ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 29 டிசம்பர், 2009

சடகோபா !





ராதேக்ருஷ்ணா




சடகோபா !
கலி பிறந்தவுடன் நீ
பிறந்ததால் எங்களுக்கும்
கண்ணனின் கருணை கிடைத்தது . . .

பராங்குசா !
நீ மதுரகவியை  அயோத்தியிலிருந்து 
அழைத்ததால்தானே அகம்பாவிகளான
 எங்களுக்கும் குருமஹிமை புரிந்தது . . .


காரிமாறா !
உன் திருவாக்கின் பலத்தால்தான்
அறியாமை மூடர்களான எங்களுக்கும்
யதிராஜன் ராமானுஜன் கிடைத்தான் . . .

வகுளாபரணா !
நீ நாதமுனிக்கு இரங்கியதால்தானே
சரீர அபிமானிகளான எங்களுக்கும்
நாலாயிர திவ்ய ப்ரபந்தம் கிடைத்தது . . .

 குறுகூர் நம்பி !
உன் வாயிலிருந்து ஒரு பாசுரம் வாங்க,
108 திவ்யதேசப் பெருமாள் வரிசையில்
நின்றதால்தானே, எங்களுக்கும் பக்தி வந்தது . . .

உடையநங்கையின் புதல்வா !
நீ அமர்ந்த திருப்புளியாழ்வார்
இன்னும் இருப்பதால்தானே
எங்கள் மரம் போன்ற மனமும் கரைகின்றது . . .

வைஷ்ணவ குலபதியே ! 
உன் பெருமையைப் பேசினதால்தானே
கம்பனின் ராமாயணத்தையும்
ஸ்ரீரங்கராஜன் எங்களுக்குத் தந்தான் . . .


வேதம் தமிழ் செய்த பெருமாளே !
உன்னைக் காண நவதிருப்பதி
எம்பெருமான்களும் வருவதால்தானே
எங்களுக்கும் நவ கருட சேவை கிடைக்கிறது . . .


ப்ரபன்ன ஜன கூடஸ்தரே !
நீ வைகுண்டம் செல்லத் தயாரானதால்தானே
சோம்பேறிகளான எங்களுக்கும்
வைகுண்ட ஏகாதசிக்கு முழிக்கத் தோன்றுகிறது . . .
  





 சடகோபா !
நீ
கலியுகத்தில் வந்திருக்காவிட்டால்
எங்கள் கதி என்ன ?

நம்மாழ்வாரே !
இன்றும் நீ இருந்து
எங்களை ஆட்கொள்வதால்தானே
பகவானிடத்தில்
பூரண நம்பிக்கையில்லாத
எங்களுக்கும்
அவனுடைய
துயரறு சுடரடியில் சரணாகதி
செய்யத் தோன்றுகிறது . . .



அதனால்
நம்மாழ்வாரே !
ஒரு நாளும் இந்தப் பாவிகளை விட்டு
எங்கும் செல்லாதீர் . . .

நீ தான் எங்கள் பலம் . . .
நீ தான் எங்கள் தேவை . . .
நீ தான் எங்கள் தெய்வம் . . .
நீ தான் எங்கள் மோக்ஷம் . . .

மதுரகவியே!
உன் ஆசாரியரிடம் சொல் . . .
நாங்கள் சொன்னால்
கேட்கமாட்டார் . . .

இந்தத் தாமிரபரணி
நதிக்கரையை விட்டு
எங்கும்
செல்ல வேண்டாம் . . .


சத்குரு சடகோபா...
சத்சிஷ்யா மதுரகவி...
 இந்த ஏழைக்கூட்டத்தைக் காத்தருளும் . . .


பக்தியில்லாத பாவிகளை
ரக்ஷித்தருளும் . . .

பயனன்றாகிலும்,
பாங்கல்லராகிலும்,
இந்தக்
கலியுக ஜனங்களை
செயல் நன்றாகத் திருத்தி பணி கொள்வீர்...



 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP