ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Loading...

Monday, January 16, 2017

செல்வச் செல்ல மகள் !

🍃🖋ஆனந்தவேதம்🍂✍🏻

வங்கக்கடல் கடைந்த
மாதவனாய் கேசவனாய்,
உன்னைச் சொல்லி
உன் நாமத்தை பறைசாற்றினவள்
எங்கள் பூமகள்,திருமகள்,
செல்வச் செல்ல மகள்...

திங்கள் திருமுக கோபியாய்
உன்னைக் கொஞ்சிக் கெஞ்சி,
எல்லோரையும் பாட வைத்து
உனக்கு பெருமை தந்தவள்
எங்கள் பூமகள், திருமகள்,
செல்வச் செல்ல மகள் !

உன்னிடம் பறை வாங்கியதை
உவகையுடன் சொல்லி
வில்லிபுத்தூர் பட்டர் பிரானுக்கும்
உனக்கும் ஏற்றம் தந்தவள்
எங்கள் பூமகள், திருமகள்,
செல்வச் செல்ல மகள் !

சங்கத் தமிழ் மாலை
முப்பதும் தப்பாமே
சொல்லி உன் அருளுக்கு
உலகில் மதிப்பு தந்தவள்
எங்கள் பூமகள், திருமகள்,
செல்வச் செல்ல மகள் !

ஈரிரண்டு தோள்களாகவும்,
செங்கண் திருமுகமாகவும்,
செல்வத் திருமாலாகவும்
உன்னழகைக் கொண்டாடினவள்
எங்கள் பூமகள், திருமகள்,
செல்வச் செல்ல மகள் !

எங்கும் திருவருள் எப்போதும்
எல்லோருக்கும் எல்லா விதத்திலும்
இன்பமும் கிடைக்கும் என்று
உனக்கு அடையாளம் தந்தவள்
எங்கள் பூமகள், திருமகள்,
செல்வச் செல்ல மகள் !

ஒன்றும் தெரியாத எமக்காய்
என்றோ உன்னிடம் பரிந்தாள்,
எமக்காகவே உன்னை அடைந்தாள்,
எங்கள் பூமகள், திருமகள்,
செல்வச் செல்ல மகள் !

பூவுலகில் இருக்கும் எம்மை
வைகுந்தம் ஏற்றிவிட திருப்பாவை
முப்பதும் சொல்லி அருள்
செய்து காவல் காக்கிறவள்,
எங்கள் பூமகள், திருமகள்,
செல்வச் செல்ல மகள் !

எங்கள் பூமகள் எங்கள்
தாய் !
எங்கள் திருமகள் எங்கள்
செல்வம் !
எங்கள் செல்வ மகள் எங்கள்
தெய்வம் !
எங்கள் செல்ல மகள் எங்கள்
வாழ்வு !

எங்கள் செல்ல மகளே,
உனக்காகவே நாங்கள்
பக்தி செய்வோம் !
உனக்காகவே நாங்கள்
நாமம் ஜபிப்போம் !
உனக்காகவே நாங்கள்
கண்ணனைத் தொழுவோம் !
உனக்காகவே நாங்கள்
சரணாகதி செய்வோம் !

எங்கள் செல்வ மகளே !
நீ பாவை விரதம்
இருக்கப்போவது தெரிந்தே,
அன்றே சொன்னான் மாயன்,
மாதங்களில் நான் மார்கழி என்று...

அடுத்த மார்கழி...
யாம் இருப்போமோ ?!
செல்ல மகளை அனுபவிப்போமோ ?!
அப்போதைக்கு இப்போதே
சொல்லிவைத்தோமடி...
உன் திருப்பாவை முழுதும்...

இருந்தால் இங்கே திருப்பாவை...
இல்லை என்றால் அங்கே திருப்பாவை...
நீ எங்கேயோ அங்கே...

© *குருஜீ கோபாலவல்லிதாசர்*

🍃🖋ஆனந்தவேதம்🍂✍🏻

Read more...

Saturday, January 14, 2017

ஸ்ரீவில்லிபுத்தூர் ராசாத்தியடா !

சிற்றம் சிறு காலே
எழுந்தோமடா கோவிந்தா !
வந்து உன்னை
சேவித்தோமடா கோவிந்தா !

பொற்றாமரை அடி
அடைந்தோமடா கோவிந்தா !
போற்றும் காரணம்
கேளாயடா கோவிந்தா !

மாடு மேய்க்கும் குலத்தில்
பிறந்தாயடா கோவிந்தா !
அடிமையான எங்களை
ஏற்கவேண்டுமடா கோவிந்தா !

இன்று பறையென காரணம்
சொன்னோமடா கோவிந்தா !
என்றும், ஏழேழ் பிறவியிலும்
உன்னோடுதானடா கோவிந்தா !

உனக்காகவே நாங்கள்
வாழ்வோமடா கோவிந்தா !
மற்றை நம் காமங்கள்
மாற்றிவிடடா கோவிந்தா !

வேறெதுவும் வேண்டவே
வேண்டாமடா கோவிந்தா !
உன்னிஷ்டமாய் மட்டுமே
வாழவேண்டுமடா கோவிந்தா !

இப்படியெல்லாம் அழகாய்
சொன்னாளடா கோவிந்தா !
எங்கள் வில்லிபுத்தூர்
ராசாத்தியடா கோவிந்தா !

ராச வாழ்க்கை
வேண்டாமடா கோவிந்தா !
ராசாத்தி சொத்தாய் வாழ
வைப்பாயடா கோவிந்தா !

ராசாத்தியின் அந்தப்புரமாக
மனமாகட்டுமடா கோவிந்தா !
ராசம் நீயும் அவளும்
ஆடவேண்டுமடா கோவிந்தா !

Read more...

ஆண்டாளோடு கோவிந்தா !

கறவைகள் பின் செல்வோம் கோவிந்தா,
காட்டில் சேர்ந்து உண்போம் கோவிந்தா !

அறிவே இல்லையே கோவிந்தா,
அறியாத ஆய் குலமே கோவிந்தா !

பிறவிப் புண்ணியமே கோவிந்தா ,
குறையொன்றும் இல்லை கோவிந்தா !

உன் பிறவி எமக்கே கோவிந்தா,
எம் வாழ்வு உனக்கே கோவிந்தா !

குறையே இல்லாத கோவிந்தா,
உறவே நீயானாய் கோவிந்தா!

அறியாத பிள்ளைகள் கோவிந்தா,
சிறு பேர் அழைத்தோம் கோவிந்தா !

சீறி அருளாதே நீ கோவிந்தா,
பறை தாராய் நீ கோவிந்தா !

உனையே நினைத்தாளே கோவிந்தா,
உனையே பாடினாளே கோவிந்தா !

உனையே கேட்கிறோம் கோவிந்தா,
உனையே சரணடைந்தோம் கோவிந்தா !

நீயே தருவாய் கோவிந்தா,
நீங்காத உறவை கோவிந்தா !

ஆண்டாளோடு கோவிந்தா,
ஆண்டாண்டு கோவிந்தா !

Read more...

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP