வியர்வை
உடலெங்கும் துளிர்க்க
வேட்டையாடச் செல்கின்றான் !
 
ஆயிரம் கண் வேண்டுமே !
என் கண்மனி ராஜன்
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாபனைப் பார்க்க !
 
வா ! வா ! வா !
வாழ்வில் ஒரு முறையாவது
என் காதலன்
அனந்த பத்ம நாபன்
வேட்டையாடும் அழகை அனுபவிக்க, வா ! 
 
சரி ! 
நான் கிளம்புகிறேன் !
 
போய் தரிசனம் செய்துவிட்டு
வந்து
அந்த ஆனந்தத்தை உனக்கும் சொல்கிறேன் !
 
அதுவரை நீ விடாமல்
நாம ஜபம் செய் !
 
என் பத்மநாபனை நினை !
 
இதோ ! என் ப்ரபு !
என் ஸ்வாமி !
தயாராகிவிட்டான் !
 
வேட்டையாட தயாராகி விட்டான் !
 
 

Read more...

திங்கள், 29 மார்ச், 2010

தியானம் !


ராதேக்ருஷ்ணா

தியானம் செய் !
தினமும் தியானம் செய் !
விடாமல் தியானம் செய் !

ஆனால் எதைத் தியானம் செய்வாய் ?
எப்படித் தியானம் செய்வாய் ?
எந்த இடத்தில் தியானம் செய்வாய் ?

இன்றைய காலகட்டத்தில்
தியானம் என்று சொல்லி,
மக்களிடம் பணத்தைக் கொள்ளையடிக்கின்றனர் !

ஜனங்களும் ஆட்டு மந்தைக்கூட்டம் போல்
அலைகின்றனர் !

எதை,எப்படி,எங்கு தியானம் செய்யவேண்டும்
என்று நம்முடைய ஆசார்யபுருஷர்கள்
சொல்லியிருக்கிறார்கள் !
நம்முடைய இதிஹாச,புராணங்களும்
மிக அழகாக சொல்லியிருக்கின்றன !

இதோ சொல்கிறேன் !
க்ருஷ்ணனின் கட்டளைப்படி
உனக்குச் சொல்கிறேன் !

செலவு இல்லாத ஒரு த்யானம் !
உன் ஆயுள் முழுக்க சத்தியமாக
உன்னால் செய்ய முடியும் !

நீ எந்த ஜாதியைச் சேர்ந்தவராக
இருந்தாலும் செய்ய முடிந்த தியானம் !

துருவனுக்கு நாரதர் சொன்னது போலே
மிகச் சுலபமான ஒரு த்யானம் !

நிச்சயமாக உன்னால் முடியும் !
முயன்று பார் !

முதலில் பகவான் க்ருஷ்ணனிடம்
"க்ருஷ்ணா! எனக்கு உன்னை
தியானம் செய்யவேண்டும் !
என் மனதை அடக்கும் சக்தி
எனக்கில்லை ! அதனால் ஹே ப்ரபோ !
தயவு செய்து என் மனதை நீயே
நல்வழிப்படுத்து !உன் திருவடிகளில்
சரணாகதி செய்கிறேன் !" என்று
மனமுருகி ப்ரார்த்தனை செய் !

பிறகு "க்ருஷ்ணா" என்று
வாயால் சொல்லிக்கொண்டேயிரு !
நாமத்தைக் கணக்குப் பண்ணாதே !

உன் குருவை நினைத்துக்கொள் !
ஒரு வேளை உனக்கு குரு என்று
யாரும் இல்லையென்றால் க்ருஷ்ணனையே
குருவாக நினைத்துக்கொள் !

க்ருஷ்ணா என்று சொல் !
சகலவிதமான துயரங்களையும் அறுக்கும்
பலமுடைய பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனுடைய
அழகான சிவந்த
செந்தாமரைப் பாதங்களை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
செதுக்கி வைத்தாற்போலிருக்கும்,
முத்து முத்தான கால்
விரல்களை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
அழகான கால் விரல்களில் இருக்கும்
மோதிரங்களை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
கால் விரல்களில் இருக்கும்
சந்திரன் போல் ஒளி வீசும்,
அற்புதமான நகங்களை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய
கடல் போன்ற
கரு நீலத் திருமேனியின்
வண்ணத்தை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
தங்கத் தண்டையையும்,தங்கச் சலங்கையும்
அணிந்த,அழகுப் பெட்டகமான
கணுக்கால்களை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
பார்த்தவுடன் மனதைப் பறிக்கும்
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத
முழங்கால்களை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
இரண்யகசிபுவைக் கிழித்துப்போட,
நரசிம்மனாய் வாசற்படியில் அமர்ந்து
அவனைப் போட்டுக்கொண்டத்
திருத்தொடைகளை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
உள்ளழகை மறைத்துத் தான் மட்டுமே
அனுபவித்து,அதில் திளைக்கும்,
அவன் இடுப்பை அணைத்துக்கொண்டிருக்கும்
திவ்யமான பீதாம்பரத்தை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
யாருக்கும் உள்ளபடி கற்பனை
செய்யமுடியாத,அழகின் திருவுருவமான
குஹ்யப்ரதேசத்தை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
இடுப்பில் விளையாடும்,
திவ்யமான ரத்தினங்கள்
பதிக்கப்பட்டு,தங்கத்தாலான
அரைச் சலங்கையை நினை!

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
உலகையே படைக்கும்
ப்ரும்மதேவனின் உற்பத்தி ஸ்தானமான,
கருந்தாமரைப் பூப்போன்ற
திருநாபிக்கமலத்தை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
பக்திக்கு வசப்பட்டு,அறிவொன்றும்
இல்லாத ஆய்ச்சி கட்டின
தாம்புக்கயிற்றின் அடையாளமிருக்கும்
மணிவண்ணனின் திருவயிற்றை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
லக்ஷ்மி தேவியின் இருப்பிடமான,
ஜீவர்களையே நினைத்துக் கொண்டிருக்கும்,
ப்ருகு மஹரிஷி உதைத்த,
திருமார்பை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
திருமார்பினை உரசி விளையாடி,
பக்தர்கள் பக்தியோடு தந்த,
சுகந்தமான,குளிர்ச்சியான,
துளசி மாலையை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
திருமார்பில் ஆனந்தமாக,
சுதந்திரமாக,உரிமையோடு,
தவழும் வைஜயந்திமாலையையும்,
நவரத்ன ஆபரணங்களையும்
திருப்தியாக நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
சாணூரன்,முஷ்டிகன் போன்ற
மல்லர்களை பிரட்டிப்போட்ட
மிகுந்த பலமுடைய,மலை போன்ற
திருத்தோள்களை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
அபயம் அளிக்கும்,சம்சாரிகளை
சம்சாரத்திலிருந்து கரையேற்றத்
துடிக்கும் உருண்டு,நீண்டிருக்கும்,
யானை துதிக்கை போன்ற,
தோள்வளையல்களாலும்,கங்கணங்களாலும்
அலங்கரிக்கப்பட்ட
ஆச்சரியமான திருக்கைகளை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
புல்லாங்குழலை ஏந்தியிருக்கும்,
மாடுகளை தேய்த்துக் குளிப்பாட்டும்,
வெண்ணையைத் திருடும்,
கோபிகளின் ஆடையை இழுக்கும்,
செந்தாமரையைப் பழிக்கும்
உள்ளங்கைகளை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
ப்ரேம ஸ்வரூபினியான ராதிகாவை
செல்லமாகக் கிள்ளும் நகங்களையுடைய,
மென்மையான,ஆனாலும் பலமான,
பலவித மோதிரங்களால் அலங்கரிக்கப்பெற்ற
அதிரூப சுந்தரமான கைவிரல்களை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
மூன்று மடிப்புகளையுடைய,
அண்டங்களை அனாயாசமாக
விழுங்கிய,சந்தனம் பூசிய
அற்புதமான திருக்கழுத்தை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
கோபிகைகளை சுண்டியிழுக்கும்,
ஆண்டாளும் புலம்பின,
புல்லாங்குழலை ஊதும்,
வெண்ணையை விழுங்கும்,
செங்கனிவாயை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
மாதுளம்பழத்தின் முத்துக்கள் போலே
ப்ரகாசிக்கும்,ஜாதி புஷ்பத்தின்
சிவந்த கரையைப் போல்,
வெற்றிலையால் சிவந்த,
முத்துப்பற்களை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
கற்பூரத்தின் வாசத்தையும்,
கமலப்பூ வாசத்தையும்,
மிஞ்சும்,வெற்றிலை போடாமலேயே
சிவந்திருக்கும்,ராதிகா ராணி
ருசிக்கும் சிவந்த நாவை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
கண்ணாடி போன்று பளபளக்கும்,
கோபிகைகள் முத்தமிட்டு சிவந்திருக்கும்,
ராதிகா ராணி செல்லமாகக் கிள்ளும்,
கன்னங்களை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
எந்த மூச்சுக்காற்றை வேதமாகச்
சொல்கிறோமோ,அந்த மூச்சை
இழுத்து விடும்,புல்லாக்கு
அணிந்த தீர்க்கமான
திருமூக்கை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
பார்ப்பவரை சுண்டியிழுக்கும்,
பாபத்தை நாசம் செய்யும்,
கருணை மழை பொழியும்,
ப்ரேம ரசம் சிந்தும்,
கரியவாகி,புடை பரந்து,
மிளிர்ந்து செவ்வரியோடும்,
திருக்கண்களை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
புல்லாங்குழல் வாசிக்கும் சமயத்தில்,
நெறிந்து ஏறி, வில் போன்று வளைந்த,
அடர்த்தியான புருவங்களை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
முத்து முத்தாய் வியர்க்கும்,
கஸ்தூரி திலகத்துடன் விளங்கும்,
மனோஹரமான திருக்குழல் கற்றைகளால்,
மறைந்திருக்கும் நெற்றியை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
மகரகுண்டலங்களுக்கு அழகு தரும்,
கோபிகைகளின் ரஹஸ்யத்தைக் கேட்கும்,
பக்தர்களின் ப்ரார்த்தனையைக் கேட்கும்,
அழகான செவிகளை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
யசோதா மாதா சீவி சிங்காரித்துவிடும்,
பூக்களால் அலங்காரம் செய்யப்பட்ட,
மயில்பீலியைச் சொருகிக்கொண்டிருக்கும்,
துளசிதேவியின் நிரந்தர வசிப்பிடமான,
திருமுடியை நினை !

எத்தனை சுகமாக இருக்கிறது இல்லையா !?!

இப்படியே நினை !
நினைத்துப் பார் !
இதன் பெயர் தான் தியானம் !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
திருவடி முதல் திருமுடி வரை
நினைத்தாய் அல்லவா !
அதாவது பாதம் முதல் தலை வரை !

இப்பொழுது அதே போல்
க்ருஷ்ணா என்று சொல் !
திருமுடி முதல் திருவடி வரை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
அழகான சுருட்டையான முடிகளால்
விளங்கும் திருமுடியை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
பறந்த நெற்றியை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
மகர குண்டல்ங்களோடு செவியை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
வில் போன்ற வளைந்த புருவங்களை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
அழகான செந்தாமரைக் கண்களை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
அதிசயமான தீர்க்கமான நாசியை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
மதுர ரஸம் சிந்தும் செங்கனி வாயை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
முத்துப்பற்களை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
நீண்ட,சிவந்த நாவினை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
அழகான தாடையை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
நீண்ட கழுத்தை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
திரண்ட தோள்களை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
பருத்த புஜங்களை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
மயக்கும் முழங்கைகளை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
கைகளின் மணிக்கட்டுகளை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
சங்கு,சக்கர ரேகைகளால்
அடையாளம் செய்யப்பட்ட
சிவந்த உள்ளங்கைகளை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
கோப குழந்தைகள்,
சொடுக்கு எடுக்கும்,
நீண்ட மெல்லிய விரல்களை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
அழகு கொஞ்சும்,
வக்ஷஸ்தலத்தை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
அகன்ற திருமார்பை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
யசோதை கட்டிய தாம்புக்கயிற்றின்
அடையாளமிருக்கும் திருவயிற்றை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
கருந்தாமரை போன்ற
தொப்புள்கொடியிருக்கும்,
நாபிக்கமலத்தை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
பீதாம்பரம் நழுவாதபடி காக்கும்,
சிறந்த அரைச் சதங்கையை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
அழகின் பிறப்பிடமான
ரகசிய முத்தத்தை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
பருத்து,திரண்டிருக்கும்,
அசைந்தாடி அனைவரையும் ஈர்க்கும்,
வீணை போன்ற பின்பாகத்தை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
கச்சைக்கட்டிய,எல்லோருக்கும்
தெரியும்படியான
திருத்தொடைகளை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
கடிக்கலாம் என்று தோன்றவைக்கும்
முழங்கால்களை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
சப்திக்கும் சலங்கைகளையுடைய,
கணுக்கால்களை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
திருமங்கையாழ்வாரும் ருசித்த,
கால்விரல்களை நினை !

க்ருஷ்ணா என்று சொல் !
பகவான் க்ருஷ்ணனுடைய,
மஹாபலியும் தலையில் சுமந்த,
செந்தாமரைப் பாதங்களை நினை !

இப்படியே தோன்றும் போதெல்லாம்
நினைத்துக்கொண்டிருப்பாய் !

இதில் என்ன கஷ்டமிருக்கிறது ?
எத்தனை சுலபம் !

இதற்கு பெரிய படிப்பு வேண்டாம் !
நிறைய பணம் வேண்டாம் !
பெரிய தியான மண்டபம் வேண்டாம் !
கையில் துளசி மாலை வேண்டாம் !
குறிப்பிட்ட நேரம் வேண்டாம் !
இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது !

இன்றிலிருந்து தொடங்கு !
நீ இருக்கும் நிலைமையிலிருந்து தொடங்கு !

நாளை குளித்துவிட்டு சுத்தமாக
தொடங்கலாம் என்று நினைக்காதே !

இதை நீ படிப்பது அர்த்த ராத்திரியாக
இருந்தாலும் உடனே தொடங்கு !
இதை நீ படிப்பது சந்தியா வேளையாக
இருந்தாலும் உடனே தொடங்கு !
இதை நீ வண்டியில் சென்றுகொண்டு
படித்தாலும் உடனே தொடங்கு !

உனக்கு சந்தேகமாக இருந்தால்
பரீட்சை செய்து பார் !

நஷ்டமில்லாத முயற்சி !
ஆனந்தமான முயற்சி !
அற்புதமான முயற்சி !

இனியும் தியான வகுப்புகளுக்குச்
சென்று ஏமாறாதே !

நீ உன் க்ருஷ்ணனை நினைக்க,
உனக்கு யாரும் வகுப்புகள்
நடத்தவேண்டாம் . . .

தியானம் செய் . . .
ஒரு நாள் என்னைப் பார்க்கும்போது
இதன் பலனை நீ
எனக்குச் சொல்வாய் !

ஒருவேளை நான்
க்ருஷ்ண சரணத்தை அடைந்துவிட்டாலும்
என் க்ருஷ்ணன்
எனக்கு உன் அனுபவத்தைச் சொல்வான் !

இனி எங்கும் தியானம் !
எப்பொழுதும் தியானம் !
க்ருஷ்ண தியானம் !

இதிலே இன்னும் ஒரு படி உண்டு !
அதை நீயே கண்டுபிடி !

ஒரு குறிப்பு சொல்லவா ?
ராதே...ராதே...

Read more...

வெள்ளி, 26 மார்ச், 2010

அமைதி எங்கே ?



ராதேக்ருஷ்ணா


எல்லோரும் அமைதியை
தேடிக் கொண்டிருக்கிறார்கள் !

நீயும் தேடிக்கொண்டிருக்கிறாய் !

அது உன் கூடவேதான் இருக்கிறது !

உன்னுள்ளேயேதான் இருக்கிறது !

வெளியில் இல்லை !

எந்தப் பொருளிலும் இல்லை !

யாரிடமும் இல்லை !

தினமும் நீ அந்த அமைதியை
அனுபவிக்கத் தான் செய்கிறாய் !

எப்பொழுது தெரியுமா ?

நீ உன்னையே மறந்து தூங்கும்போது . . .

ஆம் ! நீ எல்லாவற்றையும் விட்டுத்
தூங்கும்போது அத்தனை அமைதியாக இருக்கிறாய் !

ஏன் ? காரணம் தெரியுமா ?

நீ உன்னுடைய அகம்பாவத்தையும்,
மமகாரத்தையும் விட்டு விடுகிறாய் . . .

நல்ல தூக்கத்தில்
நீ ஆணா, பெண்ணா என்பதை
மறந்துவிடுகிறாய் !

நீ உன் வயதை மறந்து விடுகிறாய் !

உன் படிப்பை மறந்து விடுகிறாய் !

உன் பதவியை மறந்து விடுகிறய் !

உன் குலத்தை மறந்து விடுகிறாய் !

உனக்குப் பிடித்தவர்களை மறந்து விடுகிறாய் !

உனக்குப் பிடிக்காதவர்களை மறந்து விடுகிறாய் !

உனக்கு விருப்பமானதை மறந்து விடுகிறாய் !

உனக்கு விருப்பமில்லாததை மறந்து விடுகிறாய் !

உன் தேவைகளை மறந்து விடுகிறாய் !

உன் அவமானங்களை மறந்து விடுகிறாய் !

உன்னை அவமதித்தவர்களை மறந்து விடுகிறாய் !

உன் கோபத்தை மறந்து விடுகிறாய் !

உன் துக்கங்களை மறந்து விடுகிறாய் !

உன் மனதின் காயங்களை மறந்து விடுகிறாய் !

உன் மனதின் வலிகளை மறந்து விடுகிறாய் !

உன் பெருமையை மறந்து விடுகிறாய் !

உன் பிடிவாதத்தை மறந்து விடுகிறாய் !

உன் ஏக்கங்களை மறந்து விடுகிறாய் !

உன் காமத்தை மறந்து விடுகிறாய் !

உன் திமிரை மறந்து விடுகிறாய் !

உன் பயத்தை மறந்து விடுகிறாய் !

உன் ஆசைகளை மறந்து விடுகிறாய் !

உன் மொழியை மறந்து விடுகிறாய் !

உன் ஊரை மறந்து விடுகிறாய் !

உன் திட்டங்களை மறந்து விடுகிறாய் !

உன் தோல்விகளை மறந்து விடுகிறாய் !

உன் வெற்றிகளை மறந்து விடுகிறாய் !

உன் பந்தங்களை மறந்து விடுகிறாய் !

உன் ஏமாற்றங்களை மறந்து விடுகிறாய் !

உன் வளர்ச்சியை மறந்து விடுகிறாய் !

உன் பாவங்களை மறந்து விடுகிறாய் !

உன் நிலைமையை மறந்து விடுகிறாய் !

சீதோஷ்ண நிலையை மறந்து விடுகிறாய் !

உன்னைக் கஷ்டப்படுத்தினவர்களை மறந்து விடுகிறாய் !

உன் கஷ்டங்களை மறந்து விடுகிறாய் !

இந்த உலகத்தை மறந்து விடுகிறாய் !

நேரத்தை மறந்து விடுகிறாய் !

நீ இருக்கும் இருப்பை மறந்து விடுகிறாய் !

உன் உடலை மறந்து விடுகிறாய் !

உன் குரலை மறந்து விடுகிறாய் !

உன் அழகை மறந்து விடுகிறாய் !

உன் ஆகாரங்களை மறந்து விடுகிறாய் !

உன் உடைகளை மறந்து விடுகிறாய் !

உலகின் நிகழ்வுகளை மறந்து விடுகிறாய் !

உன் தைரியத்தை மறந்து விடுகிறாய் !

உன் பொறாமையை மறந்து விடுகிறாய் !

உன் உள்ளத்தை மறந்து விடுகிறாய் !

உன் சொத்தை மறந்து விடுகிறாய் !

உன் பொருட்களை மறந்து விடுகிறாய் !

உன் குடும்பத்தை மறந்து விடுகிறாய் !

உன் பசியை மறந்து விடுகிறாய் !

உன் ருசியை மறந்து விடுகிறாய் !

உன் மதிப்பை மறந்து விடுகிறாய் !

உன் வீட்டை மறந்து விடுகிறாய் !

உன் வண்ணத்தை மறந்து விடுகிறாய் !

உன் தெருவை மறந்து விடுகிறாய்!

உன் வரவை மறந்து விடுகிறாய் !

உன் செலவை மறந்து விடுகிறாய் !

உன் சேமிப்பை மறந்து விடுகிறாய் !

உன் உடல் அளவை மறந்து விடுகிறாய் !

உன் எடையை மறந்து விடுகிறாய் !

உன் இதயத்துடிப்பை மறந்து விடுகிறாய் !

உன் அலங்காரத்தை மறந்து விடுகிறாய் !

உன் கடந்த காலத்தை மறந்து விடுகிறாய் !

உன் எதிர்காலத்தை மறந்து விடுகிறாய் !

உன் கஞ்சத்தனத்தை மறந்து விடுகிறாய் !

உன் தாகத்தை மறந்து விடுகிறாய் !

உன் சௌகர்யங்களை மறந்து விடுகிறாய் !

உன் சுயநலத்தை மறந்து விடுகிறாய் !

இத்தனையையும் நீ மறப்பதால்
ஆனந்தத்தை உள்ளபடி அனுபவிக்கிறாய் !

மறக்கிறாய் என்றால் அவைகளை நீ
விட்டு விட்டாய் என்று அர்த்தமில்லை !

அவைகளின் மேல் இருக்கும்
உன் பந்தத்தை விட்டுவிடுகிறாய் !

அவைகளின் மேல் இருக்கும்
உன் அபிமானத்தை விட்டுவிடுகிறாய் !

நீ எதையும் நஷ்டப்படுவதில்லை !

நீ எதையும் இழக்கவில்லை !

எதுவும் உன்னை விட்டு விலகவில்லை !

உன் மனம் அவைகளிலிருந்து
விடுபடுகிறது !

நீ உன் வாழ்வின் பொறுப்பை
எடுத்துக்கொள்ளவில்லை !

அதனால் பொறுப்பில்லாமல்
இருக்கிறாய் என்று அர்த்தமில்லை !

உன் மனதில் பாதிப்பில்லாமல்
இருக்கிறாய் என்று அர்த்தம் !

இப்பொழுது உனக்குப் புரிந்திருக்குமே !

அதேபோல் சிறு வயதில்
மிகவும் சந்தோஷமாக இருந்ததாக
எல்லோரும் சொல்வர் !

அதுவும் உண்மைதான் !

சிறு வயதில் எல்லோருமே
மிகவும் சந்தோஷமாகத்தானே
இருந்தோம் !

ஏனெனில் நம் வாழ்வைப் பற்றி
நாம் கவலைப்படவில்லை !

நம் வாழ்வைப் பற்றி
நாம் கற்பனை செய்யவில்லை !

நம் வாழ்வைப் பற்றி
நாம் தீர்மானிக்கவில்லை !

ஆனால் வயது ஆக ஆக,
தானாக என் வாழ்க்கை,
என் இஷ்டம்,என் தேவை,
என் பெருமை,என் அவமரியாதை,
என்று பலவித
அஹம்பாவங்களும்,
மமகாரங்களும் வந்து
மனதில் ஒட்டிக்கொள்கின்றன !

அதுவே அமைதியைக் குலைக்கிறது !

சிறு குழந்தைகள் தூங்குவதைப்
பார்க்கும்போது
நமக்கே ஒரு சந்தோஷம் வருகின்றது !

ஏனெனில் குழந்தைகள்
விகல்பம் இல்லாமல் தூங்குகிறது !

தூங்கும்போது உலகில்
உள்ள அனைவருமே நல்லவர்களே !

கொலைகாரனும்,கொள்ளைக்காரனும் கூட
தூங்கும்போது யாருக்கும் ஒரு
கெடுதலும் செய்வதில்லை !

நீ உன்னை மற !
அதுவே அமைதியின் ரஹஸ்யம் !

நீ உன்னை தூக்கத்தில்
மறக்கிறாய் !

அதுபோல் முழித்திருக்கும்போதும்
உன்னை மறக்க ஒரே உபாயம்
நாம ஸங்கீர்த்தனமே !

எப்பொழுதும் விடாமல்
நீ
"க்ருஷ்ணா" என்று
சொல்லிக்கொண்டே வர தானாக
நீ உன்னை மறப்பாய் !

அதனால் பைத்தியம் ஆகி விடுவாய்
என்று நினைக்காதே !

அதனால் உன் பொறுப்புகளை
விட்டுவிடுவாய் என்று நினைக்காதே !

அதனால் உன் கடமைகளை
தள்ளிவிடுவாய் என்று நினைக்காதே !

உன் அபிமானத்தை விட்டு
நிம்மதியாக இருப்பாய் !

விடாது நாமஜபம் செய்தே
எத்தனையோ மஹாத்மாக்கள்
தங்கள் வாழ்க்கையை அமைதியாக
அனுபவித்தார்கள் !

அதனால் அமைதி உன்னிடத்தில்தான்
இருக்கிறது !

இனியும் வெளியில் அமைதியைத் தேடாதே !

உன்னோடு உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !
அவனிடத்தில் உன்னை ஒப்படைத்துவிடு !

உன்னை மறந்துவிடு . . .
அமைதியாக இரு . . .
அமைதியாக பேசு . . .
அமைதியாக வேலையைக் கவனி . . .
அமைதியாகக் கடமையைச் செய் . . .
அமைதியாக தூங்கு . . .
அமைதியாகப் பழகு . . .
அமைதியாக நட . . .
அமைதியாக வாழ் . . .

இனி சாந்தி நிலவட்டும் . . .

Read more...

வியாழன், 25 மார்ச், 2010

சமூக சேவை !


ராதேக்ருஷ்ணா

பலபேர் இன்று
சமூக சேவை என்று
ஒரு மாயையில் மயங்கியிருக்கிறார்கள் !

உலகில் ஒவ்வொருவரும்
சமூகத்தின் அங்கமே !

நானோ,நீயோ இல்லாமல்
ஒரு சமூகம் இல்லை !

நானும்,நீயும் சரியாக ஆனால்
சமூகம் தானாக மாறும் !

கொஞ்சம் உன்னை சரிசெய்வோமா ?

களை எடுப்போமா ?

நீ தயாரா ? 

நீ ஒழுங்காக இருந்தால் அதுவே
மிகப்பெரிய சேவை !

முதலில் நீ ஒழுங்காயிரு !

பிறகு
மற்றவரை வழி நடத்தலாம் !

இப்பொழுது முதல்
உன் சமூக சேவை ஆரம்பம் . . .

ஒவ்வொன்றாக நீ செய்துவரும்போது
உன்னைச் சுற்றி நடப்பவை
மாறுவதை நீயே உணர்வாய் !
யாருக்கும் பாரமாய் இருக்காதே !

யாருக்கும் கெடுதல் நினைக்காதே !

யாரையும் தப்பாக பேசாதே !

யாருக்கும் கெடுதல் செய்யாதே !

யாரையும் கேவலப்படுத்தாதே !

யாரையும் உபத்திரவிக்காதே !

எதையும் வீணடிக்காதே !

நல்லவற்றை ஒதுக்காதே !

நல்லவர்களை பழிக்காதே !

தர்மத்தை விடாதே !

சத்தியத்தை அலட்சியம் செய்யாதே !

அதர்மத்தைச் செய்யாதே !

கெட்டவர்களை கொண்டாடாதே !

 உன் பெருமையை பேசாதே !

 ஊரைக் குப்பையாக்காதே !

யாருக்கும் இடைஞ்சல் தராதே !

யாரைப்பற்றியும் வம்பு பேசாதே !

வதந்தியைப் பரப்பாதே !

தாய் நாட்டை பழிக்காதே !

தாய் மொழியை ஒதுக்காதே !

பெற்றோரை உதாசீனப்படுத்தாதே !

சோம்பேறித்தனத்தை விரும்பாதே !

சுமையை அடுத்தவர் தலையில் ஏற்றாதே !

பொறுப்பிலிருந்து தப்பிக்காதே !

கடமையிலிருந்து நழுவாதே !

நேரத்தைக் கொல்லாதே !

 யாரையும் விரோதியாக்கிக் கொள்ளாதே !

அகம்பாவத்தை வளர்க்காதே !

அத்ருஷ்டத்தைக் கொண்டாடாதே !

முட்டாளாய் வாழாதே !

அறியாமையிடம் தோற்காதே !

நாஸ்தீகத்தைப் பேசாதே !

நம்பிக்கைத் துரோகம் செய்யாதே !

எங்கும்,யாரிடமும் நடிக்காதே !


நோயாளிகளை வெறுக்காதே !

பணத்திற்கு அடிமையாகாதே !

சொன்ன சொல் தவறாதே !

துன்பத்தில் துவளாதே !

இன்பத்தில் ஆடாதே !

பயத்தில் நடுங்காதே !

சஞ்சலத்தில் குழம்பாதே !

நேரம் தவறாதே !

தாழ்வு மனப்பான்மை கொள்ளாதே ! 

இந்து தர்மத்தை விடாதே !  

 க்ருஷ்ணனை சந்தேகிக்காதே !


நாம ஜபத்தை விடாதே !

சரணாகதியைத் தள்ளாதே !

குருவை மறக்காதே !


 இதுவே மிகப்பெரிய சமூக சேவை !
  
ஒவ்வொரு நாளும் இவ்வாறு
இருந்தாயா என்று உன்னை நீயே கேள் !

வாழ்வின் எல்லை வரை இதை நினை !

நீ மாறுவாய் !
 நீ மாற. உன் குடும்பம் மாறும் !
உன் குடும்பம் மாற, உன் தெரு மாறும் !
உன் தெரு மாற, உன் ஊர் மாறும் !
உன் ஊர் மாற,உன் சமூகம் மாறும் !
 சமூகம் மாற, தேசம் மாறும் !
தேசம் மாற,உலகம் மாறும் !

அதனால் உன் சமூக சேவையைத் தொடங்கு !

தாமதம் செய்யாதே ! 
 

Read more...

புதன், 24 மார்ச், 2010

ஸ்ரீ ராம ஜெயம்!

ராதேக்ருஷ்ணா

 ஸ்ரீ ராம நவமி !

எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் !

 மனிதன் இருக்க வேண்டிய முறையை
வாழ்ந்துகாட்ட ராஜாதிராஜன்
வந்த நாள் ! 
 
எல்லோரும் வெறுத்து ஒதுக்கும்,
நவமி திதிக்கும் மஹிமை தர,
எங்கள் குலபதி குலசேகரனின்
க்ஷத்திரிய வம்சத்தில்,
தினகரன் அவதரித்த நாள் !

எதற்கும் அஞ்சாத
தனி ஒரு வீரன் வந்துதித்த நாள் !

பிள்ளையில்லாத கிழவன் தசரதன்,
ரிஷ்யஷ்ருங்கர் சொல்படி,அயோத்யாவில்,
சரயு நதிக்கரையில்,யாகம் செய்ய,
பாத்திரத்தில் பாயசமாக வந்து,
3 ராணிகளிடம் 4 பிள்ளையாக வந்து,
அதில் மூத்தவனாக புராணபுருஷன்
பூமியில் வந்த நாள் !

கௌசலையின் மணிவயிற்றில்
12 மாதம் சுகமாக சிறைபட்டு,
அவளுக்கு பரமானந்தத்தை
அள்ளித் தந்து, வைகுண்டபதி
பூலோக ஜனங்களின் துயர் தீர,
மனிதனாக வந்துதித்த நாள் !
   
 தந்தை சொன்ன வார்த்தைக்காக,
விஸ்வாமித்திரரோடு வனம் சென்று,
தாடகையை வதம் செய்து, கல்லையும்
பெண்ணாக மாற்றிய
கருணாமூர்த்தி அவதரித்த நாள் !

 கர்மவீரர் ஜனகரிடமிருந்த சிவபெருமானின்
வில்லை வளைத்து,என் தாய்
சிங்காரச் சீதையை மணந்து,
பரசுராமனின் வில்லை வாங்கி
அவன் கர்வத்தை அடக்கின,
ஏக பத்தினி விரதனான,
என் ப்ரபு அவதரித்த நாள் !
பிதாவின் சத்தியத்தைக் காப்பாற்ற,
தன் சொத்தான ராஜ்ஜியத்தைத் துறந்து,
மரவுரி தரித்து,கைங்கர்ய சிகாமணி
லக்ஷ்மணனோடும்,ப்ரிய நாயகி
சீதையுடனும்,வனத்திற்கு சென்ற, 
அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட நாயகன்
அவதரித்த புண்ணிய நாள் !

ஸ்ருங்கிபேரபுரத்தில்,வேடுவன்
குகனை தோழனாகக் கொண்டு,
அவனுக்கும் அவன் கூட்டத்திற்கும்,
அனுக்ரஹம் செய்து,ஆலம்பாலால்,
ஜடாமுடி தரித்த, ஜகன்னாதன்
அவதரித்த நாள் ! 

வனவாசிகளின் கண்களுக்கு
தன்னுடைய அழகான உருவத்தை
மறைக்காமல் காட்டிக்கொடுத்து,
மரவுரி தரித்து அவர்களை மயங்கடித்து,
ராக்ஷசர்களை வதம் செய்து,ரிஷிகளின்
ஆனந்தத்தை அதிகரித்த, 
மன்னவன் பூமியில் வந்த நாள் !

உத்தமி கைகேயி மாதாவின் தவப்புதல்வன்
அற்புத பரதன்,அயோத்யா வாசிகளோடு வந்து,
நாட்டிற்கு வருக என கதற, அவனுக்கு,
கீதையை உபதேசித்து,தன் பாதுகையையும்
தந்து,அவனைப் பழியிலிருந்து காத்த,
ரகூத்தமன் அவதரித்த நாள் ! 
 
சித்திரகூடத்திலிருக்க,ஜயந்தன்
சிறு காக்கையாக வந்து,எங்கள்
சீதையின் அழகு திருமுலைத் தடங்களைக்
காயப்படுத்த,அவன் மீது
புல்லையே அஸ்திரமாக ஏவிய
வல்லவன் அவதரித்த நாள் !

அசிங்கமான சூர்ப்பணகையின்,
மூக்கையும்,காதையும் வெட்டி,
அவளுக்காக சண்டையிட வந்த 
14000 ராக்ஷஸ வீரர்களை தனியாக
நின்று த்வம்சம் செய்த
அசகாயசூரன் அவதரித்த நாள் !

கிழப்பறவை ஜடாயுவையும் தந்தையாக
மதித்து,அவருடைய இறக்கையின் கீழ்
ஆனந்தமாக வசிப்போம் என்று சொல்லி,
பஞ்சவடியில் பர்ணசாலையில் வசித்த,
ராகவசிம்மன் அவதரித்த நாள் !

மாயமான் என்று தெரிந்தும்,அவதார
நோக்கமான இராவண வதத்திற்க்காக,
அதைத் துரத்தி,லக்ஷ்மணனைப் பிரிந்து,
சீதையை இராவணன் அபகரிக்கச் செய்து,
சீதா விரஹத்தில் புலம்பின,
சீதாராமன் அவதரித்த நாள் !

ஜடாயுவுக்கும் மோக்ஷம் தந்து,
கபந்தனும் வழி காட்ட,
சபரியை மோக்ஷத்திற்கு வழியனுப்பி,
  ரிஷ்யமூக பர்வதத்தில் சுக்ரீவனைச்
சந்திக்க,அஞ்சனையின் மைந்தன்,
ராம பக்த ஹனுமானின் தோளில் சென்ற,
வீரராகவன் அவதரித்த நாள் !

குரங்கரசன் சுக்ரீவனை நண்பனாகக் கொண்டு,
வாலியை மறைந்து நின்று அம்பெய்தி,
கிஷ்கிந்தையில் சுக்ரீவனுக்குப் பட்டாபிஷேகம்
செய்வித்து,மழைக்காலத்தில் சீதா விரஹத்தில்
தஹித்த, தீனதயாளன் அவதரித்த நாள் !

 ஆஞ்சநேயனை தூதுவனாக்கி,அவனிடம்
தன் கைமோதிரத்தையும் தந்து,பழங்கதைகளைச்
சொல்லி,சீதைக்குச் சமாதானம் சொல்லி,
ஆஞ்சநேயனின் பக்தியையும்,சீதையின்
பதிவிரதத்தையும் நிரூபித்த
பக்தவத்ஸலன் அவதரித்த நாள் !

ஆஞ்சநேயன் தந்த சிதையின் சூடாமணியை
வாங்கி ஆனந்தக்கண்ணீர் சொரிந்து,
குரங்குகளை படையாகக் கொண்டு,
கடற்கரையில் குரங்குகளோடு இருந்து,
இராவணன் தம்பி தர்மாத்மா வீபீஷணனுக்கு,
சரணாகதி செய்வித்து,தன் கூட்டத்தில்
சேர்த்துக்கொண்ட,சரணாகதவத்ஸலன்
அவதரித்த புண்ணிய நாள் !

 விபீஷணாழ்வார் சொன்னபடி,
கடலரசனிடம் சரணாகதி செய்து,
கோபத்தில் அவனை அழிக்கக் கிளம்பி,
அவன் தன்னிடம் சரணாகதியடைய,
அவனிடம் உபாயம் கேட்டு, குரங்குகளைக்
கொண்டு கடலில் ஒரு பாலம் கட்டி,
அணில்களுக்கும் அருள் செய்த,
சகலகலாவல்லவன் அவதரித்த நாள் ! 
 
 விரோதியின் கோட்டைக்குள் நுழைந்து,
இலங்கையில் தங்கி,இராவணனை
அவனுடைய கூட்டத்தாரோடு அழித்து,
சீதையை மீட்டு,அவளின் கற்பை
உலகிற்கு நிரூபணம் செய்து,
புஷ்பகவிமானத்தில் மீண்டும்
அயோத்யா வந்த,
ரகுகுலதிலகன் அவதரித்த நாள் !

 14 வருஷம் பித்ரு வாக்ய பரிபாலனம்
செய்து,ஐவராக ஆனோம் என்று சொல்லி,
கைகேயி மாதாவின் திருவடிகளில் வணங்கி,
ஜடாமுடியைக் களைந்து,சுற்றமும்,நட்பும்,
புடை சூழ,விண்ணும் மண்ணும் மகிழ,
அயோத்யாவில் பட்டாபிஷேகம்
செய்து கொண்ட,
ராஜாராமன் அவதரித்தத் திருநாள் !

 தன் கதையை,தன் குழந்தைகள்
லவகுசன் சொல்ல,தானும் ஜனங்களோடு அமர்ந்து,
தன்னை மறந்து கேட்டு,
சத்சங்க பலத்தை நிரூபணம் செய்த,
ஸ்ரீ மன் நாராயணன் பூமிக்குத்
தானே ஆசைப்பட்டு வந்த நாள் !

11000 வருஷங்கள் பூமியிலிருந்து,
மனிதன் வாழவேண்டிய முறை இதுதான்
எனக் காட்டி,புல்லையும்,எறும்பையும்,
மனிதர்களையும்,யாவரையும்,
வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்று,
எங்கள் வால்மீகியையும் கவியாக்கிய,
நரோத்தமன்,
அவதரித்த புண்ணிய நாள் இன்று !

இன்று கேட்கிறேன் ராமனான க்ருஷ்ணா !

இரு வரம் தருவாயா !

சத்தியமாகச் செய்யவேண்டும் !

அயோத்யாவில் உனக்கு ஒரு
தங்கமாளிகை கட்டவேண்டும் !

 நீ கட்டின பாலத்தை
எங்கள் சந்ததிகள் அனுபவிக்க வேண்டும் !

நீ செய்வாய் !

க்ருஷ்ணா நான் உன் பக்தன் !
ஆனாலும் இப்போது உன்னை
ராமனாக நினைத்துப் பேசிவிட்டேன் !

உடுப்பிக்கு அடியேன் வந்தபோது
நீ
ராமனாகத்தானே நின்றாய் !

அதனால் இது என் குற்றமல்ல !
உன் குற்றமே ! 

ஸ்ரீ ராம ஜெயம் ! ஸ்ரீ ராம ஜெயம் ! ஸ்ரீ ராம ஜெயம் !
ஜெய் சீதாராம் ! 

ஜெய் ஸ்ரீ ராதேக்ருஷ்ணா !
ஜெய் ஸ்ரீ ராதேராதே !
ஜெய் ஸ்ரீ ப்ருந்தாவன பூமிக்கு !

Read more...

வியாழன், 18 மார்ச், 2010

க்ருஷ்ணன் இருக்கிறான் !

ராதேக்ருஷ்ணா !

இருக்கிறான் !
க்ருஷ்ணன் இருக்கிறான் !
உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

ஆகாசமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !
பூமியாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

காற்றாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

நீராக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

அக்னியாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

ஆகாரமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

வஸ்திரமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

கையாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

காலாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

கண்ணாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

காதாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

மூக்காக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

வயிறாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

பசியாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

சப்தமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

நாவாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

செருப்பாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

தலையணையாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

படுக்கையாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

போர்வையாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

தாயாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

தந்தையாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

பந்துவாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

குழந்தையாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

சொத்தாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

புத்தியாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

மனதாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

சொல்லாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

செயலாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

ஞாபகசக்தியாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

வெற்றியாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

சந்தோஷமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

பாடலாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

ஆடலாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

நாதமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

தாவரங்களாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

மிருகங்களாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

மனிதர்களாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

பூச்சிகளாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

பூக்களாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

உணர்வாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

உயிராக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

ஆத்மாவாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

அழகாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

அற்புதமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

அதிசயமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

தேவர்களாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

ஆனந்தக்கண்ணீராக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

மயிர்கூச்சலாய் உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

பக்தியாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

நாமஜபமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

நிகழ்வாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

எதிர்காலமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

மனசாட்சியாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

நிலவாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

நக்ஷத்திரங்களாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

நகங்களாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

நட்பாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

பரிகாசமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

புண்ணியமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

புலன்களாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

புத்தகமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

ஸ்லோகங்களாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

கீதையாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

பாகவதமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

சிலையாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

பகலாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

இரவாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

வண்ணங்களாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

தங்கமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

வைரமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

பவழமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

முத்தாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

வைடூரியமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

மரகதமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

கேள்வியாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

பதிலாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

வெண்ணையாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

வெல்லமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

செல்லமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

கோலாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

பாலாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

தயிராக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

நெய்யாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

பக்ஷணமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

மாலையாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

மருதாணியாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

முத்தமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

தோடாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

கொலுசாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

வளையலாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

மூக்குத்தியாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

கட்டிலாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

தொட்டிலாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

வேதமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

 சத்சங்கமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !


பஜனையாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

கோயிலாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

அர்ச்சனையாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

பாரதபூமியாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

இந்துதர்மமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் !

அதனால் அனுபவித்து விடு !
உன் க்ருஷ்ணனை அனுபவித்து விடு !
உன் இஷ்டப்படி அனுபவித்து விடு !
இந்த ஜன்மாவில் அனுபவித்து விடு !
இந்த வயதில் அனுபவித்து விடு !
இந்த வருஷத்தில் அனுபவித்து விடு !
இந்த மாதத்தில் அனுபவித்து விடு !
இந்த வாரத்தில் அனுபவித்து விடு !
இந்த நாளில் அனுபவித்து விடு !
இந்த நேரத்தில் அனுபவித்து விடு !
இந்த நிமிஷத்தில் அனுபவித்து விடு !
இந்த நொடியில் அனுபவித்து விடு !

அனுபவித்து விடு !
கட்டாயம் அனுபவித்து விடு!
நிச்சயம் அனுபவித்து விடு !
தயவு செய்து அனுபவித்து விடு !

எத்தனையோ மஹாத்மாக்களின்
முயற்சி வீண் போகாதபடி
இந்த மனித வாழ்வில்
அனுபவித்து விடு !


அப்பொழுதுதான் என் ஆத்மா
சாந்தியடையும் . . .
                   


Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP