ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 15 நவம்பர், 2009

கோவர்தனமே நீ சொல் !



ராதேக்ருஷ்ணா


கோவர்தனமே நீ சொல் !


ஆஞ்சனேயர் தூக்கிக் கொண்டு
வந்த சமயத்தில் அவர் கைகளில்
இருந்தபோது 
எப்படியிருந்தது . . ?
கோவர்தனமே நீ சொல் !

ஸ்ரீ ராமர் சொன்னார் என்று
இரண்டு யுகங்கள்
நம்பிக்கையோடு காத்திருந்தபோது
எப்படியிருந்தது . . ?
கோவர்தனமே நீ சொல் ! 
  
குட்டிக்ருஷ்ணன் உன்
அடிவாரத்தில் தன்
கோப நண்பர்களுடன்
மாடு மேய்த்தபோது எப்படியிருந்தது . . ?
கோவர்தனமே நீ சொல் !  

 ராதிகாவை தன் ஆசைப்படி
ராச நாயகன் க்ருஷ்ணன்,
உன் குகையில் அலங்கரித்தபோது
எப்படியிருந்தது . . ?
கோவர்தனமே நீ சொல் !

வெண்ணெய்த் திருடன்
உனக்குத் தன் கைகளால்,
கோப கூட்டத்தோடு பூஜை
செய்தபோது எப்படியிருந்தது . . ?
கோவர்தனமே நீ சொல் !

 ப்ரும்மாண்ட நாயகன்
தானே உன்பேரை வைத்துக்கொண்டு,
உன்னைக் கொண்டாடினபோது,
 எப்படியிருந்தது . . ?
 கோவர்தனமே நீ சொல் !

துயரறு சுடரடி தேவாதி தேவன்,
தானே தன் தலை தாழ்த்தி,
உன்னை வந்தனம் செய்தபோது
எப்படியிருந்தது . . ?
கோவர்தனமே நீ சொல் ! 

 கருஞ்சிறுக்கன் உன்னை,
அறிவு ஒன்றும் இல்லாத
கூட்டத்தாரோடு வலம் வந்தபோது
எப்படியிருந்தது . . ?
கோவர்தனமே நீ சொல் !

 7வயது பாலகன் உன்னைத்
தன் சுண்டு விரலில்
கொட்டும் மழையில் தூக்கின போது
எப்படியிருந்தது . . ?
 கோவர்தனமே நீ சொல் !

பகவான் உன்னை தன் கைகளில்
தூக்கிக்கொண்டு நிற்க,பக்தர்கள்
உன் அடிவாரத்தில் நின்ற அந்த
 அற்புதமான 7நாட்கள் எப்படியிருந்தது . . ?
கோவர்தனமே நீ சொல் !

இந்திரன் அகம்பாவ மழையைக் கொட்ட,
பகவான் கருணை மழையை வர்ஷிக்க,
பக்தர்கள் பக்தி மழையைப் பெய்ய,
 ஆனந்தமான 7 நாட்கள் எப்படியிருந்தது . . ?
 கோவர்தனமே நீ சொல் !

ப்ரேம நாயகன் ப்ருந்தாவனத்திலிருந்து
சென்றவுடன், கோபிகைகள்
உன்னிடம் விரஹத்தில் புலம்பினபோது
எப்படியிருந்தது . . ?
கோவர்தனமே நீ சொல் !
   

த்வாபரயுகம் முடிந்து கலியுகம்
தொடங்கி, அற்புதமான
க்ருஷ்ண பக்தர்கள் உன்னை தரிசித்தபோது
எப்படியிருந்தது . . ?
கோவர்தனமே நீ சொல் !

பெரியாழ்வார் உன்னைப்
பார்த்து ப்ரமித்துப் போய்
தன் திருவாயால் உன்னைப்
பாடினபோது எப்படியிருந்தது . . ?
கோவர்தனமே நீ சொல் !
 
 ஸ்வாமி ராமானுஜர்,
தன் பக்தர்களோடு,
உன்னை சேவித்தபோது,
உனக்கு எப்படியிருந்தது . .?
கோவர்தனமே நீ சொல் !

ஸ்ரீமன் மாதவேந்திரபுரி உன் மேல்
கோபால மூர்த்தியை
ப்ரதிஷ்டை செய்தபோது
எப்படியிருந்தது . . ?
கோவர்தனமே நீ சொல் !

   ஸ்ரீ க்ருஷ்ண சைதன்யர்
தன்னை மறந்து, ஆனந்தத்தில்
உன்னை வலம் வந்த
அந்த அற்புதம் எப்படியிருந்தது . . ?
கோவர்தனமே நீ சொல் !

தனது தள்ளாத 90வது வயதிலும்,
சனாதன கோஸ்வாமி,
விடாமல் உன்னை வலம்
வந்தபோது எப்படியிருந்தது . . ?
கோவர்தனமே நீ சொல் !

ஸ்ரீ வல்லபாச்சார்யார்
உன்னுடைய முடி மேல்
ஸ்ரீநாத்ஜீயை ப்ரதிஷ்டை
செய்த சமயத்தில் எப்படியிருந்தது . . ?
கோவர்தனமே நீ சொல் !

அழகு வேசியான ரஞ்சனி
டலை விட்டு தன் ஆத்மாவை 
உன்னுடைய ஸ்ரீநாத்ஜீயோடு 
கலந்தபோது எப்படியிருந்தது . . ?
கோவர்தனமே நீ சொல் !

விட்டலநாதர், உன் ஸ்ரீநாத்ஜீயை
ரஸ்கான் என்கிற முகம்மதியருக்கு
உன் மேல் அழைத்துவந்து
காட்டினபோது, எப்படியிருந்தது . . ?
கோவர்தனமே நீ சொல் !

 ஹரிவ்யாசர் தன் குருவின்
வார்த்தைப்படி உன்னையே
24வருஷம் வலம் வந்தபோது
உனக்கு எப்படியிருந்தது . . ?
கோவர்தனமே நீ சொல் !

பக்த மீரா தன்னுடைய 
ம்ருதுவான குரலால்
உன் க்ருஷ்ணனை, கிரிதாரி என்று
பாடிக்குதித்தபோது எப்படியிருந்தது . . ?
கோவர்தனமே நீ சொல் !

 உன்னுடைய மடியில்
தினம் தினம் மாடுகள் புல்லை மேய்ந்து
ஆனந்தமாய் க்ருஷ்ணனைத் தேடும்போது
எப்படியிருக்கும் . . ?
கோவர்தனமே நீ சொல் !

உன் முடிமேல் மழை மேகங்களைக் கண்டு,
தன் அழகுத் தோகையை விரித்து,
க்ருஷ்ண மயில்கள் ஆடும்போது
எப்படியிருக்கும் . . ?
கோவர்தனமே நீ சொல் !

உன் மடிமேல் இருக்கும் பாறைகளிலிலும்,
மரங்களிலும், ரிஷிகள் குரங்கு வேஷமிட்டு,
தாவிக்குதித்து விளையாடும்போது
எப்படியிருக்கும் . . ?
கோவர்தனமே நீ சொல் ! 
 
  இன்றும் உன்னைக் காணவரும்
பக்தர்கள் அதிசயமாய், ஆச்சரியமாய்,
உன்னை க்ருஷ்ண ப்ரசாதமாக
அனுபவிக்கும்போது எப்படியிருக்கும் . . ?
கோவர்தனமே நீ சொல் !

தினமும் பல பக்தர்கள்,
உன்னிடத்தில் க்ருஷ்ண தரிசனத்தை
வேண்டி, உன்னை ப்ரதக்ஷிணம்
செய்யும்போது எப்படியிருக்கும் . . ?
கோவர்தனமே நீ சொல் !

உன்னைத்தவிர வேறு எதுவும்
தெரியாமல், உனக்குத் திரும்பத்
திரும்ப நமஸ்காரம் செய்து வலம்வரும்போது எப்படியிருக்கும் . . ?
கோவர்தனமே நீ சொல் ! 
 
 உன்னை நம்பி, உன்னை வலம்
வருபவர்களை, வண்டியில் அழைத்துச்
சென்று வலம் வந்து, தன் வாழ்வை
நடத்துபவர்களின் பாக்கியம் எப்படியிருக்கும் . . ?
கோவர்தனமே நீ சொல் !

  இன்னும் எனக்குத் தெரியாத,
கண்டுபிடிக்கமுடியாத, உன் மஹிமைகளை,
ராதாக்ருஷ்ண லீலைகளை,
உன் பக்தர்களின் பக்தியை,
கோவர்தனமே நீ சொல் !
 
எனக்கும் ஒரு ஆசை . . .
உன்னிடம் நான் சொல்கிறேன் . . .

என் மனமும் ஒரு பாறைதான் . . .
நானும் ஒரு கல்தான் . . .

அதை உன் மேல் வைத்துக்கொள்...

என்றாவது ஒரு நாள் கிரிதாரியிடம் சொல்...

இந்தப் பாறையின் மீது 
ராதிகாவோடு ஒரு விசேஷ
ராசக்ரீடை செய்ய இந்த அதம
ஜீவனுக்கு ஒரு சிபாரிசு . . .
கோவர்தனமே நீ சொல் !

உன்னைப்போல் எத்தனை
யுகங்கள் வேண்டுமானாலும்
காத்திருக்கிறேன் . . .

கிரிதாரியிடம் கோவர்தனமே நீ சொல் !

 கிரிதாரியின் கிரிராஜனே
உன்னுள் என்னை வைக்க,
என்னுள் தன்னை வைக்க,
ராதிகாவிடம் கோவர்தனமே நீ சொல் !

   

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP