ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 31 டிசம்பர், 2009

வாழ்ந்து காட்டு ! ! !





ராதேக்ருஷ்ணா


பூமியில் விதைக்கப்பட்ட
விதை கூட
எதிர்ப்பைச் சமாளித்து
முளைத்துக் காட்டுகிறது !

ஒவ்வொரு நாளும்
காட்டில் சிங்கத்தால்
கொல்லப்படுகின்ற நிலையில்
உயிர் வாழும் மான் கூட
பிரச்சனைகளை சமாளிக்கின்றது !

பெரிய மீன்களால் ஆகாரத்திற்காக
விழுங்கப்படும் நிலையிலிருக்கும்
சிறிய மீன்களும் கடலில்
புலம்பாமல் வாழ்கின்றன !

மனிதர்களால் எப்பொழுது
வேண்டுமானாலும்
வெட்டப்படுகின்ற வாழ்க்கையை
அனுபவிக்கின்ற மரங்களும்
நிமிர்ந்து நிற்கின்றன !

ஒவ்வொரு நாளும்
ஆகாரத்திற்காக பல மைல்கள்
தூரம் பறந்தாக வேண்டிய பறவைகளும்
மனம் சலிப்படையாமல்
முயற்சி செய்கின்றன !

சிறியதான உடலையும்,
பல கஷ்டங்களையும் சமாளிக்க
வேண்டிய கட்டாயத்திலிருக்கும்
எறும்புகள் கூட துவண்டு போகாமல்
வாழ்ந்து காட்டுகின்றன !

தண்ணீரே இல்லாத பாலைவனத்தில்
உயிர் தரிக்க வேண்டிய நிலையிலிருக்கும்
ஒட்டகங்களும், எங்கும் ஓடிப்போகாமல்
அதில் வாழ்ந்து காட்டுகின்றன !

ஒரு நாள் மட்டுமே வாழ்க்கை
என்ற நிலையிலிருக்கும் பலவகை
பூச்சிகளும், அந்த ஒரு நாளில்
உருப்படியாக வாழ்கின்றன !

இப்படி பலகோடி உயிரினங்கள்
உலகில் வாழ முடியுமென்றால்
உன்னால்
வாழ முடியாதோ ? ! ?

எப்படியும் வாழ்ந்தே ஆகவேண்டிய
வாழ்க்கை . . .

அதை ஏன் புலம்பிக்கொண்டு
வாழ்கின்றாய் !
அதை ஏன் நொந்துபோய்
வாழ்கின்றாய் !
அதை ஏன் வெறுத்துக்கொண்டு
வாழ்கின்றாய் !
அதை ஏன் தப்பிக்கப் பார்க்கிறாய் !
அதை ஏன் அழுதுகொண்டு
வாழ்கின்றாய் !

சந்தோஷமாகத்தான் வாழ்ந்து பாரேன் !

இது உன் வாழ்க்கை...
ஆனந்தமாக வாழ் . . .

க்ருஷ்ண நாம ஜபத்தோடு
வாழ்ந்து காட்டு . . .
க்ருஷ்ண பக்தியோடு
வாழ்ந்து காட்டு . . .
க்ருஷ்ணனின் சந்தோஷத்திற்காக
வாழ்ந்து காட்டு . . .

வாழ்ந்து காட்டு . . .உன்னால் முடியும் . . .




Read more...

புதன், 30 டிசம்பர், 2009

உனக்கென்று !





ராதேக்ருஷ்ணா


உலகில் உனக்கென்று ஒரு
இடம் என்றுமுண்டு !

உலகில் உனக்கென்று ஒரு
வாழ்க்கை உண்டு !

உலகில் உனக்கென்று ஒரு
பசி உண்டு ! 

உலகில் உனக்கென்று ஒரு
ஆகாரம் உண்டு !

உலகில் உனக்கென்று 
மனிதர்கள் உண்டு !

உலகில் உனக்கென்று
காற்று உண்டு !

உலகில் உனக்கென்று
உடுத்த ஆடை உண்டு !

உலகில் உனக்கென்று
இளைப்பாற இடம் உண்டு !

உலகில் உனக்கென்று ஒரு
அமைதி உண்டு !

உலகில் உனக்கென்று ஒரு
பலம் உண்டு !

உலகில் உனக்கென்று ஒரு
சமாதானம் உண்டு !

உலகில் உனக்கென்று ஒரு
சந்தோஷம் உண்டு !

உலகில் உனக்கென்று ஒரு
நேரம் உண்டு !

உலகில் உனக்கென்று ஒரு
ப்ரயாணம் உண்டு !

உலகில் உனக்கென்று
பழங்கள் உண்டு !

உலகில் உனக்கென்று
ஒதுங்க நிழல் உண்டு !

உலகில் உனக்கென்று
குடிக்க நீர் உண்டு !

உலகில் உனக்கென்று
அமர இடம் உண்டு !

உலகில் உனக்கென்று ஒரு
படுக்கை உண்டு !

உலகில் உனக்கென்று ஒரு
தூக்கம் உண்டு ! 


உலகில் உனக்கென்று ஒரு
வெளிச்சம் உண்டு !

உலகில் உனக்கென்று ஒரு
விழிப்பு உண்டு !
  
உலகில் உனக்கென்று
கடமை உண்டு !
  
உலகில் உனக்கென்று ஒரு
மனம் உண்டு !

உலகில் உனக்கென்று
ஆத்ம பந்துக்கள் உண்டு !

உலகில் உனக்கென்று
க்ருஷ்ண நாம ஜபம் உண்டு !

உலகில் உனக்கென்று
ராதையும்,க்ருஷ்ணனும் உண்டு !

உலகில் உனக்கென்று
பகவானுடைய கோயில்கள் உண்டு !

உலகில் உனக்கென்று
சத்சங்கம் உண்டு !

உலகில் உனக்கென்று
க்ருஷ்ண லீலா உண்டு !

உலகில் உனக்கென்று
ப்ருந்தாவனம் உண்டு !

உலகில் உனக்கென்று
பகவத் ப்ரசாதம் உண்டு !

உலகில் உனக்கென்று
குரு உண்டு !

உலகில் உனக்கென்று
இத்தனை இருக்கும்போது
ஏன்
எதுவுமில்லை என்கிறாய் ! 


இதுபோல் உனக்கென்று
பல உண்டு !

அதனால் இனிமேல் சமாதானாமாக இரு !

இதோ உனக்கென்று
இந்த உபதேச ஆனந்த வேதம்
வந்ததல்லவா ! ! !

அதனால் 
தெளிந்து விடு !

பயத்தை விட்டு விடு !
மனக்குழப்பத்தை கொன்று விடு !
பலவீனத்தை மறந்து விடு !
பகைமையை அழித்து விடு !
சோம்பேறித்தனத்தை மாற்றி விடு !

வாழ்க்கையை வாழ்ந்து விடு !
சந்தோஷமாக பொழுதை உபயோகப்படுத்திவிடு !






Read more...

செவ்வாய், 29 டிசம்பர், 2009

சடகோபா !





ராதேக்ருஷ்ணா




சடகோபா !
கலி பிறந்தவுடன் நீ
பிறந்ததால் எங்களுக்கும்
கண்ணனின் கருணை கிடைத்தது . . .

பராங்குசா !
நீ மதுரகவியை  அயோத்தியிலிருந்து 
அழைத்ததால்தானே அகம்பாவிகளான
 எங்களுக்கும் குருமஹிமை புரிந்தது . . .


காரிமாறா !
உன் திருவாக்கின் பலத்தால்தான்
அறியாமை மூடர்களான எங்களுக்கும்
யதிராஜன் ராமானுஜன் கிடைத்தான் . . .

வகுளாபரணா !
நீ நாதமுனிக்கு இரங்கியதால்தானே
சரீர அபிமானிகளான எங்களுக்கும்
நாலாயிர திவ்ய ப்ரபந்தம் கிடைத்தது . . .

 குறுகூர் நம்பி !
உன் வாயிலிருந்து ஒரு பாசுரம் வாங்க,
108 திவ்யதேசப் பெருமாள் வரிசையில்
நின்றதால்தானே, எங்களுக்கும் பக்தி வந்தது . . .

உடையநங்கையின் புதல்வா !
நீ அமர்ந்த திருப்புளியாழ்வார்
இன்னும் இருப்பதால்தானே
எங்கள் மரம் போன்ற மனமும் கரைகின்றது . . .

வைஷ்ணவ குலபதியே ! 
உன் பெருமையைப் பேசினதால்தானே
கம்பனின் ராமாயணத்தையும்
ஸ்ரீரங்கராஜன் எங்களுக்குத் தந்தான் . . .


வேதம் தமிழ் செய்த பெருமாளே !
உன்னைக் காண நவதிருப்பதி
எம்பெருமான்களும் வருவதால்தானே
எங்களுக்கும் நவ கருட சேவை கிடைக்கிறது . . .


ப்ரபன்ன ஜன கூடஸ்தரே !
நீ வைகுண்டம் செல்லத் தயாரானதால்தானே
சோம்பேறிகளான எங்களுக்கும்
வைகுண்ட ஏகாதசிக்கு முழிக்கத் தோன்றுகிறது . . .
  





 சடகோபா !
நீ
கலியுகத்தில் வந்திருக்காவிட்டால்
எங்கள் கதி என்ன ?

நம்மாழ்வாரே !
இன்றும் நீ இருந்து
எங்களை ஆட்கொள்வதால்தானே
பகவானிடத்தில்
பூரண நம்பிக்கையில்லாத
எங்களுக்கும்
அவனுடைய
துயரறு சுடரடியில் சரணாகதி
செய்யத் தோன்றுகிறது . . .



அதனால்
நம்மாழ்வாரே !
ஒரு நாளும் இந்தப் பாவிகளை விட்டு
எங்கும் செல்லாதீர் . . .

நீ தான் எங்கள் பலம் . . .
நீ தான் எங்கள் தேவை . . .
நீ தான் எங்கள் தெய்வம் . . .
நீ தான் எங்கள் மோக்ஷம் . . .

மதுரகவியே!
உன் ஆசாரியரிடம் சொல் . . .
நாங்கள் சொன்னால்
கேட்கமாட்டார் . . .

இந்தத் தாமிரபரணி
நதிக்கரையை விட்டு
எங்கும்
செல்ல வேண்டாம் . . .


சத்குரு சடகோபா...
சத்சிஷ்யா மதுரகவி...
 இந்த ஏழைக்கூட்டத்தைக் காத்தருளும் . . .


பக்தியில்லாத பாவிகளை
ரக்ஷித்தருளும் . . .

பயனன்றாகிலும்,
பாங்கல்லராகிலும்,
இந்தக்
கலியுக ஜனங்களை
செயல் நன்றாகத் திருத்தி பணி கொள்வீர்...



 

Read more...

ஞாயிறு, 27 டிசம்பர், 2009

சிரிப்பு !





ராதேக்ருஷ்ணா


சிரிப்பு....

வாழ்க்கையின் மிகப்பெரிய
பொக்கிஷம்...

வார்த்தைகளால் வர்ணிக்க
முடியாத அனுபவம்...

ஆனால்...
சிரித்த காரணத்தைக்
கொஞ்சம் அலசிப் பார்ப்போமா ?!? 
 

உயிரில்லாத பொம்மைக்காக
சிரித்தாய் !

தாய் தூக்கிக் கொண்டதற்காக
சிரித்தாய் !

தந்தையுடன் வெளியில் செல்வதற்காக
சிரித்தாய் !

மற்றவர் கொஞ்சியதற்காக
சிரித்தாய் !

புத்தாடை கிடைத்ததற்காக
சிரித்தாய் !

உன் ஆடை நன்றாகயிருக்கிறது,
என்று அடுத்தவர் சொல்ல
சிரித்தாய் !

தோழர்களுடன்,தோழிகளுடன்
விளையாடிச் சிரித்தாய் !

போட்டிகளில் பரிசு
வென்றதற்காகச் சிரித்தாய் !

பலபேர் கொண்டாடும்போது
சிரித்தாய் !

பிடித்த ஆகாரம் சாப்பிட்டுச்
சிரித்தாய் !

பட்டாசு வெடித்துச்
சிரித்தாய் !

அடுத்தவரின் பைத்தியக்காரத்தனத்தைப்
பார்த்துச் சிரித்தாய் !

உன்னைக் கஷ்டப்படுத்துபவர்களின்
கஷ்டத்தைப் பார்த்துச் சிரித்தாய் !

உன்னைக் கொண்டாடுபவர்களை
பார்த்துச் சிரித்தாய் !

உன் வெற்றியில் சிரித்தாய் !

உனக்குப் பிடித்தவர்களின்
சந்திப்பில் சிரித்தாய் !

அழகானவர்களைப் பார்த்துச்
சிரித்தாய் !

படிப்பில் முதலிடம்
பிடித்ததற்குச் சிரித்தாய் !

 காமத்தில் மயங்கிச்
சிரித்தாய் !

நினைத்தது நடந்தததற்காகச்
சிரித்தாய் !

பிரச்சனைகள் முடிந்தவுடன்
சிரித்தாய் !

பிரச்சனைகளிலிருந்து தப்பித்ததற்காகச்
சிரித்தாய் !

வியாதி சரியானவுடன்
சிரித்தாய் !

வெளியூருக்குச் செல்லச்
சிரித்தாய் !

அருமையாக தூங்கி எழுந்தவுடன்
சிரித்தாய் !

சிறிது நேரம் இளைப்பாறியதற்காகச்
சிரித்தாய் !

குடும்பத்தினர் கொண்டாடியதற்காகச்
சிரித்தாய் !

ஊரில் மரியாதை கிடைத்ததற்குச்
சிரித்தாய் !

பிடித்த பொருளை
வாங்கியவுடன் சிரித்தாய் !

இழந்தது மீண்டும்
கிடைத்தவுடன் சிரித்தாய் !

பெரிய கூட்டத்தில்
உன் வார்த்தை எடுபட்டதற்காகச்
சிரித்தாய் !

வைத்தியன் ஒன்றும்
பயப்பட அவசியமில்லை என்று
சொன்னவுடன் சிரித்தாய் !

புதிய வேலை கிடைத்ததற்காகச்
சிரித்தாய் ! 

வேலை செய்யுமிடத்தில்
சம்பள உயர்வு கிடைத்ததை
நினைத்துச் சிரித்தாய் !

உன் அழகை அடுத்தவர்
கொண்டாடியதை
நினைத்துச் சிரித்தாய் !

இன்னும் எத்தனையோ
விஷயங்களுக்காகச்
சிரித்தாய் !

சிரித்துக்கொண்டிருக்கிறாய் !

இனியும்!
சிரிக்கத்தான் போகிறாய் !

இதையெல்லாம் விட
உன்னதமான
ஒரு சிரிப்பு உண்டு !  !  !

இந்த அத்தனை
சிரிப்புகளையும் சேர்த்தாலும்
அதற்குச் சமமாகாது !

அதுதான் பரமானந்தச் சிரிப்பு . . .

விடாது நாம ஜபம் செய்ய,
தொடர்ந்து குரு த்யானம் செய்ய,
அந்தச் சிரிப்பு வரும்...

அது தெய்வீகச் சிரிப்பு . . .
ஆத்மாவின் சிரிப்பு . . .
மனதின் சிரிப்பு . . .
உண்மையான சிரிப்பு . . .
வாழ்வின் சிரிப்பு . . .

ஆண்டாள் சிரித்தாள் !
பொய்கையாழ்வார் சிரித்தார் !
கணிகண்ணன் சிரித்தான் !
மஞ்சுளா சிரித்தாள் !
ராஜா அம்பரீஷன் சிரித்தான் !
தேவஹூதி சிரித்தாள் !
குகன் சிரித்தான் !
பீஷ்மர் சிரித்தார் !

இன்னும் பலர் அந்த
தெய்வீகச் சிரிப்பை சிரித்தனர் ! ! ! 
 
குருஜீ அம்மா சிரிக்கின்றார் . . .
வந்து பார்...
கேட்டுப் பார்...

நீயும் நாம ஜபம் செய்ய
உனக்கும் அந்தச் சிரிப்பு வரும் . . .




சிரித்துப் பார் . . .
அனுபவித்துப் பார் . . .
பரமானந்தத்தில் திளைத்துப் பார் . . .

சீக்கிரம் தெய்வீகச் சிரிப்பு வரட்டும் . . .

அதைப் பார்க்க
நான்
மிக ஆசையுடன்
காத்திருக்கின்றேன் ! ! !



 

Read more...

அழுகை !





ராதேக்ருஷ்ணா


அழுகை...அழுகை...அழுகை...

எதற்கெல்லாம் அழுகை . . .



யாராவது திட்டினால்
அழுகை வருகிறதே !

அவமானப்படுத்தினால்
அழுகை வருகிறதே !

எதையாவது இழந்தால்
அழுகை வருகிறதே !

நினைப்பது நடக்காவிட்டால்
அழுகை வருகிறதே !

தவறுக்கு தண்டனை கிடைத்தால்
அழுகை வருகிறதே !

உன் பாபத்தை அடுத்தவர் கூறினால்
அழுகை வருகிறதே !

கஷ்டத்தில் யாரும் கண்டுகொள்ளாவிட்டால்
அழுகை வருகிறதே !



உடலில் வியாதி வந்தால்
அழுகை வருகிறதே !

பிடித்தவர்கள் இறந்தால்
அழுகை வருகிறதே !

தோற்றுப்போய்விட்டால்
அழுகை வருகிறதே !

பொருள் நஷ்டமானால்
அழுகை வருகிறதே !

பிடிக்காத வேலையைச் செய்தால்
அழுகை வருகிறதே !

நெருங்கினவர்கள் பிரிந்தால்
அழுகை வருகிறதே !

ஒழுங்கான சாப்பாடு கிடைக்காவிட்டால்
அழுகை வருகிறதே !

  பிடித்த ஆடை கிழிந்துவிட்டால்
அழுகை வருகிறதே !

நல்ல செருப்பு தொலைந்துவிட்டால்
அழுகை வருகிறதே !

யாராவது புரிந்துகொள்ளாவிட்டால்
அழுகை வருகிறதே !

 மரண பயத்தில்
அழுகை வருகிறதே !

பயங்கரமான கனவு கண்டால்
அழுகை வருகிறதே !

இப்படி எவ்வளவு அழுகை . . .

சிறு வயதில்
பொம்மைக்கு அழுகை . . .

பள்ளிக்கூடம்
செல்ல அழுகை. . .

பாடம் படிக்க
அழுகை. . .

இள வயதில் காதல் என்று
உளறல் அழுகை . . . 
 
வயதான காலத்தில்
தனிமை என்று அழுகை . . .

சீ .... சீ
என்ன ப்ரயோஜனம் . . .

இத்தனை அழுகையினால்
என்ன கிடைத்தது ?

அடுத்தவர்களை ஏமாற்றினாய் . . .

சுய பச்சாதாபம் சம்பாதித்தாய் . . .

இவையில்லாமல்
எத்தனை சந்தர்ப்பத்தில்
பொய்யாய் அழுதாய் . . .

வெட்கப்படு . . .

இது போல் தண்டமாய்
அழுது வாழ்க்கை
வீணாகிவிட்டதே . . .


இதுவரை எத்தனை தடவை
க்ருஷ்ணனுக்காக
அழுதிருக்கிறாய் . . .

இதுவரை எத்தனை முறை
உன் தவறுகளுக்காக
மனம் நொந்து
அழுதிருக்கிறாய் . . .


என்று க்ருஷ்ணனுக்காக
அழப் போகிறாய் . . .

தினமும் உன்னையே
கேட்டுக்கொள் . . . 
"இன்று க்ருஷ்ணனுக்காக
அழுதேனா ?"
முதலில் கேள் . . .
கேட்டால் உனக்கே புரியும் !

அழுது பார் . . .

மீராவைப் போல் அழுது பார் !
ஆண்டாளைப் போல் அழுது பார் !
நம்மாழ்வாரைப் போல் அழுது பார் !
திருமங்கையாழ்வாரைப் போல் அழுது பார் !
சக்குபாயைப் போல் அழுது பார் !
 ராமானுஜரைப் போல் அழுது பார் !
க்ருஷ்ணசைதன்யரைப் போல் அழுது பார் !
துகாராமைப் போல் அழுது பார் !
அன்னமாச்சார்யாரைப் போல் அழுது பார் !
தியாகராஜரைப் போல் அழுது பார் !
ருக்மிணியைப் போல் அழுது பார் !
யசோதையைப் போல் அழுது பார் !
கௌசல்யா தேவியைப் போல் அழுது பார் !

  துருவனைப் போல் அழுது பார் !
ப்ரஹ்லாதனைப் போல் அழுது பார் !
பரீக்ஷித்து ராஜனைப் போல் அழுது பார் !

கோபிகளைப்போல் அழுது பார் !
ராதிகாவைப் போல் அழுது பார் !
குருஜீ அம்மாவைப் போல் அழுது பார் !

விடாது நாம ஜபம் செய் !
உளமாற ப்ரார்த்தனை செய் !

தானாக ஒரு அழுகை வரும் . . .

பிறகு  . . .

பைத்தியக்காரத்தனமாய்
அல்ப விஷயங்களுக்காக
அழவே மாட்டாய் . . .

அந்த நாள் என்றோ ? ! ?

ஏன் அது இன்றாகவே இருக்கட்டுமே . . .

 

Read more...

வெள்ளி, 25 டிசம்பர், 2009

ஹே ராதே !





ராதேக்ருஷ்ணா


ஹே ராதே !
உன்னோடு க்ருஷ்ணனுக்கு
அந்தரங்க கைங்கர்யம்
செய்ய பக்தியைக் கொடுத்துவிடு . . .

ஹே ராதே !
உனக்கும் க்ருஷ்ணனுக்கும்
அலங்காரம் செய்ய
பாக்கியம் தந்துவிடு  . . .

ஹே ராதே !
நீயும், க்ருஷ்ணனும்
உடுத்திக் களைந்த ஆடைகளை
தோய்க்க கட்டளை இடு . . .

ஹே ராதே !
உனக்கும், க்ருஷ்ணனுக்கும்
ஆகாரம் ஊட்டிவிட
அனுமதி கொடு . . .

ஹே ராதே !
நீயும்,க்ருஷ்ணனும்
படுக்கும் படுக்கையை
தயார் செய்ய
கண்ணால் ஜாடை செய்துவிடு . . .

ஹே ராதே !
நீயும் க்ருஷ்ணனும்
படுத்துக்கிடக்க
உங்களுக்கு விசிறி வீச
என்னைக் கூப்பிடு . . .

ஹே ராதே !
உன்னை யாருக்கும் தெரியாமல்
க்ருஷ்ண சங்கமத்திற்கு
அழைத்துச் செல்ல
வாய்ப்பு கொடு . . .

ஹே ராதே !
உன் க்ருஷ்ணனைப் பற்றி
நான் உன்னிடம் குறை கூற
எனக்கு 
சந்தர்ப்பம் கொடு . . .

ஹே ராதே !
உனக்காக
க்ருஷ்ணனிடம் தூது
செல்ல என்னை
உன் சொத்தாக மாற்றிவிடு . . .

ஹே ராதே !
நீயும் க்ருஷ்ணனும்
பேசும் ரஹசிய பேச்சுக்களைக்
கேட்க எனக்கு
தீர்க்கமான காதுகளைக் கொடு . . .

ஹே ராதே !
நீயும், க்ருஷ்ணனும்
விளையாடும் ராசத்தைப்
பார்க்க எனக்கு ப்ரேம
பார்வையைக் கொடு . . .

ஹே ராதே !
உன் வாசனையையும்,
கருப்பனின் வாசனையையும்,
முகர்ந்து திளைக்கும்
சுகத்தை என் மூக்கிற்கு கொடு . . .

ஹே ராதே !
 உன்னையும்,க்ருஷ்ணனையும்,
மடியில் வைத்துக்கொண்டு
தாலாட்டுப் பாட
என் வாய்க்கு சொல்லிவிடு . . .

ஹே ராதே !
உனக்கும்,க்ருஷ்ணனுக்கும்
த்ருஷ்டி சுத்திப் போட
எனக்குப்
பலத்தைக் கொடு . . .

ஹே ராதே !
 உன்னையும்,க்ருஷ்ணனையும்
குளிப்பாட்டி விட
எனக்கு
ஆணையிடு . . .

ஹே ராதே !
நீயும், க்ருஷ்ணனும்
ஊஞ்சலில் ஆட,
அதை ஆட்டும்
ஆனந்தத்தை அளித்துவிடு . . .



ஹே ராதே !
உனக்கும்,க்ருஷ்ணனுக்கும்,
பழங்களையும்,பாலையும்,
எடுத்துக்கொண்டு வருகின்ற
வேலைக்காரியாக
 என்னையாக்கிவிடு . . .

ஹே ராதே !
நீயும்,க்ருஷ்ணனும்
யமுனையில் செல்லும்
ஓடத்தை ஓட்டும் ஓடக்காரியாக
எனக்கு வரம் கொடு . . .

ஹே ராதே !




ஹே ராதே !
உன்னை ஒரு ஜன்மாவில்
வயிற்றில் சுமக்கும்
தாயாக எனக்கு
திவ்யமான கர்ப்பப்பை அளித்துவிடு . . .

ஹே ராதே !
என்றும்,எப்பொழுதும்,எங்கும்,
உன் புகழையும்,
க்ருஷ்ணனின் பெருமையையும்
பாடும் ஒரு பைத்தியமாக
என்னை மாற்றிவிடு . . .

ஹே ராதே !
இன்னும் எத்தனையோ
கேட்க
மனது துடிக்கிறது . . .

உனக்குத்தான்
என்னைத்
தெரியுமே . . .

ஹே ராதா மாதா . . .
என்னை மன்னித்துவிடு . . .
நான் கேட்ட எதற்கும்
எனக்கு தகுதியே கிடையாது . . .
ஏதோ ஆசையில்
உளறிவிட்டேன் . . .

உன்னிடத்தில் இத்தனையும்
சொல்ல இந்த அதம ஜீவனுக்கும்
ஒரு சந்தர்ப்பம் தந்தாயே . . .
அதுவே போதும் . . .

கோடி ஜன்மா
உன்னிடத்தில் நான்
உளறிக் கொட்டியதை
நினைத்தே வாழ்ந்து விடுவேன் . . .

நான் சொன்னதையும்
காது கொடுத்துக் கேட்டாயே . . .

அதுவே உன் கருணையின் பலம் . . .

எனக்குத் தெரியும் . . .
நான் குருஜீ அம்மாவின்
குழந்தை என்பதால் தான்
இதைக் கூட நீ கேட்டாய் . . . 
 
 இப்படி உன்னிடத்தில்
பேசவும்,ப்ரார்த்திக்கவும்,உளறவும்
தகுதியைத் தந்த
என் குருஜீ அம்மாவின்
மனம் நோகாமல் நான் வாழ்ந்தால்
அதுவே எனக்குப் போதும் . . .

அந்த ஒன்றை மட்டும் தா...

 


Read more...

செவ்வாய், 22 டிசம்பர், 2009

ராதே ராதே . . .





ராதேக்ருஷ்ணா


க்ருஷ்ண ப்ரிய ராதே ராதே

ப்ரேம ப்ரிய ராதே ராதே

பர்சானா தேவி ராதே ராதே

ப்ருந்தாவன ராணி ராதே ராதே

ராச லீலா ப்ரிய ராதே ராதே

சுந்தர மோஹன ராதே ராதே

சேவா குஞ்ச ப்ரிய ராதே ராதே

ராதே ராதே ராதே ராதே

ராச லீலா நாயகனின் தேடல்
ராதே  ராதே
  
ராஜாதி ராஜனின் தேவி
ராதே  ராதே

ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ண பக்தி
செய்ய ஆசை !
ராதே !


ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ணனிஷ்டமாக
வாழ ஆசை !
ராதே !


ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ண நாமத்தை
மூச்சுக்காற்றாக 
சுவாசிக்க ஆசை !
ராதே !


ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ணனின்
ஆடைகளை
உடுத்த ஆசை !
ராதே !


ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ணனால்
அலங்கரிக்கப்பட ஆசை !
ராதே !


ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ணனின் ஆலிங்கனத்தை
அனுபவிக்க ஆசை !
ராதே !


ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ணனின் அதராம்ருதத்தை
குடிக்க ஆசை !
ராதே !


ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ணனை
நெஞ்சில் சுமக்க ஆசை !
ராதே !


ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ணனின் மடியில்
தவழ ஆசை !
ராதே !


ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ணனின் கைகளில்
என்னைத் தர ஆசை !
ராதே !


ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ணனுக்கு
அன்போடு அழகான பூக்களால்
அர்ச்சிக்க ஆசை !
ராதே !


ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ணனை
ப்ரேமையில் 
கட்டிப்போட ஆசை !
ராதே !


ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ணனோடு
யமுனையில்
நீந்திக்களிக்க ஆசை !
ராதே !


ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ணனோடு
ஏகாந்தமாக
நிகுஞ்சத்தில்
விளையாட ஆசை !
ராதே !


ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ண
விரஹத்தில் துடிக்க ஆசை !
ராதே !


ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ணனை
மனதிற்குள்
பூட்டிவைக்க ஆசை !
ராதே !


ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ணன்
என்னை ரகசியமாக
அனுபவிக்க ஆசை !
ராதே !


ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
பக்தர்களோடு
க்ருஷ்ணனை 
ரசிக்க ஆசை !
ராதே ! 


ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ண
சரண கமலத்தில்
சரணாகதியடைய ஆசை !
ராதே !


ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ணனின்
வேணு கானத்தில்
மயங்க ஆசை !
ராதே !


ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ணனின்
அன்புக்கு 
அடிமையாக ஆசை !
ராதே !


ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
அகம்பாவமில்லாத
சுத்தமான ப்ரேமையில்
திளைக்க ஆசை !
ராதே !

  
ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
க்ருஷ்ண நாமத்தைக்
கேட்டால்
மேனி சிலிர்க்க ஆசை !
ராதே !


ஹே ராதே !
எனக்கும் உன்னைப் போல்
உச்சத் தலையிலிருந்து
உள்ளங்கால் வரை,
மூச்சுக்காற்றிலிருந்து
உடம்பு வரை,
உள்ளத்திலிருந்து
ஆத்மா வரை, 
 தூக்கத்திலிருந்து
விழிப்பு வரை,
நினைவிலிருந்து
கனவு வரை,
தனிமையிலிருந்து
கூட்டம் வரை,
எங்கும்,எப்பொழுதும்
க்ருஷ்ணனை
காதலிக்க 
ஆசை !

ஆனால்
சத்தியமாக உன்னைப்போல்
ஒரு நாளும்
என்னால்
முடியவே முடியாது !

ஏனெனில் உன்
க்ருஷ்ணன்
சத்தியமாக
தன் 
இதயத்தில்
உனக்கென
தந்த இடத்தை
நிச்சயமாக
யாருக்கும்
தரவே மாட்டான் . . .

அதனால் என்னை
உன்
தாசியாக,
அடிமையாக,
சொத்தாக
ஆக்கிக்கொள் !

அது போதும் . . .

உன் வேலைக்காரியாய்
இருப்பதை விட
க்ருஷ்ண ப்ரேமை
ஒன்றும்
பெரிதுமில்லை...
சுகமுமில்லை...

தேவையுமில்லை... 
 

நான் ராதிகா தாசி
என்ற
ஒன்றிற்கே
உன்
க்ருஷ்ணன்
என்னையும்
கண்டுகொள்வான்  . . .

ஹே ராதே...
க்ருஷ்ணனின்
ஆனந்தவேதமே
நீ தான்
எனக்கு
ஆனந்தவேதம் . . .

தயவு செய்து
இந்த
அதம ஜீவனுக்கு,
தகுதியிருக்கிறதோ
இல்லையோ,
எந்த
ஜன்மத்திலும் உன்
திருவடி அருகில்
மட்டும்
வைத்துக்கொள் . . .


ராதே ராதே ராதே ராதே 
ராதே ராதே ராதே ராதே 
ராதே ராதே ராதே ராதே 
ராதே ராதே ராதே ராதே 
 
 
 
 


Read more...

திங்கள், 21 டிசம்பர், 2009

உன்னால் முடியும் !





ராதேக்ருஷ்ணா

உன்னால் உன் மனதை
வெல்லமுடியும் !

உன்னால் நோயை
வெல்லமுடியும் !

உன்னால் அழுகையை
வெல்லமுடியும் !

உன்னால் பயத்தை
வெல்லமுடியும் !

உன்னால் பைத்தியக்காரத்தனத்தை
வெல்லமுடியும் !

உன்னால் ஆசையை
வெல்லமுடியும் !

உன்னால் அகம்பாவத்தை
வெல்லமுடியும் !

உன்னால் பிடிவாதத்தை
வெல்லமுடியும் !

உன்னால் முட்டாள்தனத்தை
வெல்லமுடியும் !

உன்னால் சோம்பேறித்தனத்தை
வெல்லமுடியும் !

உன்னால் கோபத்தை
வெல்லமுடியும் !

உன்னால் கர்மவினையை
வெல்லமுடியும் !

உன்னால் அவசரத்தை
வெல்லமுடியும் !

உன்னால் அகம்பாவிகளை
வெல்லமுடியும் !

உன்னால் அக்கிரமக்காரர்களை
வெல்லமுடியும் !

உன்னால் சுயநலப் பேய்களை
வெல்லமுடியும் !

உன்னால் மறதியை
வெல்லமுடியும் ! 
 
 உன்னால் சந்தேகத்தை
வெல்லமுடியும் !

உன்னால் சண்டையை
வெல்லமுடியும் !

உன்னால் காமத்தை
வெல்லமுடியும் !

உன்னால் பொய்யை
வெல்லமுடியும் !

உன்னால் அசிங்கத்தை
வெல்லமுடியும் !

உன்னால் அவமானத்தை
வெல்லமுடியும் !

உன்னால் பெருமையை
வெல்லமுடியும் ! 
  
உன்னால் உலகை
வெல்லமுடியும் !

உன்னால் உன்னை
வெல்லமுடியும் ! 
  
உன்னால் வாழ்க்கையில்
வெல்லமுடியும் !

உன்னால் வாழ்க்கையை
வெல்லமுடியும் !

ஏனெனில்
உன்னால் க்ருஷ்ண நாம ஜபம்
செய்யமுடியும் !

உன்னால் க்ருஷ்ணனின் திருவடிகளில்
சரணாகதி செய்யமுடியும் !

உன்னால் க்ருஷ்ணனிடத்தில்
மனதைத் தரமுடியும் !

உன்னால் க்ருஷ்ணனிஷ்டப்படி
வாழமுடியும் !

அதனால்
உன்னால் முடியும் !
சத்தியமாக முடியும் !
நிச்சயமாக முடியும் !

செய்வாய் !!! 
 
 
 

Read more...

நான் ஒரு கோபி !


ராதேக்ருஷ்ணா



நான் ஒரு கோபி !


என் பெயர் !
கோபாலவல்லி . . .

வயது !
க்ருஷ்ணனை விடக் குறைவு . . .


படிப்பு !
 ராதா க்ருஷ்ண ப்ரேமை . . .

எடை !
க்ருஷ்ணனைத் தாங்கும் எடை . . .

உயரம் !
க்ருஷ்ணனுக்குப் பிடித்த உயரம் . . .

குலம் !
தொண்டர் குலம் . . .
 

என் சொந்த ஊர் !
 ப்ருந்தாவனம் . . .

என் தாயார் !
பக்தி தேவி . . .

என் தகப்பனார் !
ஞானம். . .

என் சகோதரி !
வைராக்யம் . . .

என் சகோதரன் !
நாம ஜபம் . . .  

என் தலைவி !
ராதிகாராணி . . .

என் ப்ரிய தோழிகள் !
கோதை,மீரா . . .

பிடித்த விளையாட்டு !
ராசக்ரீடை . . .

என் காதலன் !
அழகன் க்ருஷ்ணன் . . .

பிடித்த விளையாடுமிடம் !
தூய பெருநீர் யமுனைத்துறை . . .

பிடித்த விரதம் !
திருப்பாவை விரதம்

ரசித்துச் சாப்பிடுவது !
ஸ்ரீ க்ருஷ்ண அதராம்ருதம் . . .

பிடித்த நடனம் !
ஸ்ரீ க்ருஷ்ணனின்
பீதக ஆடை உடை தாழும்
நடனம்...

பொழுதுபோக்கு . . .
க்ருஷ்ணனைப் பற்றி
வம்பு பேசுவது...


பிடித்த வேலை . . .
க்ருஷ்ணனுக்குத் தெரியாமல்
வெண்ணையை ஒளிப்பது . . .

பிடிக்காதது !
க்ருஷ்ணன் என்னை
கண்டுகொள்ளாமலிருப்பது  . . .

தெரிந்தது !
க்ருஷ்ணனின் ப்ரேமை . . .

 தெரியாதது !
 க்ருஷ்ணனுக்குத் தெரியாமல்
வெண்ணையை ஒளிப்பது . . . 

தாங்கமுடியாதது !
க்ருஷ்ணனின் பிரிவு . . .

பிடித்த ஆடை . . .
க்ருஷ்ணன் உடுத்துக் களைந்தது . . .

வேண்டியது . . .
க்ருஷ்ணனின் ஆலிங்கனம் . . .

வேண்டாதது . . .
அகம்பாவம் . . .

அவசரத் தேவை !
க்ருஷ்ணனின் ஸ்பரிசம் . . .

அவசியத் தேவை !
க்ருஷ்ணனோடு ராசக்ரீடை . . .

பயப்படுவது !
மமகாரத்திற்கு . . .

பயப்படாதது !
பக்தி செய்வதற்கு . . .

பலம் !
க்ருஷ்ண பக்தி 

பலவீனம் !
 க்ருஷ்ணனின் அழகு . . .

ஆசைப்படுவது !
ராதிகாவின் வேலைக்காரியாக . . .

பிடித்த இசை !
கண்ணனின் குழலோசை . . .

பிடித்த சப்தம் !
ராதிகாவின் செல்லச் சிணுங்கல் . . .

பிடித்த கைங்கர்யம் !
ராதிகாவை அலங்காரம் செய்ய . . .

திருடுவது !
ராதிகா உடுத்திய ஆடையை !

 இரவில் தங்குவது !
சேவா குஞ்சத்தில் . . .

பகலில் தூங்குவது !
பர்சானாவில் . . .

பிடித்த உணவு !
ராதிகா க்ருஷ்ண உச்சிஷ்டம் . . .

பிடித்த மலை !
கோவர்தன கிரி . . .

பிடித்த நதி !
யமுனா . . .

பிடித்த ஊர் !
பர்சானா . . .



விலாசம் !
பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ அம்மா திருமாளிகை . . . 
ராதே க்ருஷ்ணா சத் சங்கம் . . . 




Read more...

சனி, 19 டிசம்பர், 2009

ரகசியமாகச் சொல்வாயா !





ராதேக்ருஷ்ணா

ஆஞ்சனேயா !
ஹனுமந்தா !
வாயுகுமாரா !
வானரோத்தமா !
ராமதாசா !
எனக்கு உன்னிடம்
சில ரகசியங்கள் கேட்க ஆவல் !

உன் காதோரம் சொல்லி
வைக்கிறேன் !

எனக்குப் பக்குவம் வரும்போது
நீ மறக்காமல் சொல்லிவிடு ! 

ஜடாமுடியும், மரவுரியும் தரித்த
வனவாச ராமனின் ழகைக் கண்ட
உன் கண்ணின் சுகத்தை,
 அன்பு ஆஞ்சனேயா ! 
எனக்கு ரகசியமாகச் சொல்வாயா !

மனித வேடம் தரித்த ராமனிடமே,
ப்ரம்மச்சாரி வேடம் தரித்துப் பேசி,ராமனின்
பதிலைக் கேட்ட உன் காதின் சுகத்தை
சொல்லின் செல்வா ஆஞ்சனேயா !
எனக்கு ரகசியமாகச் சொல்வாயா !




ஒரு தோளில் ராமனையும்,
மறு தோளில் லக்ஷ்மணனையும்,
தூக்கிச் சென்ற தோளின் சுகத்தை,
பலசாலி ஆஞ்சனேயா !
எனக்கு ரகசியமாகச் சொல்வாயா !

ராமன் உன்னை அழைத்து,
உன்னிடம் தன் மோதிரம் தந்து,
சீதையிடம் தரச் சொல்ல, அதை வாங்கின
உன் கையின் சுகத்தை,
மாருதிராயா ஆஞ்சனேயா !
எனக்கு ரகசியமாகச் சொல்வாயா !

சீதையைத் தேடி இலங்கைக்குத் தாவ,
"ஜய் ஸ்ரீ ராம்" என்ற நாமத்தை
உரக்கச் சொன்ன உன் நாவின் சுகத்தை
ராமதாசனே ஆஞ்சனேயா !
எனக்கு ரகசியமாகச் சொல்வாயா !

அசோகவனத்தில் சீதா பிராட்டியைக்
கண்ட, அந்த நிமிஷங்களில்,
உன் மனதின் பரமானந்தத்தை,
காதல் தூதனே ஆஞ்சனேயா !
எனக்கு ரகசியமாகச் சொல்வாயா !

ராமனின் வக்ஷஸ்தலத்தில் குடிகொண்ட, 
சீதையிடமே ராமாயணம் பேசின,
உன் திருவாயின் சந்தோஷத்தை,
அசோக ஆஞ்சனேயா !
எனக்கு ரகசியமாகச் சொல்வாயா !

தாயாரையும், பெருமாளையும் பிரித்த
பொல்லா அரக்கனைப் பார்த்த
சமயத்தில் உன் மனதின் கோபத்தை,
ராம தூத ஆஞ்சனேயா !
 எனக்கு ரகசியமாகச் சொல்வாயா !

சீதையை பிரியாத ராமனிடம் 
"கண்டேன் சீதையை"என்று சொல்லி,
 சீதாவின் சூடாமணியைத்தர,
ராமனின் ஆலிங்கனத்தை
அனுபவித்த உன் திருமேனியின் சிலிர்ப்பை,
ராம பத்ர ஆஞ்சனேயா !
எனக்கு ரகசியமாகச் சொல்வாயா !

விபீஷணனுக்காக நீ ராமனிடம் பேச,
உலகிற்கு ராமன் சரணாகதி ரஹஸ்யத்தை
சொன்ன சமயத்தில் உன் கண்ணில்
வழிந்த ஆனந்தகண்ணீரின் சுவையை,
பக்தவத்சல ஆஞ்சனேயா !
எனக்கு ரகசியமாகச் சொல்வாயா !


 ராமனின் தர்ம யுத்தத்தில்,
அழிவேயில்லாத ராம லக்ஷ்மணருக்காக,
சஞ்சீவினி மலையைக் கொணர்ந்த,
வீரம் செரிந்த உன் புஜத்தின் சுகத்தை,
சஞ்சீவினி ஆஞ்சனேயா !
எனக்கு ரகசியமாகச் சொல்வாயா !

தாசரதி ராமனின் வெற்றியை,
சீதையிடம் சொல்லி, அரக்கியரை 
வதம் செய்ய நீ வரம் கேட்க, சீதை
உன்னை கடிந்துகொள்ள,
வேகமாகத் துடித்த உன் இதயத்துடிப்பை,
 ஸ்ரீ ராம ஜய ஆஞ்சனேயா !
எனக்கு ரகசியமாகச் சொல்வாயா ! 
 
பரத்வாஜரின் ஆசிரமத்தில், உன்
பகவான் ஸ்ரீ ராமனோடு ஓரிலையில்,
விருந்து உண்டபோது, புருஷோத்தமனிடம்
தோற்று,காணாமல் போன உன் ஆண்மையின்
பரிதவிப்பை, வீர ஆஞ்சனேயா !
எனக்கு ரகசியமாகச் சொல்வாயா ! 

சக்ரவர்த்தி திருமகனின் பட்டாபிஷேகத்தில்,
உன் இதயத்தில் உலா வந்த உன் ராமனின்
அழகில் கிறங்கிய உன் இந்திரியங்களின்,
குதூகல வைபவத்தை,
அதிசுந்தர ஆஞ்சனேயா !
 எனக்கு ரகசியமாகச் சொல்வாயா !

எல்லோரும் கைங்கர்யத்தைத்
தட்டிப் பறிக்க நினைக்க, அழகன்
கொட்டாவி விடும்போது சொடுக்கு
போடும் கைங்கர்யத்தைச் செய்த,
உன் விரலின் அற்புத பாக்கிய சுகத்தை,
கைங்கர்ய சிகாமணி ஆஞ்சனேயா !
எனக்கு ரகசியமாகச் சொல்வாயா !

   இவையில்லாமல் நீ
அனுபவிக்கும் ராம ரஹஸ்யங்கள்
பலகோடி......
எனக்கு உன் ராமன் வேண்டாம்....
எனக்கு உன் அனுபவம் மட்டும் போதும்....

என் க்ருஷ்ணனை,
என் ராதிகாவை,
நான் அனுபவிக்க,
உன் வினயம் தேவை...
உன் பக்தி தேவை...
உன் த்ருடம் தேவை...
உன் பலம் தேவை...
உன் மனம் தேவை...

அதை நீ எனக்கு ரகசியமாகச்
சொல்லிவிடு....

அது போதும்....

நானும் வானரம் தான்....

ஆனால் உன்னைப்போல்
 நல்ல வானரமில்லை...

உன்னைப்போல்
பக்த
வானரமில்லை....

என் ராதிகா க்ருஷ்ணனுக்கு
சேவா குஞ்சத்தில்
கைங்கர்யம் செய்யும்
ஒரு க்ருஷ்ணவானரமாக,
ராதா சூடாமணியைத் தாங்கி,
 மாட்டுக்காரனிடம்,
"கண்டேன் ராதையை"
என்று சொல்லி ஒரு திருட்டு
ஆலிங்கனம் அடைய
உன்னைப் ப்ரார்த்திக்கின்றேன்  . . .

ராதிகாவும்,
"ஹே கோபால வானரமே!
க்ருஷ்ணனை சீக்கிரம் வரச் சொல்!
என்று தன் காதலை என்னிடம்
சொல்ல,
அதைக் கேட்டு குதித்து,
குட்டிக்கரணம் அடித்து,
ராதிகாவை சிரிக்க வைக்கும்
ஒரு வானரமாக நான்
மாற 
எனக்கு ப்ரேம பக்தியை
க்ருஷ்ணாஞ்சனேயா ! 
ரகசியமாகச் சொல்வாயா !

 
 

Read more...

புதன், 16 டிசம்பர், 2009

மார்கழியே நீ வாழீ !





ராதேக்ருஷ்ணா


மார்கழியே வருக !
க்ருஷ்ண குளிரே வருக !
பனியின் முத்துச்சரமே வருக !


எத்தனை தெய்வங்கள்
வந்தாலும்
எங்கள் க்ருஷ்ணனுக்கு
சமமாகுமோ !
எத்தனை மாதங்கள்
வந்தாலும்
எங்கள் மார்கழிக்கு
ஈடாகுமோ !

வாழ்வில் எத்தனைபேர்
வந்தாலும்
மார்கழியின் வருகை
விசேஷமானதே !

க்ருஷ்ணனே பகவத் கீதையில்
"மாதங்களில் நான் மார்கழி"
என்று சொல்லிப் பரவசப்பட்ட
க்ருஷ்ணரூபியான, கருணையே
குளிரான,தேவி மார்கழியே நீ வாழீ !


கோபிகைகள் க்ருஷ்ணனுக்காக
 விடியற்காலையில், நடுங்கும் குளிரில்,
யமுனையின் கரையில், 
காத்யாயனி விரதம் இருந்த,
தேவி மார்கழியே நீ வாழீ !

கோபிகைகளின் ஆடையைக்
கவர்ந்து சென்று க்ருஷ்ணன்
மரத்திலமர, கோபிகைகளின்
ஆனந்தத்தை அதிகப்படுத்தின,
தேவி மார்கழியே நீ வாழீ !

ராசக்ரீடையை உங்களோடு
ஆடுவேன் என்று ராதிகாவுக்கும்,
கோபிகைகளுக்கும் க்ருஷ்ணன்
சத்தியம் பண்ணிக்கொடுத்த,
தேவி மார்கழியே நீ வாழீ ! 

ஆண்டாள், கோபீ பாவத்தில்,
ஸ்ரீவில்லிப்புத்தூரை, ப்ருந்தாவனமாகப் பாவித்து,திருப்பாவை விரதம் இருந்து,
பகவானையும் துயிலுணர வைக்கும்,
தேவி மார்கழியே நீ வாழீ !

சூடிக்கொடுத்தச் சுடர்கொடியின்,
செங்கனிவாயால், கலியுக அல்ப
ஜீவன்களுக்கும், நாம மஹிமையைச்
சொல்லும் திருப்பாவையைத் தந்த
தேவி மார்கழியே நீ வாழீ !

மும்மதம் அழிய ஒரே வழி,
தொண்டர் தாள் பரவுவதேயென்று,
எல்லோருக்கும் புரிய வைத்த, 
தொண்டரடிப்பொடியாழ்வாரைத்
தந்த தேவி மார்கழியே நீ வாழீ ! 
 
பரந்தாமன் பகட்டுக்கு மயங்கமாட்டான்,
பக்தியில் தன்னையே தருவான் என்பதை
ஏழைக் குசேலன் தந்த அவலைக் கொண்டு
உலகில் நிரூபணம் செய்த 
தேவி மார்கழியே நீ வாழீ !

அம்புப்படுக்கையில் படுத்துக்கிடந்த பீஷ்மர்,
 பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனை சாக்ஷியாக வைத்துக்கொண்டு, தர்மருக்கு
சஹஸ்ர நாமம் சொன்ன
தேவி மார்கழியே நீ வாழீ !

தக்ஷிணாயன புண்ணியகாலத்தில்,
பகவான் அரிதுயிலுணர்ந்து,
எல்லோருக்கும் வைகுண்ட ப்ராப்தி
தருகின்ற வைகுண்ட ஏகாதசி தரும்,
தேவி மார்கழியே நீ வாழீ !

தேவி மார்கழியே !
உன் பெருமையைப் பேச,
ஆயிரம் நா கொண்ட ஆதிசேஷனாலும்
முடியாதே !

அறியாத பிள்ளையின்
மழலை வார்த்தையால்
உன் பெருமையை
உள்ளபடி பேசத்தான் முடியுமோ !

எனக்கு ஆசிர்வாதம் தா !
உன் மடியில் நான்
க்ருஷ்ணனை அனுபவிக்க
எனக்கு திடமான பக்தியைத் தா !

கோபீ பாவம் தா !
ஆண்டாளின் கனவைத் தா !
தொண்டரடிப்பொடியின் அன்பைத் தா !

என் மனம் ப்ருந்தாவனமாக மாற 
க்ருஷ்ண பக்தி தா !
ராதாக்ருஷ்ண பக்தி தா !

மார்கழிக்கு நமஸ்காரம் . . . 


 






Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP